திண்ணை 16–6–19

13-06-2019 03:39 PM

எழுத்தாளர், வாமனன் எழுதிய, 'திரைக் கவிஞர்கள் 2000 வரை' நுாலிலிருந்து: திரைப்பட கவிஞர், வாலியின் பாடல் திறமையில் வியந்து, நிறைய வாய்ப்புகளை தர ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர்.,

இந்நிலையில், ஒருநாள், ஒளிப்பதிவு கூடத்திற்கு வந்த, எம்.ஜி.ஆர்., வாலியிடம், 'உங்களிடம் தனியா பேசணும்...' என்றார். வெளியில் இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்து சென்றவர், 'வாலி... உங்களால் எனக்கு ஒரு தர்ம சங்கடமான நிலைமை...' என்றார்.

'என்னண்ணே?'

'நீங்க ஸ்டுடியோவுக்கு வரும்போது, நெத்தியிலே, வீபூதி, குங்குமம் இட்டுக்காம வந்தா தேவலை. இதற்கு காரணம் இருக்கிறது. கட்சியில் உள்ள கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவுக்கு புறம்பாக உள்ள வீபூதி, குங்கும ஆசாமியை ஆதரிப்பது சரியா என, பலர் முணுமுணுக்கின்றனர்...' என்றார்.

ஆனால், வாலியும் மாறவில்லை; பிறகு, எம்.ஜி.ஆரும் இதை கண்டு கொள்ளவில்லை.

பிரபல சினிமா கவிஞரான, மருதகாசி, கிராம முன்சீப்பாக இருந்தவர்; அத்துடன், பாடல்களும் எழுதி வந்தார். 1947ல், கருணாநிதி எழுதி, நடித்த, ஒரே முத்தம் நாடகத்திற்கு, ஒரு பாடல் எழுதினார்.

நாத்திக கருத்துடன் அந்த பாடல் இருந்தது கண்டு ரசித்த, கருணாநிதி, 'பாடல் எழுதியவரை கூப்பிடுங்கள்...' என்றார்.

நெற்றியில் வீபூதி பட்டை, கதராடை அணிந்திருந்தவரை பார்த்தவுடன், ஐயர் என தெரிந்தது. அவரை கண்டு சிரித்த, கருணாநிதி, 'நீங்கள் தான் இந்த பாட்டை எழுதியவர் என்றால், அடித்து விடப் போகின்றனர்...' எனக் கூறி, அந்த பாடலை ஏற்றுக் கொண்டார்.

இதே சமயம், நாடக மேடையில், மந்திரி குமாரி நாடகத்தையும் நடத்திக் கொண்டிருந்தார், கருணாநிதி.

இதை பார்த்த, மருதகாசி, சேலம், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரிடம், 'கருணாநிதியை அழைத்து, மந்திரி குமாரி நாடகத்தை, அவரின் கதை வசனத்திலேயே படமாய் எடுங்கள்...' என்றார்.

இந்த படத்திற்கு, மருதகாசி எழுதிய பாடல்களில் ஒன்றான, திருச்சி, லோகநாதன் - ஜிக்கி பாடிய, வாராய்... நீ வாராய்... போகும் இடம் வெகு துாரம் இல்லை... நீ வாராய்... இன்று வரை பிரபலம்.

'கலைமகள்' இதழ், முன்னாள் ஆசிரியரும், ஆன்மிக சொற்பொழி வாளருமான, கி.வா.ஜ.,வுக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய்.

ஒரு சமயம், ஜெமினி ஸ்டுடியோ, வாசன், கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவ்வையார் பட கதை இலாகாவில் கலந்து கொண்டார். சில நாட்களிலேயே, அவருக்கு பிடிக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.

திரைப்பட தயாரிப்பாளர் வேலுமணி, கி.வா.ஜ.,விடம், இரண்டு படங்களுக்கு, பாடல் எழுதி தரும்படி கேட்டபோது, மறுக்காமல், நம்ம வீட்டு தெய்வம் மற்றும் அபிராமி அந்தாதி படங்களுக்கு பாடல்கள் எழுதி கொடுத்ததுடன், சினிமா உலகிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டார்.

ஜெயகாந்தனை, ஒரு பிரபல எழுத்தாள ராக நமக்கு தெரியும். ஆனால், அவர், சில சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார்.

பாதை தெரியுது பார் என்ற படத்திற்காக, இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அதில், தென்னங்கீற்று ஊஞ்சலில்... என்ற பாடல் பிரபலம். சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்திற்கும், இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார்.

***