வென்றது பாக்., வீழ்ந்தது இங்கி.,: ஜோ ரூட், பட்லர் சதம் வீண்

04-06-2019 01:40 AM


நாட்டிங்காம்:

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி பெற்றது. 348 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பட்லர் சதம் அடித்த போதும் பரிதாப தோல்வியை சந்தித்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

நாட்டிங்காமில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து இங்கிலாந்து மோதியது. இங்கிலாந்து அணி துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. அதே நேரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. எனவே நேற்றைய போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக அமைந்தது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு டையே துவங்கிய இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன், பீல்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஜோடி துவக்கம் கொடுத்தது. வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரி அடித்தார் பகர் ஜமான். மறுபக்கம் வோக்ஸ் ஓவரில் தன் பங்கிற்கு தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார் இமாம். இந்த ஜோடியின் அதிரடி கைகொடுக்க பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன் எடுத்த போது, பகர் ஜமான் (36), மொயீன் சுழலில் சிக்கினார். இதன் பின் அணியின் ரன் வேகம் குறைந்தது. மீண்டும் மிரட்டிய மோயீன் அலி, இமாமை (44) வெளியேற்றினார். பாபர் ஆசம், முகமது ஹபீஸ் இணைந்தனர். ரஷித் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த பாபர் ஆசம், 13வது அரைசதம் எட்டினார். ஹபீஸ் 14 ரன்னில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜேசன் ராய் கோட்டை விட்டார்.

வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஹபீஸ், இங்கிலாந்து பவுலர்களுக்கு வில்லன் ஆனார். ரஷித் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்தார் ஹபீஸ். இந்நிலையில் மீண்டும் பந்தை சுழற்றிய மோயீன் அலி, இம்முறை பாபர் ஆசமை (63) அவுட்டாக்கினார். உட் பந்தில் பவுண்டரி அடித்த ஹபீஸ், 38வது அரைசதம் கடந்தார். இவர் 84 ரன்னுக்கு அவுட்டானார். பாகிஸ்தான் அணி 45.3வது ஓவரில் 300 ரன்களை எட்டியது. கேப்டனுக்கு உரிய பொறுப்புடன் விளையாடிய சர்பராஸ், 11வது அரைசதம் அடித்தார். இவர் 55 ரன் எடுத்து வோக்சிடம் பிடி கொடுத்தார். வகாப் ரியாஸ் (4), சோயப் மாலிக் (8) ஏமாற்றிய போதும், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், மொயீன் அலி தலா 3, மார்க் உட் 2 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷதாப்கான் பந்தில் ஜேசன் ராய் (8) ஆட்டமிழந்தார். சற்றே அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் (32) வகாப் ரியாசிடம் வீழ்ந்தார். இந்த நிலையில், ஜோ ரூட்டுடன் கேப்டன் மார்கன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். ஹபீஸ் ‘சுழலில்’ கேப்டன் மார்கன் (9) சிக்கினார். முதல் போட்டியின் கதாநாயகன் ஸ்டோக்ஸ் (13) வெளியேற இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 47 பந்தில் அரைசததம் அடித்தார். இவருக்கு துணையாக விளையாடி பட்லர் 34 பந்தில் அரைசதம் விளாச சரிவிலிருந்து இங்கிலாந்து மீண்டது. தவிர, 31.5 ஓவரிலேயே இங்கிலாந்து 200 ரன் கடந்தது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 97 பந்தில் சதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இருந்தும் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. முக்கிய கட்டத்தில் ஷதாப்கான் திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் ஜோ ரூட் 107 ரன் (104 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தது. அடுத்து மொயீன் அலி களம் வந்தார். 10 ஓவரில் 91 ரன் தேவைப்பட்டது. அசத்தலாக விளையாடிய பட்லர் 75 பந்தில் சதம் அடித்தார். இவர் 103 ரன் (76 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து முகமது ஆமிர் வேகத்தில் சரிந்தார். அடுத்து வோக்ஸ் களம் வந்தார். 46.2 ஓவரில் இங்கிலாந்து 300 ரன் எடுத்தது.

கடைசி கட்டத்தில் பாக்., பவுலர்கள் சிறப்பாக பந்து வீசகனர். மொயீன் அலி (19), வோக்ஸ் (21) வெளியேற 2 ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. ஆர்ச்சர் (1) சொதப்பினார். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோற்றது. அடில் ரஷித் (6), மார்க் உட் (6) அவுட்டாகாமல் இருந்தனர். பாக்., தரப்பில் வகாப் ரியாஸ் 3, முகமத ஆமிர், ஷதாப்கான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.Trending Now: