28-05-2019 06:57 PM
நடிகர்கள் : விக்ரம், தீக்ஷா சேத், கே.விஸ்வநாத், ப்ரதீப் ராவத், அவினாஷ், சனா, தம்பி ராமையா, மற்றும் பலர். இசை : யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு : ஆர். மதி, எடிட்டிங் : காசி விஸ்வநாதன், தயாரிப்பு : பிவிபி சினிமா, வசனம்: பாஸ்கர் சக்தி, திரைக்கதை, இயக்கம் : சுசீந்திரன்.
அனல் முருகன் (விக்ரம்) சினிமாவில் வெற்றிகரமான வில்லனாகத் துடிக்கும் ஒரு ஜிம் பாய். தனது சக ஜிம் பாய்களுடனும் சண்முகத்தோடும் (தம்பி ராமையா) சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் ரவுடி கும்பலிடமிருந்து பெரியவரான தட்ஷிணாமூர்த்தியை (இயக்குனர் கே.விஸ்வநாத்) காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறான். எதிரேயுள்ள மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் தர்ஷினியை (தீக்ஷா சேத்) அனல் விரும்புவது தெரிந்து தட்ஷிணா அனலுக்கு உதவுகிறார். இருவரும் நேசிக்கத் தொடங்குகிறார்கள்.
இதற்கிடையே தட்ஷிணாவை துரத்தும் ஆபத்தின் பின்னணி பற்றி அனல் தெரிந்து கொள்கிறான். இறந்து போன தனது அன்பு மனைவியின் நினைவாக தட்ஷிணா நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத்தின் இடத்தை கைப்பற்ற துடிக்கிறார் தீய அரசியல்வாதியான ’அக்கா’ என்றழைக்கப்படும் ரங்கநாயகி (சனா). பணத்தாசையால் தட்ஷிணாவின் மகன் சிதம்பரமும் (அவினாஷ்) அவர்களுக்கு துணை போகிறான். அனலின் பாதுகாவலையும் மீறி சதி செய்து தக்ஷிணாவிடமிருந்து கையெழுத்து பெற்று அக்கா அந்த இடத்தை கைப்பற்றுகிறார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிதம்பரத்தையும் கைது செய்ய வைக்கிறாள். மனம் உடையும் தட்ஷிணாவை தேற்றும் அனல் அவரது இடத்தை திரும்பப் பெறுவதோடு அக்காவை தண்டிப்பதாகவும் உறுதி எடுக்கிறார். அக்காவின் பின்னணி பற்றியும், அவரது பலம் பற்றியும் ஆராயும் அனல் அவளுக்கு பின்னணியில் அவளுக்கு பினாமியாக இருக்கும் வாப்பாவை (ப்ரதீப் ராவத்) பற்றி தெரிந்து கொள்கிறான். தமிழ்நாடு முழுவதும் நிலமோசடியில் ஈடுபட்ட இவர்களைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர்வதற்காக தனது சினிமா ஞானத்தை பயன்படுத்தி திட்டங்கள் போடுகிறான். அதன்படி உண்மைகள் வெளிவர கோபமாகும் அக்கா வாப்பாவின் உயிரை பறிக்கிறாள். நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும் அக்காவை பாதிக்கப்பட்ட பலபேரில் ஒருவரான இளைஞனின் தந்தை கத்தியால் குத்திக் கொல்கிறார். அனலின் சபதம் ஜெயிக்க, தட்ஷிணாவின் ஆசைப்படி ஆதரவற்றோர் இல்லம் சிதம்பரம் கண்காணிப்பில் மறுபடியும் இயங்கத் தொடங்குகிறது. சினிமாவில் வளர்ந்து வரும் அனலின் மானேஜராக மாறுகிறார் தட்ஷினா.