அரசியல்மேடை : என்னதான் தீர்வு?

14-06-2019 02:57 PM

தமிழ்­நாட்­டி­லுள்ள அர­சி­யல் கட்­சி­க­ளில் தொண்­டர்­கள் பலம் கட்­சிக் கட்­ட­மைப்பு, மக்­க­ளின் ஆத­ரவு என்ற நிலை­யில் அண்ணா திமு­கவே கடந்த 48 ஆண்­டு­க­ளாக முன்­னி­லை­யில் உள்­ளது.

1972ம் ஆண்டு, புரட்­சித் தலை­வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் தொடங்­கிய அர­சி­யல் கட்­சி­தான் அண்ணா திமுக. திமு கழ­கத்தை தொடங்கி 2 ஆண்­டு­கள் மக்­க­ளுக்­கான ஆட்சி நடத்­திய அண்­ணா­வின் மறை­வுக்­குப் பிறகு, கட்­சிக்­கும் ஆட்­சிக்­கும் தலைமை பொறுப்­பேற்ற கரு­ணா­நிதி அண்­ணா­வின் கொள்­கை­க­ளில் இருந்து மாறு­ப­டு­கி­றார். ஆட்சி அதி­கா­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்­து­கி­றார் என்ற குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில்­தான் கணக்கு கேட்டு புதிய கட்சி தொடங்­கி­னார் எம்.ஜி.ஆர். அவரை நேசித்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அவ­ரது ரசி­கர்­க­ளும் அனு­தா­பி­க­ளும், பொது­மக்­க­ளும் அவ­ரது அர­சி­யல் கட்­சிக்கு ஆதார பல­மாக நின்­ற­னர். அத­னால்­தான், 1973 திண்­டுக்­கல் இடைத்­தேர்­தல் தொடங்கி தொடர் வெற்­றி­க­ளைப் பெற்­றார். தமி­ழக அர­சி­யல் தேர்­தல் களத்­தில் இது­வ­ரை­யி­லும் இல்­லாத அள­விற்கு, 1977,80,84 ஆகிய ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற சட்­ட­சபை பொதுத் தேர்­தல்­க­ளில் தொடர் வெற்­றி­யைப் பெற்று சுமார் 11 ஆண்­டு­கள் இந்த தமி­ழ­கத்­தில் நல்­லாட்­சியை வழங்­கி­னார் எம்.ஜி.ஆர்.

கொடி பிடிக்­கும் தொண்­டன்­தான் முடிவு எடுக்­க­வேண்­டும் என்ற கொள்­கை­யோ­டு­தான் கட்­சியை வழி­ந­டத்­தி­னார். ஜன­நா­யக ரீதி­யில் கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர்­க­ளால்­தான் கிளைச் செய­லா­ளர்­கள் முதல் பொதுச் செய­லா­ளர் வரை­யி­லும் தேர்­தெ­டுக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற சட்ட விதி­களை உரு­வாக்­கி­னார். அப்­படி எம்.ஜி.ஆர் உரு­வாக்­கிய அண்ணா திமுக, அதே கட்­ட­மைப்­பில் அதே கொள்கை வழி­யில் நடை­போ­டு­கி­றதா என்­பது மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

1972ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை­யி­லும் எம்.ஜி.ஆர் காலத்து அதி­முக, அவர் வகுத்­துத்­தந்த கொள்கை மற்­றும் விதி­மு­றை­படி நடந்­து­வந்­தது. எம்.ஜி.ஆர் மறை­வுக்­குப் பிறகு, 1988,89 ஆம் ஆண்­டு­க­ளில் ஜெ அணி, ஜா அணி என கட்சி பிரிந்து நின்று மிகப்­பெ­ரும் நெருக்­க­டியை சந்­தித்­தது.

1989 முதல் 2016ம் ஆண்டு வரை­யி­லும் அண்ணா திமுக ஜெய­ல­லிதா வசம் இருந்­தது. அந்த காலக்­கட்­டங்­க­ளில், சசி­கலா நட­ரா­ஜன் குடும்­பத்­தி­ன­ரின் ஆதிக்­கம் அதி­க­ரித்­த­தன் விளை­வாக, கட்­சி­யின் நிறு­வ­னத் தலை­வர் அம­ரர் எம்.ஜி.ஆர் புகழ் மறைக்­கப்­பட்டு, கட்­சி­யின் நிர்­வாக அமைப்­பும் திசை­மா­றிச் சென்­றது. இதற்கு, மிகப்­பெ­ரிய உதா­ர­ண­மாக கொளப்­பாக்­கம் நேர்­கா­ணல் சம்­ப­வத்தை சொல்­ல­லாம்.

கிளைச் செய­லா­ளர் முதல் தலை­மைக் கழக நிர்­வா­கி­கள் வரை­யி­லும் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று முடி­வெ­டுத்து, அப்­படி தேர்­தல் நடத்­தப்­பட்­ட­போது, அதில் மாவட்ட நகர ஒன்­றிய அள­வில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நிர்­வா­கி­கள் பெரும்­பா­லா­னோர், ஜா அணி­யில் இருந்து வந்­த­வர்­கள் என்ற கார­ணத்­தைக் காட்டி, சசி அண்ட் கம்­பெனி தங்­கள் ஆத­ர­வா­ளர்­களை பொறுப்­பு­க­ளுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கொளப்­பாக்­கம் பகு­தி­யில் நேர்­கா­ணலை நடத்­தச்­செய்­த­னர்.

இந்த நேர்­கா­ண­லின் மூலம், தமி­ழ­கம் முழு­வ­தும் சசி, நட­ரா­ஜன், தின­க­ரன், திவா­க­ரன், ராவ­ணன், கலி­யப்­பெ­ரு­மாள் உள்­ளிட்­ட­வர்­க­ளால் அடை­யா­ளம் காட்­டப்­பட்ட பல­ரும் பல்­வேறு பொறுப்­பு­க­ளுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். இது­போன்ற நிய­ம­னங்­க­ளால்­தான் தஞ்­சையை சேர்ந்த வி.பி.கலை­ரா­ஜன் போன்­ற­வர்­கள் சென்னை மாவட்­டத்­திற்கு செய­லா­ள­ராக முடிந்­தது.

கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர்­க­ளால் தேர்வு செய்­யப்­பட்ட நிர்­வா­கி­கள் பலர் நீக்­கப்­பட்டு, அதே இடத்­தில் சசி ஆத­ர­வா­ளர்­கள் பலர் பொறுப்­பு­க­ளில் நிய­மிக்­கப்­பட்ட நிலை­கண்டு அதி­மு­க­வின் தொடக்­க­கால நிர்­வா­கி­க­ளும், தொண்­டர்­க­ளும், எம்.ஜி.ஆர் பக்­தர்­க­ளும் கடும் அதி­ருப்­திக்கு ஆளா­கி­னர். இத­னால், அண்ணா திமு­க­வின் அழி­வுப்­பாதை கொளப்­பாக்­கத்­தில் தொடங்­கி­விட்­ட­தாக உண்­மை­யான கட்­சித் தொண்­டர்­க­ளும், எம்.ஜி.ஆர் அனு­தா­பி­க­ளும் குமு­றத் தொடங்­கி­னர்.

கட்­சிக்­காக உழைத்­த­வர்­கள், தியா­கம் செய்­த­வர்­கள், தங்­கள் சொத்து சுகங்­களை இழந்­த­வர்­கள் பல­ரும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வணிக நோக்­கத்­தோடு திடீ­ரென அர­சி­யல் களத்­திற்கு வந்­த­வர்­க­ளுக்கு பத­வி­க­ளும் பொறுப்­புக்­க­ளும் வழங்­கப்­பட்­டன. பணம் இருப்­ப­வர்­கள் மட்­டுமே, கட்­சிப் பத­வி­க­ளுக்கு வர­மு­டி­யும் என்­கிற ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான செயல் அண்ணா திமு­க­வில் அந்த கால கட்­டத்­தில்­தான் அரங்­கே­றி­யது.

தாங்­கள் இட்ட கட்­ட­ளை­யின்­படி அடி­மைச்­சே­வ­கம் செய்­ப­வர்­களை மட்­டுமே தலை­மைக் கழக நிர்­வா­கி­க­ளா­க­வும், மாவட்ட நகர ஒன்­றிய நிர்­வா­கி­க­ளா­க­வும் சசி குடும்­பம் நிய­மித்­த­தன் விளை­வாக கட்சி எம்.ஜி.ஆர் பாதை­யில் திசை மாறிச் செல்­கி­றது என்­பதை உணர்ந்த பலர், அவ்­வப்­போது சசி குடும்­பத்­திற்கு எதி­ராக போர்க்­கொடி தூக்கி தனிக்­கட்சி கண்­ட­னர். சிலர் எதி­ர­ணிக்கு சென்­ற­னர்.

ஆனா­லும்­கூட, எம்.ஜி.ஆர் தொடங்­கிய கட்சி, அவர் கொடுத்த கொடி, அவர் அடை­யா­ளப்­ப­டுத்­திய இரட்டை இலைச் சின்­னம், இவை இருக்­கும் இடத்­தில் நாம் இருப்­போம் என்ற உணர்­வோடு பல லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­க­ளும் நிர்­வா­கி­க­ளும் உள்­ளக் குமு­ற­லோடு அண்ணா திமு­க­வில் தொடர்ந்து இருந்து வந்­த­னர். அந்த கால­கட்­டத்­தில், எம்.ஜி.ஆர் பெயர் இருட்­ட­டிப்பு செய்­யப்­ப­டு­கி­றதே என்ற வேத­னை­யும், அவர்­க­ளின் இத­யத்தை அரித்­துக்­கொண்டே இருந்­தது.

ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பின்­னர், புதிய மாறு­தல் வரும், கட்­சிக்கு மிகச்­சி­றந்த எதிர்க்­கா­லம் இருக்­கும், மீண்­டும் எம்.ஜி.ஆரின் புக­ழும் செல்­வாக்­கும் நிலை­நாட்­டப்­ப­டும் என்று எம்.ஜி.ஆரை நேசித்த பல லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­க­ளும் நிர்­வா­கி­க­ளும் கரு­தி­னர். ஆனால், நிலைமை அவர்­கள் நினைத்­த­படி இல்லை என்­பது வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கி­விட்­டது.

இன்று, கட்­சிப் பொறுப்­பு­க­ளில், ஆட்­சிப் பொறுப்­பு­க­ளில் உள்ள சுமார் 80 சத­வீத பேர், அண்ணா திமு­க­வின் கொள்கை, குறிக்­கோள், அதன் நோக்­கம், இந்த கட்சி எதற்­காக தோற்­று­விக்­கப்­பட்­டது, என்­கிற எந்த விவ­ர­மும் அறி­யா­த­வர்­க­ளா­கத்­தான் இருக்­கி­றார்­கள்.

ஏழை எளிய பாட்­டாளி மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­த­வேண்­டும், இந்த மாநி­லத்தை மேம்­பா­ட­டைய செய்­ய­வேண்­டும், சமூக சமத்­துவ சமு­தா­யத்தை அமைத்­தி­ட­வேண்­டும், உயர்ந்­த­வன் -தாழ்ந்­த­வன், ஏழை - பணக்­கா­ரன் என்­கிற பாகு­பாட்டை நீக்­க­வேண்­டும் என்­கிற நோக்­கத்­தில் எம்.ஜி.ஆர் தொடங்­கிய அண்ணா திமுக இப்­போது இல்லை என்று கரு­தத் தோன்­று­கி­றது.

அண்­ணா­வின் பாதை­யில் இருந்து திசை­மாறி, ஊழ­லில் திளைத்து குடும்ப அர­சி­யல் நடத்­தும் திமு­கவை அர­சி­ய­லில் இருந்து முழு­வ­து­மாக அப்­பு­றப்­ப­டுத்­த­வேண்­டும் என்­ப­தற்­காக தொடங்­கப்­பட்ட அண்ணா திமு­கவை இப்­போது திசை­மாற்றி கொண்­டு­செல்­கி­றார்­களோ என்­கிற அச்­சம் அக்­கட்­சி­யின் அடி­மட்ட தொண்­டன் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏற்­பட்­டுள்­ளது. இதைப்­போக்­க­வேண்­டிய கட்­டா­ய­மும் கட­மை­யும் அண்ணா திமு­கவை இன்று வழி­ந­டத்­தும் கட்­சித் தலை­மைக்கு உண்டு. அதற்கு ஒரே வழி, ஜன­நா­யக ரீதி­யில் கட்­சித் தேர்­தலை தேர்­தல் ஆணை­யம் மூலம் நடத்­து­வதே சரி­யா­ன­தாக இருக்­கும்.

எம்.ஜி.ஆர் காலம் முதல் கட்­சி­யில் உள்ள தொண்­டர்­கள், அனை­வ­ரை­யும் பொது உறுப்­பி­னர்­கள் பட்­டி­ய­லுக்கு கொண்­டு­வந்து, அவர்­கள் அனை­வ­ருக்­கும் வாக்­கு­ரிமை அளித்து, கிளை அமைப்­பில் கிளைச் செய­லா­ளர், தேர்­தல் நடை­பெ­றும்­போதே, பொதுச் செய­லா­ள­ருக்­கும் வாக்­க­ளிக்­கு­மாறு, தனி வாக்­குப்­பெட்­டியை வைத்து, இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் மூல­மா­கவே ஜன­நா­யக ரீதி­யில் அதி­முக உள்­கட்­சித் தேர்­தலை நடத்­தச் செய்­ய­லாம். இதற்­கான செல­வு­களை அதி­முக தலை­மையே ஏற்­க­லாம்.

இது­கு­றித்து, எம்.ஜி.ஆர் கட்­சித் தொடங்­கிய காலம் முதல், இன்று வரை­யி­லும் அண்ணா திமு­க­வில் தொடர்ந்து இருந்­து­வ­ரும் இ.மது­சூ­த­னன், பொன்­னை­யன், பண்­ருட்டி ராமச்­சந்­தி­ரன், பி.எச்.பாண்­டி­யன், சைதை துரை­சாமி, ஜே.சி.டி.பிர­பா­கர் உள்­ளிட்ட முக்­கிய பிர­மு­கர்­கள் கொண்ட உயர்­நிலை கமிட்டி ஒன்றை நிய­மித்து இவர்­க­ளின் வழி­காட்­டு­த­லோடு தேர்­தலை நடத்தி முடித்து சரி­யான தகு­தி­யான ஒற்­றைத் தலை­மையை உரு­வாக்கி, அந்த வழி­யிலே பய­ணப்­பட்­டால்­தான் அண்ண திமு­க­வின் எதிர்­கா­லம் பிர­கா­ச­மாக இருக்­கும் என்­பதே அக்­கட்­சி­யில் உள்ள பல லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­க­ளின் உணர்­வாக கருத்­தாக உள்­ளது.

அதை­வி­டுத்து, கிடைத்­த­வரை ஆதா­யம் என்று கருதி, மீத­முள்ள 2 ஆண்­டு­கள் ஆட்­சியை ஆபத்­தின்றி நடத்­திச்­செல்­ல­லாம் என்ற கண்­ணோட்­டத்­தோடு, அதி­முக தலைமை நிர்­வா­கி­கள் செயல்­ப­டு­வார்­களே ஆனால், அம­ரர் எம்.ஜி.ஆர் தொடங்­கிய இந்த கட்­சி­யின் எதிர்­கா­லம் மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­ரி­ய­தாக ஆகி­வி­டும்.