மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 157

10-06-2019 03:57 PM

அங்குள்ள இறைவனை நம்பியாரூரர் வணங்கிப் போற்றி, ‘சிந்த நீ நினை என்னோடு’ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். அங்கிருந்தவாறே திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று வணங்கி, மீண்டும் காளையார் கோயிலுக்கும் வந்து, இறைவனை வழிபட்டு,  அருள் விடைபெற்று, குன்றுகளையும் காடுகளையும் கடந்து சோழநாட்டை அடைந்தார்.

 நம்பியாரூரர், சேரருடன் சோழ நாட்டிலுள்ள திருப்பாம் பணிமா நகரத்துத் திருப்பாதாளீஸ்வரம் கோயிலை அடைந்து இறைவனை வணங்கிவிட்டு இடைவழியிலுள்ள பல பதிகளையும் தொழுது கொண்டு மிக விரைவாகத் திருவாரூரை அடைந்தார். திருவாரூர் பெருமக்கள் சேரமான் பெருமான் நாயனாரோடு வரும் சுந்தரமூர்த்தி நாயனாரை பெருவிருப்பத்தோடு எதிர்கொண்டு வரவேற்றனர். சுந்தரர், திருக்கோயிலுக்குச் சென்று, இறைவனை வணங்கிவிட்டுச் சேரமான் பெருமான் நாயனாரையும் அழைத்துக் கொண்டு தம் துணைவியான பரவையாரின் மாளிகையை நோக்கி பரிசனங்களோடு சென்றார். பரவையார் ஆர்வத்தோடு தம் மனை அலங்கரித்து தன் கணவரையும் கணவரின் தோழரையும் வரவேற்று வணங்கி, பலவிதமான காய்கறி போஜனங்களோடு திருவமுது சமைத்து பகல் விளக்கு ஏற்றி, விருந்து பரிமாறினார். மங்கலமான பூஜைகளும் செய்தார்.

 அவர் மாளிகையிலேயே நம்பியாரூரரோடு சேர மன்னர் தங்கியிருந்தார். பூஜாகாலங்கள்தோறும் திருவாரூர் கோயிலிலுள்ள இறைவனை தரிசித்து வழிபட்டுக்கொண்டும், நிறைச் செண்டு வீசுதல், பரிச்செண்டு வீசுதல் ஆகிய நல்ல விளையாட்டுக்களை விரும்பி விளையாடி மிக மகிழ்ந்தும், ஆட்டுக்கடாக்களின் பாய்ச்சல், கோழிச்சண்டை, வேறு பல பறவைகளின் சண்டைகள் முதலியவற்றைக் கண்டுகளித்தும், சேரமான் பெருமான் நாயனார் திருவாரூரில் பல நாட்கள் தங்கியிருந்தார். இவ்வாறு, சுந்தரரும், சேரரும் பெருவிருப்பத்தோடும் நட்போடும் திருவாரூரில் இருக்கும்போது, சேர பெருமான் தம் நாட்டிற்கு சுந்தரரை வரும்படி இரவும் பகலும் வேண்டிக் கொண்டிருந்தார். பிறகு சுந்தரர், சேரரின் விருப்பத்திற்கிணங்கிப் பாவையாரின் இசைவைப் பெற்று திருவாரூர் இறைவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சேரநாட்டிற்குப் புறப்பட்டார்.

 சேரர் பெருமானும், சுந்தரரும் காவிரி நதியில் தென்கரை வழியாகச் சென்று, வணங்கிக் கொண்டு, திருக்கண்டியூரை அடைந்து இறைவனை பணிந்து சென்றார்கள். அப்பொழுது காவிரியின் வடகரையிலுள்ள திருவையாறு எதிரிலே தோன்றியது. சுந்தரர், தமது உடலும் உள்ளமும் உருக, உச்சியில் மேல் கைகளைக் குவித்துக் கொண்டு, கடல் போலப் பெருகிச் செல்லும் காவிரியைக் கடந்து ஐயாற்றுப் பெருமான் திருவடிகளை  வணங்குதற்கு ஆசை கொண்டார். அப்பொழுது சேரர், சுந்தரரை வணங்கி, ‘நாம் இந்த ஆற்றைக் கடந்து சென்று இறைவனை  வணங்குவோம்’ என்றார். அதற்கு நம்பியாரூரர் காவிரியாற்றின் வெள்ளம் இரு கரைகளையும் அழித்து நீந்த முடியாதபடியும், ஓடங்கள் செல்ல முடியாதபடியும் பெருகுவதைக் கண்டு, இறைவன் திருவடிகளை நினைத்து  ‘பரவும் பரிசு ஒன்றறியேன்’ என்று தொடங்கி திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ஐயாருடைய அடிகளோ?’ என்று பெரும் வேட்கையோடு அழைத்து திருப்பதிகத்தைத் தென்கரையிலிருந்தபடியே பாடியருளினார்.

 அப்பொழுது சிவபெருமான், தனது கன்றானது தடைபட்டு எதிர் நின்று கூப்பிட்டு அழைக்க, அதைக் கேட்டுக் கதறி கனைக்கும் தாய்ப்பசுவைப் போல, ஒன்றிய உணர்வினாலே, சராசரங்களெல்லாம் கேட்கும்படியாக ‘ஓலம்’  என்று கூவியருளினார். உடனே காவிரி நதியும் பிரிந்து வழிகாட்டியது. மிகவும் பெருகி ஓடிய காவிரியாற்றின் வெள்ளமானது மேலைத் திசையில் பளிங்கு மலையைப் போல் தங்கி நிற்க, கீழ்த்திசையிலுள்ள நீர் வழிந்த இடைவெளியில் நல்ல வழியை உண்டாக்கி, மணலை பரப்பியிடக் கண்ட அடியார்கள், பெருமகிழ்ச்சி கொண்டனர். சேரர் சுந்தரரை வணங்கினார். சுந்தரர், சேரரை வணங்கினார்.  ‘இது தேவதேவர் உமக்குச் செய்த திருவருளன்றோ’ என்று சேரர் கூற இருவரும் கூடிமகிழ்ந்து ஆற்று வெள்ளத்தினூடேயுள்ள தமது பரிசனங்களோடு தாமும் சென்று வடகரையில் ஏறித் திருக்கோயிலினுள், சென்று பஞ்சநதேஸ்வரரைப் பணிந்து துதித்தார்கள். பிறகு அவர்கள் அங்கிருந்து திரும்பி, காவிரியாற்றில் முன்னர் தாம் வந்த வழியாகவே தென்கரையிலேறியவுடன் மலைபோல் தேங்கி நின்ற ஆற்று வெள்ளத்தில் நீரானது முன்போல் விரைந்து தொடர்ந்து பெருகி ஓடியது. அதைக் கண்டு சுந்தரரும் சேரரும் வியந்து இறைவன் திருவருளை நினைத்து வணங்கிவிட்டு மேலத்திசையை நோக்கி புறப்பட்டுச் சென்று வேறு பல சிவத்தலங்களையும் தொழுது வணங்கிக் கொண்டு, கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தார்கள்.

மலைநாட்டு மக்கள், தமது மன்னர் பெருமானும், அவருடைய தோழராகிய தம்பிரான் தோழரும். தமது நாட்டிற்கு வருவதையறிந்து பெருமகிழ்ச்சி கொண்டனர். அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக ஊரெங்கும் பந்தல்களையமைத்து, வழிகளெங்கும் தோரணங்களைக் கட்டினர். வீடுகள்தோறும் அகிற்புகை எழுப்பினர். நிலங்களெங்கும் பொன்மழை பெய்தாற்போல் பூக்களைப் பரப்பினர். இவ்வாறு மலைநாடு முழுவதும் அழகுடன் விளங்கியது. எல்லாத் திசைகளிலும் அமைச்சர்களோடு சேனைகள் நிறைந்து வந்தன. குதிரைப்படைகளின் வெள்ளமும் யானைப்படைகளின் வெள்ளமும் அலங்காரமான பெண்களின் வெள்ளமும் எங்கும் நிறைந்தன. இத்தகைய காட்சிகளைக் கண்டவாறே நம்பியாரூரரும், சேரமான் பெருமானும் கொடுங்கோளூரை அடைந்தார்கள்.

அவர்களை வரவேற்பதற்காக நகர மாந்தர் நகர் முழுவதையும் அலங்கரித்திருந்தார்கள். கோட்டை வாயிலில் அலங்காரத் தோரணங்கள் ஆடிச்சிரித்தன. ஆடலரங்குகளில் மகரக் குழைகள் அணிந்த மங்கையர் ஆடிப்பாடினர். சேரர் பெருமான் நேரே தமது ராஜமாளிகைக்குச் செல்லாமல், நம்பியாரூரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலுக்குள் சென்றார். நம்பியாரூரரான சுந்தரமூர்த்தி நாயனார் அங்கு இறைவனை வணங்கினார்.