ஷிகார் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்; இங்கிலாந்துக்கு உடனே புறப்பட உத்தரவு

12-06-2019 05:43 PM

நாட்டிங்காம் (பிரிட்டன்),

விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவார் என்று இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 9ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாட் கம்மிஸ் வீசிய பந்து பட்டு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானின் இடது கை கட்டை விரலில் பட்டது.
இருப்பினும் வலியை பொறுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடிய ஷிகர் தவான் சதமடித்தார். மொத்தம் 117 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு ஆட்ட நாயகன் பட்டம் அளிக்கப்பட்டது.
அதன் பின் அவரது கட்டை விரலை பரிசோதித்த மருத்துவர்கள் விரல் எலும்பில் கீறல் விழுந்துள்ளதாகவும் அதனால் அவர் மூன்று வாரங்கள் விளையாடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து உலக கோப்பை விளையாட்டில் இருந்து ஷிகர் தவான் விலகினார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் சேர்க்கப்படுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஷிகர் தவானின் நிலையை பிசிசிஐ மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து இங்கிலாந்தில் தங்க வேண்டும் அவரது முன்னேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தற்போது வரை அவருக்கு மாற்றாக வேறொரு வீரரை நியமிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ கேட்கவில்லை. ஒருவேளை ஷிகர் தவானால் விளையாட முடியாது என்பது உறுதியானால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாளை இந்திய அணி நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது. உலக கோப்பை விளையாட்டில் தற்போதயை நிலவரப்படி அதிக புள்ளிகள் பெற்று நியூசிலாந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Trending Now: