சீன ராணுவ டாங்குகளை எதிர்த்து நின்ற தனி ஒருவன்: தியனன்மென் கிளர்ச்சி

02-06-2019 05:18 PM

சீனாவில் ஜனநாயகம் கோரி, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1989-ல், வெடித்த, தியனன்மென் சதுக்க மாணவர் கிளர்ச்சியின்போது, சீன ராணுவ டாங்குகளை ஒரு  மனிதர் தனி ஒருவராக அஞ்சாமல் எதிர்த்து நின்றார்.

அந்தக் காட்சியை, அப்போது `அசோசியேட்டட் பிரஸ்’ (ஏபி)  செய்தி நிறுவனத்தின் புகைப்பட ஆசிரியராக  இருந்த ஜெப் வைடனர்  புகைப்படமாக எடுத்தார்.  அந்தப் படம் என்றென்றைக்கும் பேசப்படும் வரலாற்றுப் புகழ்பெற்ற படமாக விளங்குகிறது.

சீனாவில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஜனநாயகம்  முதலியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையில் வெடித்த ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி, ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ராணுவத்தைக் கொண்டு, 1989 ஜூன் 3, 4-ல் அடக்கி ஒடுக்கப்பட்டது.

அப்போது , தலைநகர் பீஜிங்கில் உளள தியனன்மென் சதுக்கத்தை நோக்கி முன்னேறி வந்த ராணுவத்தை, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அமைதியான முறையில் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, ராணுவத்தினரும் டாங்கிப் படையினரும் சரமாரியாக சுட்டதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானவர்கள்  முதல் ஆயிரக் கணக்கானவர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படம் பிடித்தது எப்படி?

அந்த வேளையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் அமைந்திருந்த `ஏபி’ செய்தி நிறுவன அலுவலகத்தில் ஜெப் வைடனர்  பணியாற்றி வந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெப் வைடனர் இளம் வயதிலேயே புகைப்படக் கலையின் மீது காதல் கொண்டவர். அது அவரை `ஏபி’ செய்தி நிறுவனத்தின் தெற்கு ஆசியப் பிரிவு புகைப்பட ஆசிரியர் என்ற நிலைக்கு உயர்த்தி இருந்தது.

அப்போது, சீனாவில், பீஜிங் நகரில் உள்ள தியனன்மென் சதுக்கத்தை மையமாக வைத்து, மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக ஆதரவு இயக்கம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என்றும், அந்த நிகழ்வுகளை படம் பிடித்து அனுப்புமாறும் ஜெப் வைடனர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஆனால் அவருக்கு செய்தியாளர் விசா வழங்க, பாங்காக்கில் உள்ள சீனத்  தூதரகம் மறுத்துவிட்டது. உடனே அவர் விமானத்தில் ஹாங்காங் விரைந்தார். அங்கு ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் டூரிஸ்ட் விசா பெற்று, லக்கேஜுக்குள் கேமராவை மறைத்து வைத்து, சுங்கத் துறையினரை சமாளித்து சீனாவுக்குள் நுழைந்தார்.
கிளர்ச்சி முழு வீச்சில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முகாம் இட்டிருந்த தியனன்மென் சதுக்கத்துக்கு ஒவ்வொரு நாளும் சைக்களில் சென்று, யாருக்கும் தெரியாமல் படம் பிடிப்பது அவரது வழக்கமாக இருந்தது.
ஜூன் 3-4-ல் கிளர்ச்சியை ராணுவம் ஒடுக்கி, நசுக்கியதற்கு மறுநாள், 5-ம் தேதி. தியனன்மென் சதுக்கத்தை ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காட்சியை படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.

படம் எடுக்க வசதியாக இருக்கும் என்பதால் பீஜிங் ஹோட்டலுக்கு விரைந்தார். தன்னுடைய  பழைய நண்பர் என்று சொல்லி, பாதுகாப்பு  படை வீரர்களைத் தாண்டி அவர் ஹோட்டலுக்குள் நுழைய அங்கு தங்கியிருந்த அமெரிக்க மாணவர் கிர்க் மார்ட்சென் பெரிதும் உதவி் செய்தார்.

ஹோட்டலின் 6-வது மாடியில் மார்ட்சென் தங்கியிருந்த அறை, சாலையை நோக்கி அமைந்திருந்தது உதவியாக இருந்தது. ஆனால் படம் எடுக்க பிலிம் இல்லை. மீண்டும் வெளியே சென்று வாங்கி வருவது இயலாத காரியம்.

இப்போதும் கிர்க் மார்ட்சென்தான் கை கொடுத்தார். கீழேயுள்ள கூடத்துக்குச் சென்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தேடினார். 2 மணி நேரத்துக்குப் பிறகு ஒரே ஒரு பிலிம் ரோல் எடுத்து வந்தார். பின்னர் நிகழ்ந்த வரலாற்றுப் புகழ்பெற்ற சம்பவங்கள் எல்லாம் அதில்தான் பதிவானது.

டாங்க் மனிதர்

தியனன்மென் சதுக்கத்தில், கைகளில் கடைக்கு பொருள் வாங்க  எடுத்துச்  செல்லும் பைகளுடன் ஒரு மனிதர், வரிசையாக அணிவகுத்து வரும் ராணுவ டாங்கிகளை எதிர்த்து நிற்கும் காட்சியை ஜெப் வைடனர் பார்த்தார். அதை உடனே படம் பிடித்துவிட்டார். சிறிது நேரத்தில் அங்கு  வந்த இருவர் அந்த மனிதரை பிடித்து இழுத்துச் சென்றுவிட்டனர். டாங்குகளை அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்ற அந்த அடையாளம் தெரியாத  மனிதர் யார் என்பது இன்றுவரை தெரியவில்லை.

அந்த டாங்க் மனிதரின் புகைப்படம், எதுவரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சா நெஞ்சத்தின் 20- நூற்றாண்டு அடையாளமாகத் திகழ்கிறது.

சீனா வெளியில் சொல்ல வேண்டும்

வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தப் படத்தை எடுத்த அமெரிக்கர் ஜெப் வைடனர் அதை நினைவு கூர்ந்து இப்போது கூறிதாவது:

வரலாறு முழுவதிலும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிறைய தவறுகள் செய்திருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சினைகளில் அவை இணக்கம் கண்டுள்ளன.

என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க சீனாவுக்கு இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன். தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். இதுதான் சரியான, கண்ணியமான செயலாக இருக்கும். இவ்வாறு ஜெப் வைடனர் குறிப்பிட்டுள்ளார்.

புலிட்சர் விருது

இந்த புகைப்படம் ஜெப் வைடனுக்கு `புலிட்சர் விருது’  பெற்றுத் தந்தது. எல்லாக் காலத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தும் உலகின் 100 புகைப்படங்களில்  ஒன்றாக `டைம்’ இதழ் இந்தப் படத்தை பட்டியலிட்டு  பெருமைப்படுத்தி உள்ளது. Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :