புதிய மிளகு ரகத்தை கண்டுபிடித்த ஆதிவாசி விவசாயி

14-06-2019 02:50 PM

கடல் மட்­டத்­தில் இருந்து 2,230 அடி உய­ரத்­தில் உள்­ளது இயற்கை வேளாண்மை பண்ணை. இந்த வேளாண்மை பண்ணை கேரள மாநி­லத்­தில் உள்ள இடுக்கி மாவட்­டத்­தில் அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள பட்­டி­ய­குடி (Patteyakudi) என்ற ஊரில் அமைந்­துள்­ளது. இங்கு காய்­கறி, பழங்­கள், மேற்கு தொடர்ச்சி மலை வனப்­ப­கு­தி­யில் மட்­டுமே விளை­யக்­கூ­டிய பழங்­கள், மூலி­கை­கள், மிளகு உட்­பட பல்­வேறு நறு­மண பொருட்­கள் வளர்­கின்­றன.

இந்த சாத­னைக்கு சொந்­தக்­கா­ரர் பி.ஜி.ஜார்ஜ் (67). இவர் கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக இயற்கை வேளாண்மை முறை­யில் காய்­கறி, பழம் என பல்­வேறு பொருட்­களை விளை­விப்­பது என ஒருங்­கி­னைந்த வேளாண் முறையை கடைப்­பி­டித்து வரு­கி­றார். ஜார்ஜை பொருத்த மட்­டில் விவ­சா­யம் என்­பது அவ­ரது குடும்­பத்­தா­ருக்கு தேவை­யான உணவு போன்ற தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்கோ அல்­லது லாபம் ஈட்­டு­வ­தற்கோ மட்­டும் அல்ல. இவ­ரது சமூ­கத்­தில் பரம்­பரை பரம்­ப­ரை­யாக விவ­சா­யம் செய்து வரு­கின்­ற­னர்.

இவ­ரது கடு­மை­யான உழைப்­பால் பல்­வேறு ரக மிளகு உரு­வாக்­கி­யுள்­ளார். இதில் ஒரு ரக மிள­குக்கு தேசிய கண்­டு­பி­டிப்பு அறக்­கட்­டளை, [National Innovation Foundation (NIF)], கேரளா வேளாண் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ளது. தனக்­கும், தனது சமூ­கத்­தைச் சார்ந்­த­வர்­க­ளுக்­கும் வேளாண்மை என்­பது எந்த அளவு ரத்­த­தில் ஊறிப்­போ­னது என்­பதை ஜார்ஜ் விளக்­கு­கின்­றார்.

“நான் பாலா­வுக்கு அரு­கே­யுள்ள நெடு­வாவு என்ற இடத்­தைச் சேர்ந்த ஆதி­வாசி சமூ­கத்­தைச் சேர்ந்­த­வன். எங்­கள் தொழில் பரம்­ப­ரை­யாக விவ­சா­யம் செய்­வ­தும்,கால்­ந­டை­களை வளர்ப்­ப­துமே” என்­கி­றார் ஜார்ஜ்.

இவ­ருக்கு 16 வயது இருக்­கும் போது பள்­ளிக்­கூ­டத்தை விட்டு நின்­றார். அவ­ருக்கு விவ­சா­யம் செய்­வதை தவிர வேறு எந்த வாய்ப்­பும் இல்லை. ஏழ்­மை­யான இவ­ரது குடும்­பத்­தில் இவ­ரை­யும் சேர்த்து எட்டு குழந்­தை­கள். எட்டு பேருக்­கும் விவ­சா­யம் செய்ய பிரித்­துக் கொடுக்க தேவை­யான நிலம் இல்லை. இது ஜார்ஜ்க்கு பெரும் தடை­யாக இருந்­தது.

“நான் சார்ந்த சமூ­கம் (ஆதி­வாசி) சமு­தா­யத்­தில் ஒதுக்­கி­வைக்­கப்­பட்ட சமூ­கம். எங்­க­ளுக்கு பின்­பு­ல­மாக எந்த அர­சி­யல் கட்­சி­யும் இல்லை. எவ்­வித அர­சின் உத­வி­யும் கிடைக்­க­வில்லை. நான் விவ­சா­யம் செய்ய நிலத்தை தேடி கிடைக்­கா­மல் ஏமாற்­றம் அடைந்­தேன். பிரிட்­டிஷ் ஆட்சி காலத்­தில் இருந்து நூற்­றுக்­க­ணக்­கான ஏக்­கர் நிலங்­கள் தனி­யார் வசம் இருந்­தன. இவற்­றில் தேயிலை தோட்­டங்­கள் இருந்­தது. இந்த நிலத்தை கேட்டு போரா­டும் இயக்­கத்­தில் இணைந்து போரா­டி­னேன். நாங்­கள் கைது செய்­யப்­பட்­டோம். அதே நேரத்­தில் மாநில அரசு இறு­தி­யாக நிலம் இல்­லாத பல­ருக்கு நிலத்தை வழங்­கி­யது. எங்­களை போன்ற ஒதுக்­கி­வைக்­கப்­பட்ட சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­னர். நிலம் கொடுக்­க­வில்லை” என்று ஜார்ஜ் நினைவு கூறு­கின்­றார்.

இந்த சந்­தர்ப்­பத்­தில் ஜார்ஜ்­வுக்கு திரு­ம­ணம் ஆனது. அவர் பட்­டி­ய­குடி ஆதி­வாசி கால­னிக்கு குடி­யே­றி­னார். அங்கு உள்ள ஆதி­வா­சி­கள் மனப்­பூர்­வ­மாக இவரை வர­வேற்­ற­து­டன், அவர்­க­ளுக்கு சொந்­த­மான நிலத்தை விற்­பனை செய்­ய­வும் முன்­வந்­த­னர். ஆனால் அவர்­கள் அந்த நிலங்­க­ளில் எவ்­வித விவ­சா­ய­மும் செய்­ய­வில்லை.

தேயிலை, ரப்­பர் போன்­றவை உய­ர­மான இடத்­தில் வள­ரும், நெல் போன்ற பயிர்­கள் சம­வெளி பகு­தி­க­ளில் வள­ரும். அங்­கி­ருந்த நிலங்­கள் இரண்­டிற்­கும் இடைப்­பட்ட பிர­தே­சங்­க­ளில் அமைந்து இருந்­தது. அதே போல் இங்­கி­ருந்த தட்­ப­வெட்ப நிலை­யும் குளி­ரா­க­வும் இல்­லா­மல் வெப்­ப­மா­க­வும் இல்­லா­மல் இருந்­தது. கேரளா முழு­வ­தும் ரப்­பர், தென்னை, முந்­திரி போன்­றவை பர­வ­லாக வளர்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அங்­கி­ருந்த நிலத்­தில் இவற்­றை­யும் கூட வளர்க்க முடி­யாது. எனது இடை­வி­டாத முயற்­சி­யால் பல்­வேறு ஆராய்ச்­சியை செய்த பிறகு, இங்கு மிளகு மட்­டும் பயி­ரிட முடி­யும் என்­பதை உணர்ந்­தேன்” என்று கூறு­கின்­றார் ஜார்ஜ்.

இவர் மிளகு பயி­ரிட தொடங்­கி­னார். முத­லில் சில முறை வெற்­றி­க­ர­மாக மிளகு பறித்­தார். பிறகு முழு­வ­தும் தோல்­வி­யில் முடிந்­தது.

“அந்த நேரத்­தில் இடுக்கி, வய­நாடு மாவட்­டங்­க­ளில் இடி­யு­டன் கூடிய கன­மழை பெய்­தது. இத­னால் எல்லா ரக மிள­கும் கொடி­யில் இருந்து உதிர்ந்து விழுந்து விட்­டன. எனது பண்­ணை­யில்  தோட்டா முன்டி, நீலி முன்டி என்ற இரண்டு பராம்­ப­ரிய ரக மிளகு தவிர, மற்ற எல்லா ரக மிள­கும் உதிர்ந்து விட்­டன” என்று ஜார்ஜ் விளக்­கி­னார்.

1990ல் பிரே­சில் நாட்­டைச் சேர்ந்த திப்­பாலி மிளகு செடி­யு­டன், தோட்டா முன்டி, நீலி முன்டி மிளகு ரகங்­களை ஒட்டு ரக­மாக இணைத்து ஜார்ஜ், ‘ஜியோன் முன்டி’ என்ற மிளகு ரகத்தை உரு­வாக்­கி­னார். இதில் அதிக அளவு மிளகு உற்­பத்­தி­யா­ன­து­டன், அவ­ருக்கு தேசிய அள­வில் அங்­கீ­கா­ரத்­தை­யும் பெற்­றுத் தந்­தது. இதன் சிறப்பு அம்­சம் என்­ன­வெ­னில் அதிக மக­சூல், நோய் தாங்கி வள­ரும் தன்மை, பெரிய அளவு மிளகு போன்­றவை. ஒரு கொடி­யில் இருந்து 7 கிலோ மிளகு (காய­வைத்­தது) கிடைக்­கும். ஒரு ஹெக்­டே­ருக்கு 7,700 கிலோ மிளகு கிடைக்­கும்.

அதிக மக­சூல் தரும் ஜியோன் முன்டி ரக மிளகு, ஜார்ஜ்க்கு பாராட்­டை­யும், விரு­து­க­ளை­யும் வாங்­கித் தந்­தது. கன்­னூ­ரில் உள்ள கிருஷி விக்­யான் கேந்­தி­ரம், மாநி­லத்­தில் இரண்­டா­வது வேளாண் விஞ்­ஞானி என்ற விருதை வழங்­கி­யது. இதை தொடர்ந்து ஜார்ஜ் மேலும் நான்கு பராம்­ப­ரிய ரக மிள­கு­களை உரு­வாக்­கி­னார்.

இவர் புதிய ரகங்­களை உரு­வாக்­கு­வ­து­டன், அழிந்து வரும் பல பாரம்­ப­ரிய மிளகு ரகங்­களை பாது­காக்­கும் முயற்­சி­யி­லும் இறங்­கி­னார். அவ­ரது மூதா­தை­யர்­க­ளி­டம் இருந்து செடி­கள், மூலி­கை­கள் பற்றி பரம்­ப­ரை­யாக விஷ­யங்­களை அறிந்­தி­ருந்­தார்.  

“இவ்­வாறு பராம்­ப­ரிய மிளகு ரகங்­களை பாது­காத்து வந்த கார­ணத்­தால், இவற்­றில் இருந்து பல புதிய ரக மிள­கு­களை உரு­வாக்க உத­வி­யாக இருந்­தது என்று கூறு­கின்­றார்” ஜார்ஜ். இவ­ரது இடை­வி­டாத முயற்­சிக்கு பலன் கிடைத்­தது. இவர் உரு­வாக்­கிய ஜியோன் முன்டி ரக மிள­குக்கு, 2015ல் ஜனா­தி­பதி தேசிய விருது வழங்கி கௌர­வித்­தார். இது லிம்கா சாதனை புத்­த­கத்­தி­லும், லாகான் சான்­றி­த­ழும் கிடைத்­தது. இந்த மிளகு இந்­திய வேளாண் உல­கத்­தில் அவரை பிர­ப­லப்­ப­டுத்­தி­யது. இவ­ரது வேளாண் பண்­ணை­யில் மிளகு மட்­டுமே பயி­ரி­ட­வில்லை.

“எனது பண்­ணை­யில் நூற்­றுக்­க­ணக்­கான பலா மரங்­க­ளை­யும் வளர்க்­கின்­றேன். இந்த மரத்­தில் மிளகு கொடி படர உத­வி­யாக உள்­ளது. இவ்­வ­ளவு கால­மும் நான் எனது பண்­ணை­யில் பல்­லு­யிர் பாது­காப்­புக்கு பங்­கம் ஏற்­ப­டா­மல் விவ­சா­யம் செய்­கின்­றேன். இத­னால் மண் வளம் பாது­காக்­கப்­ப­டு­கி­றது. நிலத்­தடி நீரும் பாது­காக்­கப்­ப­டு­கி­றது. நான் தேக்கு,ஓக் மரங்­களை வளர்க்­கா­மல் பலா மரம் வளர்க்க கார­ணம்,இது மண்­ணின் தன்­மையை பாது­காக்­கும். அத்­து­டன் பலா பழங்­க­ளும் அதி­க­மாக கிடைக்­கும்” என்று ஜார்ஜ் விளக்­கி­னார்.

“அத்­து­டன் அசோ­கம், கும்­பிலி ஆகிய மருந்­துக்கு தேவைப்­ப­டும் மரங்­க­ளை­யும் மிளகு கொடி படர வளர்க்­கின்­றேன். கேர­ளா­வில் மற்ற விவ­சா­யி­க­ளைப் போல் நான் பூச்சி கொல்லி மருந்து, உரம் ஆகி­ய­வை­களை பயன்­ப­டுத்­து­வ­தில்லை. நாம் இயற்கை வேளாண்­மையை பின்­பற்­று­வ­தால்  சுற்­றுச் சூழ­லை­யும், மண் வளத்­தை­யும் பாது­காக்­கின்­றோம். அத்­து­டன் சென்ற வரு­டம் வெள்­ளம் போன்­றவை ஏற்­பட்ட போதும், பண்­ணையை அழிந்­து­வி­டா­மல் பாது­காத்­தோம்” என்று ஜார்ஜ் கூறி­னார்.

ஜார்ஜ் அவ­ரது பண்­ணை­யில் பசு, ஆடு, முயல், பன்றி, வாத்து, கோழி போன்­ற­வை­க­ளை­யும் வளர்க்­கின்­றார். இவற்­றின் எச்­சங்­க­ளும், மரத்­தில் இருந்து உதி­ரும் இலை போன்­ற­வை­க­ளும் மக்கி உர­மாக ஆகின்­றது. இந்த இயற்கை உரமே, அவ­ரது பண்­ணைக்கு போது­மா­னது. இவ­ரது பண்­ணை­யில் ஐந்து குளங்­கள் உள்­ளன. இந்த குளங்­க­ளில், அலங்­கார மீன், பராம்­ப­ரிய மீன் போன்­ற­வை­களை வளர்க்­கின்­றார்.

“நான் குடும்­பத்­தின் தேவைக்­காக அரிசி மட்­டுமே மற்­ற­வர்­க­ளி­டம் இருந்து வாங்­கு­கின்­றேன். இங்கு நெல் பயி­ரி­ட­மு­டி­யாது. காய்­கறி உட்­பட அனைத்­தும் எனது பண்­ணை­யில் இருந்து கிடைக்­கின்­றன” என்­கின்­றார் ஜார்ஜ்.

நகர்ப்­பு­றங்­க­ளில் வாழ்­ப­வர்­கள் அறி­யாத, வனப்­ப­கு­தி­யில் மட்­டும் விளை­யும் பல பழங்­கள், இவ­ரது பண்­ணை­யில் உள்­ளன. “இந்த  பழங்­கள் அனைத்­தும் மருத்­துவ குணம் கொண்­டவை. இவை உடல் ஆரோக்­கி­யத்­திற்கு சிறந்­தது” என்­கின்­றார் ஜார்ஜ்.

ஜார்ஜ் மனைவி பெயர் ரசீல். இந்த தம்­ப­திக்கு ஐந்து குழந்­தை­கள் உள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ரும் இந்த இயற்கை வேளாண் பண்­ணையை உரு­வாக்­கு­வ­தில் ஆரம்­ப­கா­லம் முதல் இணைந்து கஷ்­டப்­பட்­டுள்­ள­னர். வரு­டத்­திற்கு இவ­ரது பண்­ணை­யில் இருந்து ஐந்து முதல் ஆறு குவிண்­டால் (1 குவிண்­டால்=100 கிலோ) மிளகு கிடைக்­கின்­றது. “இயற்கை வேளாண்­மை­யில் உற்­பத்தி செய்­யும் மிள­குக்கு, கேர­ளா­வில் பெரிய அள­வில் வர­வேற்பு இல்லை.  இதை விற்­பனை செய்­வ­தால் பெரிய அளவு வரு­வாய் கிடைக்­காது. அதே நேரத்­தில் குடும்­பத்தை பேணு­வ­தற்­கும், பண்­ணையை பரா­ம­ரிப்­ப­தற்­கும் போதிய வரு­வாய் கிடைக்­கின்­றது” என்று கூறு­கின்­றார் ஜார்ஜ்.

எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு எதை­யா­வது கூற விரும்­பு­கின்­றீர்­களா என்ற கேள்­விக்கு ஜார்ஜ் பதி­ல­ளிக்­கை­யில், “ நிச்­ச­ய­மாக, பள்ளி கூடம், கல்­லூரி, வேளாண் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் இருந்து மாண­வர்­கள், எனது பண்­ணைக்கு சுற்­றுச் சூழல் பாதிக்­காத இயற்கை வேளாண்மை பற்றி அறிய வரு­கின்­ற­னர். பள்­ளிக் கூடத்­தில் படிக்­கும் போதே, இளம் சந்­த­தி­யி­ன­ருக்கு விவ­சா­யத்தை பற்றி கற்­பித்­தால், இவர்­கள் சுற்­றுச் சூழலை பாது­காப்­ப­தில் முக்­கிய பங்­காற்­று­வார்­கள். இது பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் சிறந்­தது என்று நிறைவு செய்­தார் ஜார்ஜ்.

நன்றி: பெட்­டர்­இந்­தியா இணை­ய­த­ளத்­தில் எம்.பி.ஜெயஸ்ரீ உத­வி­யு­டன், எஸ்.லட்­சுமி பிரியா.