இது உங்கள் இடம்!

13-06-2019 03:41 PM

 கிரிவல பாதை சரிசெய்யப்படுமா?

கடுகுமலையில் கிரிவலம் 25 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. கிரிவலம் செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. இச்சாலையில் செல்லும் பக்தர்கள் நடக்க முடியாமல் ஆங்காங்கே நின்று செல்கின்றனர்.

அதுமட்டுமல்ல, கழுகுமலையில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தினமும் நுாற்றுக்கு மேற்பட்டோர் இச்சாலை வழியாகத்தான் மலையை சுற்றி வருகிறார்கள். இச்சாலை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புதிதாக அமைக்க காலதாமதம் ஆகும் என்றால், காலையில் தார் ஊற்றி ஒட்டு போட்டால் ஓரளவுக்கு பக்தர்கள் நிம்மதிய டைவார்கள். எனவே, இதை செய்ய அதிகாரிகள் மனது வைக்க வேண்டும்.

– சு. ஆறுமுகம், கழுகுமலை.

மெனு கார்ட் அளிக்கலாம்!

ஒரு சிறு ஆலோசனை. பிறந்த நாள் விழா, பூப்புனித நீராட்டு விழா, புது மனை புகுவிழா, திருமணம் நிச்சயம் செய்யும் விழா போன்ற விழாக்கள் நடைபெறும் பொழுது விழா நடத்தும் வீட்டினர் விழாவில் கலந்து கொள்ளும் நடுத்தர வயதை தாண்டிய விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் காலை டிபனுக்கும், இரவு டிபனுக்கும் தனித்தனியாக மெனு கார்டு அளிக்க வேண்டும். ஏனென்றால், விருந்தினர்கள் அந்த கார்டை பார்த்து தங்கள் உடலுக்கு தகுந்த உணவை தகுந்த பதார்த்தங்களை மட்டும் பரிமாற செய்து சாப்பிடலாம். எல்லா பதார்த்தங்களையும் வாங்கி வீணாக்க வேண்டாமே!

– வி. திலகம், திருநெல்வேலி.

சின்ன சிரத்தை, தவிர்க்கும் குழப்பம்...!

திருமணம், சடங்கு போன்ற விழாக்களில், மொய் செய்யும் பணத்தை, கவரில் போட்டு தருகிறார் கள். அதில் சின்ன சிரத்தை எடுத்தால் குழப்பங்களை தவிர்க்கலாம். ஒரு திருமண வரவேற்பில் மொய் பணக் கவர்களை பெரிய பையில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

கவனமின்றி வைத்திருந்தால் பாதி கவரிலிருந்து பணம் வெளியே வந்து வெறும் கவர்களாக இருந்தால், யார் எவ்வளவு செய்தார்கள் என மணமக்கள் வீட்டா ரால் அறிய முடியவில்லை. மொய் செய்பவர்கள் கவரின் வெளியே பணத்தின் மதிப்பை குறித்து தரலாமே... அல்லது லேசான செல்லோ டேப்பால் பணம் வெளியே வராதபடி ஒட்டித் தரலாமே... சின்ன விஷயம்தான்... டென்ஷன் வராமல் தவிர்க்கும்.

– என். கோமதி, பெருமாள்புரம்.

***

தாமிரபரணியை பாதுகாப்போம்!

தாமிரபரணி வற்றாத ஜீவநதி. நெல்லை, துாத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷமாக உள்ளது. சுத்தமல்லி அருகில் உள்ள கருங்காடு, நரசிங்கநல்லுார் பகுதிகளில் உள்ள நதிக்கரைகளில் அசுத்தம் செய்து வருகிறார்கள்.

ஆறுகளில் பழமையான துணிமணிகள், குப்பைகள் கூட கலந்து விடுகின்றன. தாமிரபரணி ஆற்றை துாய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும். வருங்காலத்தில் தாமிரபரணி ஆறுதான் வற்றாத ஜீவநதியாக வரும் என்பதில் சந்தேகமில்லை.

– ப. மணிபாரதி, நெல்லை.Trending Now: