மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 158

17-06-2019 11:06 AM

‘முடிப்பது கங்கை’ என்னும் திருப்பதிகம் பாடித் துதித்தார். பிறகு சேரமான் பெருமான் நாயனார் உலா விளங்க, அலங்கரித்த ஒரு பெண் யானையின் மீது சுந்தரமூர்த்தியாரை முன்பு ஏற்றி வைத்து அவருக்குப் பின்னால் தாம் ஏறி அமர்ந்து வெண்சாமரை வீசிக்கொண்டு தம் அரண்மனையை நோக்கி வரும் போது, அவ்வூர் வீதிகளின் இரு பக்கங்களிலும் கூடி நின்றவர்களெல்லாம் இந்த உலாக் காட்சியைக் கண்டு, மகிழ்ந்து வாழ்த்தினார்கள். நம் சேரர் பெருமானுக்கு நம்பியாகிய இவர் நல்ல தோழர்!’ என்றார்கள்.

‘நாம் இவரைத் தொழுது பணிவதற்கு முன்பு என்ன தவம் செய்தோமோ?’ என்றார்கள். ‘நமது மலைநாட்டுக்கு இனி பெறவேண்டிய செல்வம் இதைத் தவிர வேறு எதுவுமே  இல்லை’ என்றார்கள். ‘நம் சேரர் பெருமானின் செய்கை வாய்விட்டுச் சொல்லவும் முடியுமோ? பாருங்கள்!’ என்றார்கள். எல்லோரும் பார்த்து பார்த்து பரவசப்பட்டார்கள். மலர்களையும், பொரிகளையும்  பொற்பொடிகளையும் தூவிக்கொண்டே தொழுதார்கள் பலர். மற்றும் பலர் ‘பொன்னித் திருநாடே புவிக்கெல்லாம் திலகம்’ என்று போற்றி துதித்தனர். இவ்வாறு மக்கள் பலவாறு புகழும்படி, சேரமான் பெருமான் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் திருமாளிகையின் மணிவாயிலினுட் புகுந்து, பக்கத்தே இறங்கினார்கள்.

 சேரர் பெருமான் பேரன்போடு சுந்தரரைத் தம் மாளிகையினுள்ளே அழைத்துச் சென்றார். தம் அரியணை மீது நம்பியாரூரரை அமரச் செய்தார். பிறகு அவர் எதிரே நின்று தம் தேவிமார்கள் செம்பொன் கரகம் எடுத்துத்தர, காகத்தின் மணம் மிக்க நன்னீரினால் நம்பியாரூரரின் பாதங்களைக் கழுவி விளக்க முயன்றார். அதைக் கண்ட சுந்தரமூர்த்தி நாயனார் தம் பாதங்களைப் பின்னுக்கிழுத்து ‘இது தகாது’ என்றார். உடனே சேரர் தரையில் விழுந்து வணங்கி, ‘என் அன்பு மிகுதியால் நான் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் மறக்காமல் ஏற்றருளத்தான் வேண்டும்!’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதை மறுக்க முடியாததால் நம்பியாரூரர் தமக்கு சேரர் பெருமான் செய்த பூஜனைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார். பூஜனைகள் முடித்த சேரர் பெருமான், அன்புப் பெருக்கோடு தாமே அவருக்கு திருவமுது படைத்தார். பிறகு அவர் தம் கைகளாலேயே சந்தனம், கஸ்தூரி, நறுமணம் கமழும் பூமாலைகள் முதலியவற்றை சுந்தரருக்குச் சாத்தினார். ஆடல், பாடல், பல்வகை வாத்தியங்கள், விளையாடல்கள், தடாகங்களில் நீர் விளையாடல், சோறு சமைத்து விளையாடல், யானைப் போர் ஆகிய காட்சிகளையும் இனியும் வினோதங்களையும் ஏற்பாடு செய்து, சுந்தரரை மகிழ்வித்து பல நாட்கள் அவருடனேயே மகிழ்ந்திருந்தார்.

 இவ்வாறு பல்வகைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருந்த நம்பியாரூரர், ஒரு நாள் திருவாரூர் தியாகேசப்  பெருமானின் திருவடிகளை சேவிக்க வேண்டுமென்று மிகவும் நினைத்துப் பெருவேட்கை கொண்டு, ‘ஆவியை  ஆரூரானை மறக்கலுமாமே’ என்னும் கருத்துடைய திருப்பதிகத்தைப் பாடினார். பின் அதைக் கண்ட சேரர் பெருமான், அவரது பிரிவாற்றாமையைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் அவரைப் பின்தொடர்ந்து வந்து அவர் முன்னால் குறுக்கிட்டு நின்று ‘இன்று உமது பிரிவைப் பொறுக்க மாட்டேன். என் செய்வேன் நான்’ என்று மனமுருகினார். அவரை நம்பியாரூரர் அன்புடன் நோக்கி, ‘ஒன்றும் நீர் வருந்தாமல் உமது ஊரிலே இருந்து பகைவரை வென்று அரசாண்டு கொண்டு இரும்!’ என்றார்.

சேரர் பெருமானோ ‘எனக்கு உமது திருவடித் தாமரைகளே விண்ணுலக ஆட்சியாகவும், மண்ணுலக ஆட்சியாகவும் இருக்கும்!’ என்று கூறினார். அதற்கு வன்தொண்டரான நம்பியாரூரர் ‘என் உயிருக்கு இன்னுயிரான  திருவாரூர் பெருமானை நாம் மறந்திரேன். இன்னுயிரான பெருமானின் திருவருளால் நீர் அரசாண்டு  கொண்டு இங்கேயே இரும்’  என்று வேண்டினார். அதனால் அவரது திருவாரூர்ப் பயணத்தை தடுக்க மனமில்லாமல் சேரமான் விடைகொடுத்தார். பிறகு தம் அமைச்சர்களை அழைத்து, ‘நேற்று வரையில் கொண்டு வரப்பெற்ற பெருஞ்செல்வங்களையெல்லாம் நம் பண்டாரத்திலிருந்து எடுத்து ஆட்களின் மேலேற்றி உடனே கொண்டு வருக!’ என்று கட்டளையிட்டார். அவர்களும் அவ்விதமே பொற்குவியல்களையும், நவமணிகளையும், ரத்தின ஆபரணங்களையும், ஆடைகளையும் வாசனைத் திரவியங்களின் வகைகளையும் பொதிகளாக்கி, ஆட்களின் மேலேற்றிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். சேரர் பெருமான் அப்பொருட்களையெல்லாம் வன்றொண்டரது பரிசனங்களுக்கு முன்பாகவே நம்பியாரூரருக்குப் பரிசுகளாகக் கொண்டு செல்லும்படி ஏவி அனுப்பிவிட்டு நம்பியாரூரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அவரை நம்பியாரூரராம் சுந்தரர் எதிர் வணங்கி தம் கைகளால் எடுத்து அவரது மலைபோன்ற உயர்ந்த தோள்களைப் பொருந்தத் தழுவி விடை தந்து புறப்பட்டார்.

 நம்பியாரூரர் அங்கிருந்து புறப்பட்டு மலை நாட்டையும் பாலை நிலத்தையும் காட்டாறுகளையும் இன்னும் பல பெரிய காடுகளையும் கடந்து திருமுருகன் பூண்டி ( இது முருகப்பெருமான் பூஜித்த பதிகளுள் ஒன்று.ஆதலால் இப்பெயர் பெற்றது. இது திருப்பூர் நிலையத்திலிருந்து வடமேற்கே அவிநாசி செல்லும் பெருவழியில் சுமார் 7 மைலில் உள்ளது.) பக்கமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிவபெருமான் இவரைக் கண்டு ‘நாம் கொடுக்கும் பொன் பொருட்களை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டிய நம்பிகள், பிறர் கொடுக்கும் பொருட்களைப் பெற்றுக் கொள்வதா? அதை நாம்  பார்த்துக்கொண்டி ருப்பதா?’ என்று எண்ணினாரோ என்னவோ....aTrending Now: