பெண்கள் இப்போதே தெரிந்து கொள்ள வேண்டியது – குட்டிக்கண்ணன்

13-06-2019 01:42 PM

பெண்­க­ளின் பாது­காப்பு பற்றி இப்­போது பர­வ­லா­கப் பேசப் படு­வது வர­வேற்க வேண்­டிய விஷ­யம். ஆனால், பெண்­க­ளின் பொரு­ளா­தா­ரப் பாது­காப்பு இன்­ன­மும் பேசாப் பொரு­ளா­கவே இருந்து வரு­கி­றது. அதை­யும் பெண்­கள் அறிந்து கொள்­ள­வேண்­டி­யது காலத்­தின் கட்­டா­யம். பெண்­கள் அறியவேண்­டிய முக்­கிய விவரங்களை சொல்­கி­றார் பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ணன்.

‘உங்க குடும்­பத்­தின் நெட் வொர்த் என்ன?’

‘நெட் வொர்த்தா? அப்­ப­டீன்னா?’

‘குடும்­பத்­தின் மாதச் சேமிப்பு எவ்­வ­ளவு?’

‘அதெல்­லாம் என் கண­வ­ருக்­குத்­தான் தெரி­யும்.’

‘சேமிப்பை எப்­படி முத­லீடு செய்­கி­றீர்­கள்?’

‘என் கண­வர்­தாங்க அதெல்­லாம் பாக்­க­றார்.’

‘உங்க கண­வ­ருக்கு எவ்­வ­ளவு ஆயுள்­காப்­பீடு இருக்கு?’

‘தெரி­ய­லீங்க. எல்.ஐ.சி-யில ஏதோ பாலிசி எடுத்­தி­ருக்­கார். என் பேர்ல, பிள்­ளைங்க பேர்­ல­கூட இருக்கு. மத்த விவ­ர­மெல்­லாம் அவ­ருக்­குத்­தான் தெரி­யும்.’

‘சரி, உங்க வங்­கிக் கணக்­கின் ஆன்­லைன் பாஸ்­வேர்டு தெரி­யுமா?’

‘தெரி­யாது. அவர் சொல்­ல­வும் இல்லை. எனக்­கும் கேக்­க­ணும்னு தோணலை.’ இந்­தி­யா­வில் பெரும்­பா­லான பெண்­க­ளின் நிலை இது­தான். இவர்­க­ளி­டம் கேட்க இன்­னொரு கேள்­வி­யும இருக்­கி­றது.

‘எதிர்­பா­ரா­வி­த­மாக கண­வ­ருக்கு  ஏதே­னும் அசம்­பா­வி­தம் நேர்ந்­து­விட்­டால், உங்­கள் பிள்­ளை­கள் தலை­யெ­டுக்­கும்­வரை அடுத்த 15 முதல் 20 ஆண்­டு­க­ளுக்கு எப்­ப­டிக் குடும்­பம் நடத்­து­வது? யோசித்­துப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா?’ இந்த கேள்­வி­யையே பெண்­கள் அப­ச­கு­ன­மாக நினைத்­துப் பத­று­வார்­கள். பின்­னர் இதற்கு விடை காண முயற்சி செய்­வது எப்­படி?

இந்த சம்­ப­வம் சில ஆண்­டு­க­ளுக்கு முன் நடந்­தது, பெங்­க­ளூ­ரில் வசித்த ஒரு தம்­பதி.  மனைவி சார்ட்­டர்ட் அக்­க­வுன்­டன்ட், கண­வர் மென்­பொ­ருள் நிபு­ணர். படித்த இந்த பெண்­ம­ணி­யும்­கூட மற்­ற­வர்­க­ளைப்­போ­லவே தன் குடும்­பத்­தின் நிதி நிர்­வா­கத்­தில் பங்­கெ­டுக்­க­வில்லை. ஒரு­நாள் திடீ­ரெ­னக் கண­வர் விபத்­தில் இறந்­து­போக, மனை­வி­யின் உல­கமே தலை­கீ­ழாக மாறிப்­போ­னது. வீட்­டுக் கட­னுக்­குத் தவணை கட்­டும் வங்­கிக் கணக்கு பற்­றிய விவ­ரம் அவ­ரி­டம் இல்லை. வங்­கிக் கணக்­கு­கள் ஜாயின்ட்­டாக இல்­லா­த­தால், அவற்­றை­யும் அவ­ரால் உட­ன­டி­யாக ஆப­ரேட் செய்ய முடி­ய­வில்லை. திரு­ம­ணத்­துக்கு முன்­னரே எடுக்­கப்­பட்ட காப்­பீட்­டில், இறந்­து­போன மாமி­யார் பேர் நாமி­னி­யாக இருந்­தி­ருக்­கி­றது. எல்லா பாஸ்­வேர்­டு­க­ளும் சேமித்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த லேப்­டாப் விபத்­தில் உருக்­கு­லைந்­து­விட்­டது. நட்­டாற்­றில் நிற்­பது போலா­கி­விட்­டார் அந்­தப் பெண்.

ஒரு­வேளை இப்­ப­டி­யொரு நிலை வந்­தால் அதைச் சமா­ளிக்­கத் தேவைப்­ப­டும் அனைத்து விவ­ரங்­க­ளை­யும் பெண்­கள் அறிந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம். இதைப் பற்றி பெண்­க­ளி­டம் வலி­யு­றுத்­து­வ­தைப்­போ­லவே, ஆண்­க­ளி­ட­மும் பேச வேண்­டி­யுள்­ளது. பெண்­க­ளின் பொரு­ளா­தா­ரப் பாது­காப்­புக்கு ஆண்­க­ளும் பெண்­க­ளும் செய்ய வேண்­டி­யவை இவை­தாம்.

பொரு­ளா­தார ரீதி­யாக ஆணைச் சார்ந்­தி­ருக்­கும் ஒவ்­வொரு பெண்­ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்­பீடு) எடுக்க வைக்க வேண்­டும். அவ­ரது ஆண்டு வரு­மா­னத்­தின் 15 மடங்­கா­வது காப்­பீட்­டுத் தொகை இருக்­கு­மாறு பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.

காப்­பீடு குறித்­துத் திட்­ட­மி­டும்­போது பெண்­க­ளும்  இருப்­பது அவ­சி­யம். தேவை­யற்ற பாலி­சி­க­ளைத் தவிர்த்­தல், விண்­ணப்ப விவ­ரங்­களை ஒன்­றுக்கு இரண்டு முறை சரி­பார்த்­தல், நாமி­னி­யா­கத்தன்னை நிய­மிக்­கச் சொல்லி வலி­யு­றுத்­து­தல், நாமி­னி­யின் விவ­ரங்­க­ளைச் சரி­யாக எழு­து­தல் (பெயர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகி­யவை பெண்­க­ளின் கடமை.

எங்­கெல்­லாம் ஜாயின்ட் ஓனர்­ஷிப் சாத்­தி­யமோ (வங்­கிக்­க­ணக்கு, அசை­யும், அசை­யாச் சொத்­து­கள் அனைத்­தும்) அவை­யெல்­லாம் இரு­வர் பெய­ரி­லும் இருக்­கு­மாறு பார்த்­துக்­கொள்­ளுங்­கள். அப்­படி இல்­லா­விட்­டா­லும், குறைந்­த­பட்­சம் என்­னென்ன சேமிப்­பு­கள்/முத­லீ­டு­கள் உள்­ளன, அவற்­றைக் கண­வ­ரின் ஆயு­ளுக்­குப் பிறகு எப்­படி வாங்­கு­வது என்­ப­தைத் தெளி­வா­கக் கேட்­டுத் தெரிந்து கொள்­ளுங்­கள். இதில் தவறோ, சென்ட்­டி­மென்டோ எது­வும் இல்லை.

உயில் இன்­றி­ய­மை­யா­தது. தெள்­ளத் தெளி­வாக யார் யாருக்கு என்­னென்ன சேர வேண்­டும் என உயி­லில் எழுதி கையெ­ழுத்­திட்டு சாட்­சிக் கையெ­ழுத்­து­க­ளோடு வையுங்­கள். உயில் பல பிரச்­னை­க­ளுக்­குத் தீர்­வாக இருக்­கும். உயிலை எழு­து­ப­வர் அவர் வாழ்­நா­ளில் எத்­தனை முறை வேண்­டு­மா­னா­லும் அதை மாற்றி எழு­த­லாம். ஒரு­முறை எழு­தி­விட்­டால் கன்ட்­ரோல் போய்­வி­டும் என்று அவர் பயப்­ப­டத் தேவை­யில்லை.

பிள்­ளை­கள் எவ்­வ­ளவு நல்­ல­வர்­க­ளாக இருந்­தா­லும், மனை­வி­யையே நாமி­னி­யா­க­வும் வாரி­சு­தா­ர­ரா­க­வும் எழு­துங்­கள். மனை­வி­யைப் பிள்­ளை­க­ளின் தய­வில் விட்­டு­வி­டா­தீர்­கள்.

வங்­கிக்­க­ணக்கு, செல்­போன் அக்­க­வுன்ட் லாகின், இ-மெ­யில் லாகின் உள்­பட அனைத்து பாஸ்­வேர்­டு­க­ளை­யும் இரு­வ­ரும் அறிந்த ஓரி­டத்­தில் (லேப்­டாப், நோட்­புக்) சேமித்து வையுங்­கள். ஒவ்­வொரு முறை பாஸ்­வேர்டு மாற்­றும்­போ­தும் தவ­றா­மல் அதில் அப்­டேட் செய்­து­வி­டுங்­கள்.

கண­வன், மனைவி இரு­வ­ரும் உப­யோ­கிக்­கும் செல்­போன்­கள் பரஸ்­ப­ரம் மற்­ற­வர் பெய­ரில் இருந்­தால் நல்­லது. திடீ­ரென ஒரு­வ­ருக்கு ஏதே­னும் விப­ரீ­தம் என்­றால் மற்­ற­வர் அந்த போன் நம்­ப­ரைத் தொடர்ந்து உப­யோ­கிக்க இய­லும். செல்­போ­னில் வரும் ஓடிபி இல்­லா­மல் வங்­கிக் கணக்கு, இணை­யப் பணப்­ப­ரி­வர்த்­தனை என எதி­லும் பாஸ்­வேர்டு மாற்­று­வது கடி­னம்.

பெரும்­பா­லான தளங்­க­ளில் பாஸ்­வேர்டு ரெக்­க­வ­ரிக்கு சில கேள்வி பதில்­கள் இருக்­கும். அவற்­றி­லி­ருந்து  10 கேள்­வி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து, இரு­வ­ரு­மா­கச் சேர்ந்து அவற்­றுக்­கான பதில்­களை உள்­ளீடு கொடுத்து வையுங்­கள். அவற்­றை­யும் பாஸ்­வேர்டு ஷீட்­டில் சேமித்து வையுங்­கள். ஒரு­வேளை ஏதோ ஒரு தளத்­தின் பாஸ்­வேர்டு தெரி­யா­விட்­டா­லும் இவற்­றின் மூலம் பாஸ்­வேர்ட்டை மாற்ற இய­லும்.

குழந்தை பிறப்­புக்­குப் பின் குடும்ப நிர்­வா­கி­யாக மாறும் பெண்­கள், குழந்­தை­கள் ஓர­ளவு வளர்ந்து முழு­நே­ரப் பள்­ளிக்­குச் செல்ல ஆரம்­பித்த பின்­னர் மீண்­டும் வேலை­வாய்ப்பு தேட வேண்­டும். பகுதி நேர­மா­கவோ, வீட்­டி­லி­ருந்தோ செய்­யும் வாய்ப்­பு­கள் இன்று எல்லா துறை­க­ளி­லும் பெரு­கி­யி­ருக்­கின்­றன. அவற்றை பற்­றிப் பெண்­கள் யோசிப்­ப­தும் முக்­கி­யம். அமெ­ரிக்­கா­வில் விவா­க­ரத்து ஆகும்­போது (திரு­ம­ணத்­துக்கு முன்பே ஒப்­பந்­தம் போட­வில்­லை­யென்­றால்) இருக்­கும் சொத்­து­கள் அனைத்­தும் கண­வன் மனை­விக்­குப் பிரித்து வழங்­கப்­ப­டும், அது­நாள் வரை யார் எவ்­வ­ளவு சம்­பா­தித்­தார்­கள் என்ப தெல்­லாம் பொருட்­டே­யில்லை. இப்­ப­டிப்­பட்ட தீர்க்­க­மான விதி­கள் இந்­தி­யா­வில் இல்­லாத நிலை­யில் பெண்­கள் தமக்­கென சேமித்­தல் அவ­சி­யம். மேலே சொன்­னாற்­போல ஜாயின்ட் வங்­கிக் கணக்கு வைத்­துக்­கொள்­ள­லாம். அல்­லது பெண்­கள் தங்­க­ளுக்­கென ஒரு வங்­கிக் கணக்­குத் தொடங்கி அதில் குடும்­பத்­தின் சேமிப்­பில் பாதியை வைக்­க­லாம்.

விபத்­தும் உயி­ரி­ழப்­பும் எப்­போது வேண்டுமானா­லும் யாருக்கு வேண்­டு­மா­னா­லும் நிக­ழ­லாம். நம் குடும்­பத்­தில் நிக­ழா­த­வரை பேரி­ழப்­பும் வெறும் புள்­ளி­வி­வ­ரமே. ஒரு­வேளை நம் குடும்­பத்­தில் அது நிகழ்ந்­தால் அடுத்து என்ன செய்­வது என்­ப­தை­யா­வது பெண்­கள் அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும். சரி­தானே?" என்­றார்.Trending Now: