கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 182

03-06-2019 04:10 PM

சுமலதா பார்லிமென்ட்டுக்கு போனார்!

நாற்­பது வரு­டங்­க­ளுக்கு முன், ‘திசை மாறிய பற­வை­கள்’ என்ற தமிழ்ப் படத்­தில் அறி­மு­க­மான நடிகை சும­லதா,   இந்த ஆண்டு நடந்த 17வது இந்­திய பார்­லி­மென்ட்­டின் ஒரு அங்­கத்­தி­ன­ராக, கர்­நா­ட­கத்­தின் மண்­டியா தொகு­தி­யி­லி­ருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்.

அவ­ரு­டைய தேர்வு சினி­மாவை விட சுவா­ரஸ்­ய­மான அதி­ர­டி­க­ளு­டன் நடந்­தி­ருக்­கி­றது. சும­ல­தா­வின் கண­வர் அம்­ப­ரீஷ் இறந்­து­போன பிறகு, அவர் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மண்­டியா தொகு­தி­யில்,   காங்­கி­ர­சின் வேட்­பா­ள­ரா­கத்­தான் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று சும­லதா விரும்­பி­னார். மண்­டி­யா­வின் மக்­கள் அதை விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

ஆனால் காங்­கி­ரஸ், மதச்­சார்ப்­பற்ற ஜனதா தளம் ஆகி­ய­வற்­றின் கூட்­ட­ணி­யின் தொகுதி பங்­கீட்­டில், மண்­டியா ம.ஜ.தவிற்கு அளிக்­கப்­பட்­டது. கர்­நா­டக முதல்­வர் குமா­ர­சா­மி­யின் மகன் நிகில் அங்கே நிறுத்­தப்­பட்­டார். சுயேச்சை வேட்­பா­ள­ரா­கக் களம் இறங்­கிய சும­ல­தா­விற்கு பா.ஜ. ஆத­ரவு தெரி­வித்­தது. கூட்­டணி நிர்ப்­பந்­தங்­களை மீறி சில காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளும் தொண்­டர்­க­ளும் சும­ல­தா­விற்கு ஆத­ர­வாக செயல்­பட்­டார்­கள்.

மாநில அரசு செய்த கெடு­பி­டி­களை மீறி­யும், சினிமா நடி­கை­யான தன் மீது வீசப்­பட்ட அப­வா­தங்­களை மீறி­யும், முன்­னாள் பார­தப் பிர­த­மர் தேவ கவு­டா­வின் பேர­னும், இந்­நாள் கர்­நா­டக முதல்­வ­ரு­மான குமா­ர­சா­மி­யின் குமா­ர­னு­மா­கிய நிகிலை மண்­டி­யா­வில் மண்­ணைக் கவ்­வச் செய்­து­விட்­டார் சும­லதா! இந்த அள­வில் தன்னை மண்­டி­யா­வின் வீராங்­க­னை­யாக நிரூ­பித்­து­விட்­டார்.

மண்­டி­யா­வின் மாவீ­ரர் (‘மண்­டி­யாதே கண்டு’) என்று அழைக்­கப்­பட்ட நடி­கர் அம்­ப­ரீஷை சும­லதா காத­லித்­துக் கைப்­பி­டித்­த­போது இந்த உறவு நிலைக்­காது என்று கூறி­ய­வர்­கள் பலர். அழ­கி­களை அம்பு வைத்து குறி வைப்­ப­வர் என்று பெயர் பெற்­றி­ருந்த அம்­ப­ரீஷ், தன்­னு­டைய 39வது வய­தில் சும­ல­தாவை 1991ல் ரக­சி­ய­மாக மணம் செய்­தார். அப்­போது சும­ல­தா­விற்கு 28 வயது. இரண்டு வரு­டங்­க­ளில் அவர்­க­ளின் ஒரே மக­னான அபி­ஷேக் பிறந்­தான்.

அதற்கு ஒரு சில வரு­டங்­க­ளில், சரி­யா­கக் கூற வேண்­டும் என்­றால் 1996ல், அம்­ப­ரீ­ஷின் அர­சி­யல் பிர­வே­சம் நடந்­தது. தேவ­க­வுடா எதிர்­பா­ரா­த­வி­த­மாக நாட்­டின் பிர­த­மர் பத­விக்கு உயர்ந்­த­தும், அவர் ராஜி­னாமா செய்த தொகு­தி­யி­லி­ருந்து அம்­ப­ரீஷை நிற்க வைத்­தார். ஆனால் தோல்­வி­தான் மிஞ்­சி­யது. அதன் பிறகு மண்­டியா தொகு­தி­யில் நான்கு முறை வேட்­பா­ள­ராக நின்று, மூன்று முறை வென்­றார் அம்­ப­ரீஷ். மன்­மோ­கன் சிங்­கின் அர­சில் மத்­திய அமைச்­ச­ரா­க­வும், கர்­நா­டக அர­சில் அமைச்­ச­ரா­க­வும் இருந்­தார்.

நவம்­பர் 2018ல் அம்­ப­ரீஷ் இறந்­த­போது, ‘‘அற்­பு­த­மான மனி­தர், என்­னு­டைய பெஸ்ட் பிரண்டு’’ என்று ரஜி­னி­காந்த் தன்­னு­டைய இரங்­க­லைத் தெரி­வித்­தார். மண்­டி­யா­வின் மைந்­த­னைக் குறித்து அந்­தத் தொகு­தி­யின் மக்­க­ளும் அப்­ப­டித்­தான் நினைத்­தார்­கள் போலும். அம்­ப­ரீ­ஷின் மனைவி சும­ல­தாவை வெற்­றிக்­கொள்­ளச் செய்­து­விட்­டார்­கள். எம்.ஜி.ஆரின் மறை­வுக்­குப் பிறகு அவ­ரு­டைய இடத்­திற்கு ஜெய­ல­லிதா வந்­தார்....அந்த முறை­யில், ஒரு சிறிய அள­வில், தன்­னு­டைய மறைந்த கண­வர் நெருக்­க­மான பிணைப்பு கொண்­டி­ருந்த மக்­க­ளவை தொகு­தி­யின் மக்­க­ளு­டைய ஆத­ர­வைப் பெற்­றி­ருக்­கி­றார் சும­லதா. பா.ஜ.க.வின் ஜெயக்­கொடி நாடெங்­கும் பறக்­கும் இந்­தத் தரு­ணத்­தில், அதன் ஆத­ர­வோடு வெற்றி அடைந்த பார்­லி­மென்ட் உறுப்­பி­ன­ராக சும­லதா விளங்­கு­கி­றார்.

குண்­டூ­ரில் பள்­ளிப்­ப­டிப்பை 1978ல் சும­லதா  முடித்­தி­ருந்­தார். மாவட்­டத்­திலே முதல் மாணவி என்று சான்­றி­தழ் பெற்­றார். கல்­லூ­ரி­யில் பி.யூ.சி. படிக்­கும் போது, விளை­ யாட்­டுத்­த­ன­மாக ஒரு அழ­கிப்­போட்­டி­யில் சும­லதா கலந்­து­கொண்­டார். எதிர்­பா­ரா­த­வி­த­மாக ‘அழகு ராணி’­­யா­கத் தேர்வு பெற்­றார். சும­ல­தா­விற்­குப் பழம்­பெ­ரும் நடிகை ஜமுனா கிரீ­டம் சூட்­டி­னார்...வனி­த­ஜோதி என்ற இதழ் இந்­தப் படத்­தைப் போட்­ட­தும், உய­ர­மா­க­வும் சிவப்­பா­க­வும் தோற்­றம் அளித்த பதி­னாறு வயது நிரம்­பிய புதிய ‘அழகு ராணி’­­யைப் பற்­றித் தெலுங்கு திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர்­கள் விசா­ரிக்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.

சும­ல­தா­வின் அப்பா மதன் மோகன் ஒரு பிர­பல சினிமா லேபில் வேலை பார்த்­த­வர். புகைப்­ப­டங்­கள் சிறப்­பாக எடுக்­கக்­கூ­டி­ய­வர். சும­ல­தாவை குழந்­தை­யி­லி­ருந்து இளம் பெண்­ணா­கும் வரை ஒவ்­வொரு நிலை­யி­லும் ஏரா­ள­மான படங்­கள் எடுத்­துத்­தள்­ளி­ய­வர். அவை­யெல்­லாம் குடும்­பத்­தி­னர் பார்த்து சந்­தோ­ஷப்­ப­டு­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட படங்­கள். அவற்றை அழ­கான ஆல்­பத்­தில் ஒட்­டி­வைத்­தி­ருந்­தார்.

ஆனால், இப்­போது யாரோ ஒரு போட்­டோ­கி­ரா­பர் எடுத்த சும­ல­தா­வின் ‘அழகு ராணி’ படம் பத்­தி­ரி­கை­யில் வெளி­வந்து, சிலர் படத்­தில் நடிக்­க­வேண்­டும் என்று கேட்­க­வும் ஆரம்­பித்­து­விட்­டார்­கள். சும­ல­தா­வின் அம்மா ரூபா­வுக்கு ஆசை­தான். சும­ல­தா­வுக்கு  மூன்று சகோ­த­ரி­கள் இருந்­தார்­கள். ஒரு தம்பி இருந்­தார். சும­ல­தா­வுக்கு சினிமா நடி­கை­யாக நல்ல வாய்ப்­பு­கள் கிடைத்து, நல்ல வரு­மா­னம் வந்­தால் குடும்­பத்­திற்கு நல்­ல­து­தான் என்று அவர் கரு­தி­னார். தன்­னு­டைய கண­வ­ரின் சில நண்­பர்­க­ளி­டம் விசா­ரித்­து­விட்டு, சென்­னைக்­குக் கிளம்­பி­விட்­டார்.

சென்­னை­யில்,  ‘சமா­ஜா­னிகி சவால்’ என்ற தெலுங்­குப் படத்­தில் நடிக்க சும­லதா முத­லில் ஒப்­பந்­த­மா­னார். நடி­கர் கிருஷ்ணா கதா­நா­ய­க­னாக நடித்த இந்­தப் படத்­தில், கிருஷ்­ணா­வின் தங்கை வேடம் சும­ல­தா­விற்கு. பெரிய வேடம் அல்ல, ஆனால்  பட­பூ­ஜை­யின் போதே சும­ல­தா­வின் வாழ்க்­கை­யில் பெரிய மாற்­றம் வரு­வ­தற்­கான சம்­ப­வங்­கள் தொடங்­கி­விட்­டன. அப்­போ­தி­ருந்த தமிழ் சினிமா கதா­நா­ய­கி­களை விட சும­லதா  உய­ர­மா­கத் தெரிந்­தார் (அவ­ரு­டைய உய­ரம், ஐந்­தடி ஐந்­தங்­கு­லம்). நல்ல சிவப்­பா­க­வும் இருந்­தார். முக­ஜா­டை ­யும்  வித்­தி­யா­ச­மாக இருந்­தது. பெரிய விழி­க­ளில் உணர்ச்­சி­கள்  விளை­யா­டின.

பின்­னா­ளில் தன்­னைப் பற்­றிக் கூறும் போது  தன்னை ஒதுங்­கிப்­போ­கும் வகை­யி­லான நப­ராக சும­லதா கூறு­வார். ஆனால் பதி­னைந்து வயதே ஆன நிலை­யில், அவர் சிரிப்­பும் கும்­மா­ள­மு­மாக இருந்­தார். பட­ பூ­ஜை­யில் பார்த்­த­போது, டைரக்­டர் ஸ்ரீதர் உடனே அவரை ஒப்­பந்­தம் செய்ய விரும்­பி ­னார். ஆனால் முந்­திக்­கொண்­டது என்­னவோ,  பிர­பல வில்­லன் நடி­க­ரான பி.எஸ்.வீரப்பா. தன்­னு­டைய ‘திசை மாறிய பற­வை­கள்’ படத்­தின் நாய­கி­யாக நடிக்க சும­ல­தா­தான் சரி­யா­ன­வர் என்று அவ­ருக்­குப் பட்­டது.

அடுத்த நாள் பி.எஸ்.வி. பிக்­சர்ஸ் அலு­வ­ல­கத்­தில் பரீட்­சார்த்­த­மாக சும­லதா நடிக்­க­வைக்­கப்­பட்­டார்.  ‘‘அம்மா...அம்மா...நான் பாஸ் ஆயிட்­டேன்’’ என்று கூறி­ய­வாறு சும­லதா வரு­வ­தைப்­போன்ற காட்சி அது. நடிப்­பி­லும் இந்­தப் பொண்ணு பாசா­கி­விட்­டது என்­றார்,  வச­னத்தை எழுதி சும­ல­தா­விற்கு சொல்­லிக் கொடுத்த கதை, வச­ன­கர்த்தா ெஜக­தீ­சன்.

சும­ல­தா­விற்கு அந்­தப் படம் முதல் படம் என்­றால் இயக்­கு­ந­ராக ெஜக­தீ­ச­னுக்­கும் முதல் படம். ஆனால் கதை, வச­ன­கர்த்­தா­வாக அவ­ருக்கு நல்ல அனு­ப­வம் இருந்­தது. அக்­ர­கா­ரத்­தில் வாழும் ஒரு பிரா­ம­ணப் பெண், கிறிஸ்­தவ கன்­னி­காஸ்­தி­ரீ­யா­கும் கதையை ெஜக­தீ­சன் அழ­கா­கப் பின்­னி­யி­ருந்­தார். சரா­சரி பிரா­ம­ணப் பெண்­ணாக வள­ரும் கங்கா, துளசி மாதா­வுக்கு ஸ்லோகம் பாடு­கி­றாள், வீணை கற்­றுக்­கொள்­கி­றாள், தோழி­க­ளு­டன் ஆற்­றில் குளித்­துக் கும்­மா­ளம் அடிக்­கி­றாள், தன்­னைக் காத­லிக்­கும் வாலி­ப­னு­டன் குதூ­க­லிக்­கி­றாள்.... ஒரு கட்­டத்­தில் இந்து மதத்­தின் மிக உன்­ன­த­மான தன்­மை­யைக் குறித்­தும் பேசு­கி­றாள்!

ஆனால் அவள்  ஒரு தாழ்த்­தப்­பட்ட சமூ­கத்­தில் பிறந்­த­வள் என்ற உண்மை திடீ­ரென்று வெளிப்­பட்டு, அவ­ளு­டைய வாழ்க்­கை­யைப் புரட்­டிப்­போ­டு­கி­றது. தன்னை வளர்த்­த­வர்­க­ளின் நன்­மை­யைக் கருதி அவள் வீட்டை விட்டு வெளி­யே­றிய பின் நடக்­கும் சம்­ப­வங்­கள் அவளை தேவா­ல­யத்­தில் தஞ்­ச­ம­டைய செய்து, கன்­னி­காஸ்­தி­ரீ­யா­கவே மாற்­றி­வி­டு­கின்­றன. படத்­தைப் பார்த்த ம.பொ.சிவ­ஞா­னம், பிரா­மண பெண்­ணைக் கன்­னி­காஸ்­தி­ரீ­யாக்கி விட்­டீர்­களே என்று அங்­க­லாய்த்­தார்.

அன்னை தெரசா சபை­யைச் சேர்ந்த கன்­னி­காஸ்­தி­ரீ­கள், ஏதா­வது தவ­றாக இருந்­தால் அப­ரா­தம் விதிப்­போம் என்று கூறி­ய­பின்­தான் படத்­தைப் பார்த்­தார்­கள். படத்­தைப் பார்த்த பின், ஐநுாறு ரூபாய் பரி­ச­ளித்­து­விட்­டுச் சென்­றார்­கள் (இவை­யெல்­லாம் இயக்­கு­நர் ெஜக­தீ­சன் என்­னி­டம் கூறி­யவை).

சும­ல­தா­வைப் பொறுத்த வரை, படம் நன்­றாக நிறை­வ­டைந்­ததை எண்ணி சந்­தோ­ஷப்­பட்டு, திருப்­ப­திக்­குக் குடும்­பத்­து­டன் சென்று வணங்­கி­னார். அவ­ரு­டைய வேண்­டு­தல் வீண் போக­வில்லை.

எம்­மின் புதிய அத்­தி­யா­யத்­தைத் தொடங்கி வைத்த ‘முரட்­டுக் காளை’­­யில் ரஜி­னி­காந்­தின் இரண்­டா­வது ஜோடி­யாக சும­லதா நடித்­தார். ‘கழுகு’ படத்­தி­லும் சும­லதா ஒரு பாட­லில் ரஜி­னி­யு­டன் நடித்­தார். படத்­தில் பத்­தி­ரி­கை­யா­ள­ராக வரும் சோ, அமெ­ரிக்க ஹெரால்ட் பத்­தி­ரி­கை­யின் நிரு­பர் என்று சும­ல­தாவை அறி­மு­கம் செய்­வார். இயக்­கு­நர் ஸ்ரீதர் தன்­னு­டைய வித்­தி­யா­ச­மான பட­மான ‘ஒரு ஓடை நதி­யா­கி­ற­து’­­வில் சும­ல­தாவை மாறு­பட்ட கோணத்­தில் சித்­த­ரித்­தார். ‘அழ­கிய கண்­ணே’­­வில் சும­ல­தாவை தேவ­தாசி மர­பில் வந்த ஆடல் நாய­கி­யாக இயக்­கு­நர் மகேந்­தி­ரன் நடிக்­க­வைத்­தார். ‘அழைத்­தால் வரு­வேன்’ படத்­தில் கால் ேகர்ள் வேடத்தை சும­லதா ஏற்­றார்.

தெலுங்கு சினி­மா­வி­லும், மலை­யாள சினி­மா­வி­லும் பல்­வே­று­பட்ட குணச்­சித்­தி­ரங்­க­ளில் வெற்­றி­க­ர­மாக நடித்து தன்­னு­டைய திற­மையை சும­லதா நிலை­நாட்­டி­னார். கே. விஸ்­வ­நாத்­தின் ‘சுப­லே­கா’­­வி­லும் ‘சுரு­தி­ல­ய­லு’­­வி­லும் சும­ல­தா­வுக்கு மிகச்­சி­றப்­பான பாத்­தி­ரங்­கள் அமைந்­தன. ஓவி­ய­ரும் இயக்­கு­ந­ரு­மான கே. பாபு­வின் ‘ராஜா­தி­ரா­ஜா’­­வில் சும­ல­தா­தான் நாயகி.

மம்­மூட்­டி­யின் முதல் வெற்­றிப்­ப­ட­மான ‘நியூ டெல்­லி’­­யில் சும­ல­தா­வின் கதா­நா­யகி வேடத்­திற்கு நல்ல குணச்­சித்­தி­ரம் அமைந்­தது. அதே போல் மோகன் இயக்­கிய ‘இச­பெல்’ என்ற மலை­யா­ளப் படத்­தில் டூரிஸ்ட் கைடாக வந்து ரசி­கர்­க­ளின் மன­தில் நிரந்­த­ர­மான இடத்தை சும­லதா பிடித்­தார். கன்­னட சினி­மா­வில், ராஜ்­கு­மார், விஷ்­ணு­வர்த்­தன், அனந்த் நாக், சரண்­ராஜ் என்று முன்­னணி நாய­கர்­க­ளு­டன் ஜோடி சேர்ந்த சும­லதா, அம்­ப­ரீ­ஷு­டன் ‘அவ­தார புருஷா’, ‘ஆகுதி’, ‘நியா­ய­காகி நானு’ உட்­பட பல படங்­க­ளில் ஜோடி சேர்ந்­தார். அம்­ப­ரீ­ஷும் சும­ல­தா­வும் தங்­க­ளு­டைய திரைக்­கா­தல்­களை மீறி, வாழ்க்­கை­யி­லும் ஒன்­று­சேர ரக­சி­ய­மாக முடிவு கட்­டி­னார்­கள்.  அதை பின்பு உல­கம் அறிந்­தது. அவர்­க­ளு­டைய மண­வாழ்க்கை அம்­ப­ரீ­ஷின் இறப்பு வரை பிரி­வில்­லா­மல் சென்­றது. இப்­போது, அம்­ப­ரீஷ் மறைந்­த­பின்­னும் அவர் பல்­லாண்­டு­க­ளா­கத் தொடர்பு கொண்­டி­ருந்த மண்­டியா தொகு­தி­யின் மக்­க­ளவை உறுப்­பி­னர் ஆகி­யி­ருக்­கி­றார் சும­லதா.

சென்­னை­யில் பிறந்து குண்­டூ­ரில் வளர்ந்து, தென்­னாட்­டில் திரைப்­ப­டங்­க ­ளில் வலம் வந்து, ஒரு சில இந்­திப் படங்­க­ளி­லும் நடித்த சும­லதா, இப்­போது தன்னை  கன்­ன­டி­ய­ரா­கவே கண்­டு­கொள்­கி­றார். பதி­னைந்தே வய­தில் தன்­னு­டைய தோளில் கதா­நா­யகி வேடத்தை தைரி­ய­மாக ஏற்­ற­வர், 55வயதை கடந்த நிலை­யில்  ஒரு புதிய அர­சி­யல் வேடத்தை ஏற்­றி­ருக்­கி­றார்... அதன் குணச்­சித்­தி­ரம் எப்­படி அமை­யும் என்ற கேள்­விக்­குக் காலம்­தான் பதில் சொல்­லும்.

(தொட­ரும்)Trending Now: