ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

17-06-2019 11:21 AM

* வாழ்வில் ஒரு முறையாவது காசி யாத்திரை செய்யவேண்டும் என்கிறார்களே..ஏன்? எஸ். ரமணன், குறுக்குத்துறை.

இந்து சனாதனதர்ம வழிபாட்டின் தலையாய திருத்தலம். சிவபெருமானுடைய சடையிலிருந்து பூமிக்கு வந்த கங்கை, காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி வடக்கு நோக்கிப் பாய்கிறது. காசி என்றாலே ஒளி என்று பொருள். ஒளிவடிவான லிங்கமாக சிவபெருமான் தாமே தோன்றிய ஜோதிர்லிங்கத் தலங்களுள் முக்கியமானது. எனவே, எல்லோரும் அவசியம் சென்று கங்கையில் நீராடி தரிசிக்கவேண்டிய தலம். இங்கு  முன்னோருக்கு சிராத்தம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு புண்ணியம் கிட்டும்.

* தீப எண்ணெய் என்றே தனியாக கடைகளில் விற்கிறார்களே. அதை உபயோகிக்கலாமா? பி. ஆனந்த் மல்லிகா, நாகர்கோவில்.

தைல தீபம் அல்லது ஆஜ்ய தீபம் என்றே கூறப்பட்டுள்ளது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் தைல தீபம் எனப்படுகிறது. பசு நெய்யினால் ஏற்றப்படுவது ஆஜ்ய தீபமாகும். இவையன்றி மற்றவை அவ்வளவு சிறப்புடையதல்ல.

* ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள், கார்த்திகைகள் வந்தால் விரதமிருக்க ஏற்றது எது? ஆர். ராகவாச்சாரி, நெல்லை.

 விரதங்களைப் பொறுத்தவரை ஒரு மாதத்தில் இருமுறை வந்தால் இரண்டிலுமே இருக்க வேண்டும்.

* கோயிலுக்கு சென்று வந்ததும் துக்க வீட்டுக்கு செல்ல நேர்ந்தால் என்ன செய்யலாம்? எம். ஸ்ரீதரன், மேக்கரை.

வீட்டுக்கு வந்து பிரசாதங்களை வைத்துவிட்டு துக்கவீட்டுக்கு செல்லலாம். தவறில்லை.

Trending Now: