துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 33

14-06-2019 02:53 PM

சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய, தமிழகத்தை சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றை பார்ப்போம்.

18–ம் நூற்றாண்டில் 1730ம் ஆண்டு ராமநாதபுரத்து மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியரின் ஒரே மகள்தான் வேலுநாச்சியார்.

இளம் வயதிலேயே துடிப்பும், ஆர்வமும், வீரமும், விவேகமும் கொண்டவராக திகழ்ந்த வேலுநாச்சியாரை, மன்னர் தமது ஆண் வாரிசு போலவே வளர்த்தார். அவருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை கற்றுக் கொடுத்ததோடு, பன்மொழி ஆற்றல் உள்ளவராகவும் உருவாக்கினார்.

16 வயதிலேயே, சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாதருக்கு வேலுநாச்சியாரை திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்துக்கு பின் சிவகங்கை பட்டத்து ராணியாக முடிசூடிய வேலு நாச்சியாரும், அவரது கணவர் முத்து வடுகநாதரும் மக்கள் போற்றத்தக்க வகையில் நல்லாட்சி நடத்தி வந்தனர். அந்த ஆட்சிக்கு பக்க துணையாக மந்திரிப் பிரதானி தாண்டவராயப் பிள்ளை மற்றும் மருது சகோதரர்கள் இருந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் சிவகங்கை சீமையை, தங்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர பிரிட்டிஷ் ஆட்சியினர் முயற்சித்தனர்.

அதற்கு மன்னர் முத்து வடுகநாதர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியினர் அவர் மீது பகைமை கொண்டனர். ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால், அவரும் முத்து வடுகநாதர் மீது கோபம் கொண்டிருந்தார். இதனால் எப்படியாவது மன்னர் வடுகநாதரை கொன்று விட திட்டம் தீட்டினர். அதன்படி, மன்னர் இறை வழிபாட்டிற்காக காளையார் கோயில் சென்றபோது நவாபும், ஆங்கிலேயே படையினரும் சதித்திட்டம் தீட்டி, அவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றனர். செய்தி அறிந்து துடித்துப்போன வேலுநாச்சியார் உடனே, தமது பாதுகாப்பு படையினரோடு காளையார் கோயில் நோக்கி, குதிரையில் சென்றார். அங்கே, அவரையும் தாக்கி கொல்ல நவாபின் படை காத்திருந்தது.  

ஆனால், கணவனின் வெண்டுண்ட உடலை கண்ட கோபத்தில், ஆவேசம் அடைந்த நாச்சியார் நவாபு படைகளுடன் போராடி, அவர்களை சிதறி ஓடச் செய்தார். கணவன் முத்து வடுகநாதரும், இளையராணி கௌரி நாச்சியாரும் வெட்டுண்டு கிடந்த கோலத்தைப் பார்த்த வேலு நாச்சியார், கணவனை கொன்றவர்களை பழிவாங்கியே தீர வேண்டும் என சபதம் பூண்டார். இந்த நேரத்தில் சிவகங்கை சீமை நிர்வாகத்தை  நவாபும், ஆங்கிலேய படையும் கைப்பற்றியது. அப்போது அரண்மனையிலிருந்து தப்பிய நாச்சியார் மருது சகோதரர்களின் உதவியுடன் திண்டுக்கல் நகருக்கு சென்றார்.

அங்கிருந்தே, சில ரகசிய திட்டங்களை தீட்டினார். நவாபுக்கும், ஆங்கிலேயே ஆட்சியனருக்கும் பொது எதிரி ஹைதர் அலி. அப்போது திண்டுக்கல் கோட்டை அரண்மனையில் ஹைதர் அலி தங்கியிருப்பதை அறிந்த நாச்சியார். ஆண் வேடம் அணிந்து சென்று அவரைச் சந்தித்தார்.

 தனது கணவர் முத்து வடுகநாதரை நவாபின் படைகளும், ஆங்கிலேய படையினரும் கொலை செய்து நாட்டைக் கைப்பற்றிய செய்தியை மிக சரளமாக உருது மொழியல் ஹைதர் அலியிடம் வேலுநாச்சியார் விளக்கிக் கூறி, தனக்கு அவர் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வேலு நாச்சியாரின் உருது மொழிப் பேச்சை கேட்ட ஹைதர் அலி, அவரிடம் நீண்ட நேரம் உரையாடியதன் மூலம் அவரின் புத்திக் கூர்மையையும், வீரத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைந்ததுடன், அவருக்கு உதவவும் முன் வந்தார்.

திண்டுக்கல், மற்றும் விருப்பாச்சி கோட்டைகளில் தங்கி இருந்த வேலுநாச்சியார், ஹைதர் அலி உதவியுடன் படைகளை திரட்டத் தொடங்கினார்.

சிவகங்கை பிரிவு, திருப்பத்தூர் பிரிவு,  காளையார்கோவில் பிரிவு என்ற மூன்று படைப்பிரிவுகளை வேலுநாச்சியார் உருவாக்கி, சிவகங்கை படைப்பிரிவுக்கு தாமே தலைமை பொறுப்பேற்றார். காளையார் கோவில் பிரிவுக்கு மருது சகோதரர்களும், திருப்பத்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்ற படைவீரரும் பொறுப்பேற்று போர் நடத்தினர்.

1780– ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5–ம் தேதி வேலு நாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.

 ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும், 500 போர் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்த படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழா நடைபெற்றபோது, மக்களோடு மக்களாக உள்ளே புகுந்த நாச்சியார் பெண்கள் படையில் இருந்த குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அதை அழித்தாள்.

இந்த போரின் போது, வெள்ளை யர்களிடம் சிக்கி, தம்மை காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்டு உயிர் நீத்த உடையாள் என்ற பெண்ணின் நினைவாக ‘வீரக்கல்’ ஒன்றை நட்டு வைத்த வேலுநாச்சியார், தனது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாக செலுத்தினார். இந்த இடம்  இப்போது கோயிலாக மாறி கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

தாம் ஏற்ற சபதத்தை நிறைவேற்றும் விதமாக, தமது கணவரை கொன்ற ஜோசப் ஸ்மித், தளபதி பான் ஜோர் ஆகியோரை போரில் வென்ற வேலு நாச்சியார், தமது மகளின் மரணத்தால் மனமுடைந்து இதய நோய்த் தாக்குதலுக்கு ஆளானார். பின்னர் தமது இறுதிக் காலத்தை விருப்பாச்சி அரண்மனையில் கழித்த அவர் 1796ம் ஆண்டு தமது 66வது வயதில் காலமானார்.

18ம் நூற்றாண்டிலேயே அதிக அளவு படை பலமும், நவீன ஆயு தங்களும் வைத்திருந்த ஆங்கிலேயே படைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, தான் ஆண்ட மண்ணை மீட்டெடுத்த வீரமங்கை வேலுநாச்சியார் புகழ், அவரது சிறப்பு என்றும் மறையாது.