‘பிட்’ நோட்­டீஸ் நோட்டு!

12-06-2019 04:42 PM

என் வயது, 84; மதுரை, பசு­மலை உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1951ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்­துக் கொண்­டி­ருந்­தேன். அப்­போது, லார்­பி­யர் என்ற கிறிஸ்­துவ மிஷி­னரி எங்­கள் பள்­ளி­யின் சேர்­மே­னாக இருந்­தார்.

ஒரு நாள், நன்­னெறி பாடம் நடத்­திக் கொண்­டி­ருந்த போது, ஒரு மாண­வன், 'பிட் நோட்­டீஸ்'களை, நோட்டு புத்­த­க­மாக தைத்து, அதில் குறிப்­பெ­டுத்து கொண்­டி­ருந்­தான்.

லார்­பி­யர் விசா­ரித்த போது, மதுரை சித்­திரை திரு­வி­ழா­வில், தான் சேக­ரித்த, 'பிட் நோட்­டீஸ்'கள், அவை­யென்­றும், 'வெற்­றுப் பக்­கங்­களை வீண­டிப்­பா­னேன்...' என்று, அவற்றை தைத்து குறிப்­பே­டாக பயன்­ப­டுத்­து­வ­தாக கூறி­னான்.

மறு­நாள், பிரார்த்­தனை கூட்­டத்­தில் அந்த மாண­வனை அழைத்து, முன்­னி­றுத்தி, 'பிட் - நோட்­டீஸ்' புத்­த­கத்தை உயர்த்தி காட்­டி­னார்.

'பயன்­ப­டுத்­தக் கூடிய பொருட்­களை வீண­டிக்­கா­மல் பயன்­ப­டுத்த வேண்­டும்...' என்று, மாண­வர்­க­ளுக்கு அறி­வுரை கூறி, அந்த மாண­வ­னைப் பாராட்டி, அந்த காலத்­தில் பெயர் பெற்ற, 'பிளாக் பேர்ட்' என்ற பேனாவை, அன்­ப­ளிப்­பாக அளித்­தார் லார்­பி­யர்.

பள்­ளிப் படிப்பு, முடிந்து, 45 ஆண்­டு­க­ளுக்­குப் பின், பள்­ளி­யின், 150ம் ஆண்டு விழா­வில், பழைய மாண­வர்­கள் பலர் பங்­கேற்­றோம்.

அப்­போது, 'கோட் - சூட்'டுடன் ஒரு­வர் மேடை­யே­றி­னார். மதுரை, திரு­மங்­க­லத்­தில் பிறந்து, கர்­நா­டக மாநி­லம், பத்­ரா­வதி நக­ரில், பெரும் தொழி­ல­தி­ப­ராக திகழ்ந்­தார்.

பாக்­கெட்­டி­யி­லி­ருந்து, கலை நயம் மிக்க, ஒரு பேழையை எடுத்து, அதில், தான் பத்­தி­ர­மா­கப் பாது­காத்து வரும் பேனாவை காட்டி, 'பிட் நோட்­டீஸ்' நோட்டு புத்­த­கத்­திற்­காக, தன்­னைப் பெரு­மைப்­ப­டுத்தி, லார்­பி­யர் பரி­ச­ளித்­ததை, கண்­ணீர் மல்க கூறி­னார். அனை­வ­ரும் அப்­ப­டியே அதிர்ச்­சி­யில் உறைந்து, நெகிழ்ந்­தும் போனோம்; அந்­தச் சிக்­க­னம் நண்­பனை எந்த அள­விற்கு உயர்த்­தி­யுள்­ளது என்­பதை அறிந்து வியந்­தோம்!

–- க.ராமையா, மதுரை.