இறந்த பின் உடலை எரிக்காமல் புதைக்காமல் உரமாக பயன்படுத்தலாம் : புதிய சட்டத்திற்கு வாஷிங்டன் ஆளுநர் ஒப்புதல்

22-05-2019 09:11 PM

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் மக்கள் தாங்கள் இறந்தபின் தங்கள் உடலை எரிக்காமல் புதைக்காமல் உரமாக பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டத்திற்கு வாஷிங்டன் ஆளுநர் ஜே இன்ஸ்லீ ஒப்புதல் அளித்து மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.

மனித உடலை உரமாக பயன்படுத்த வழிவகை செய்யும் இந்த சட்டத்தை அமல்படுத்திய அமெரிக்காவின் முதல் மாநிலம் என்று வாஷிங்டன் பெயரெடுத்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும்.

உலக சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் கார்பன் புகை வெளியீட்டை தடுக்கும் முயற்சியாக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் இறந்து போனவர்களின் உடல்கள் உரமாக மாற்றி தாவரங்கள் வளர்க்க பயன்படுத்தப்படும்.

உடலை எரிக்கும் போது வெளியாகும் புகையால் ஏற்படும் மாசை இந்த புதிய திட்டத்தின் மூலம் தடுக்க முடியும். மேலும் பல இடங்களில் உடலை புதைக்க போதிய நிலம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வாகவும் இந்த புதிய சட்டம் அமையும்.

புதிய சட்டத்தின் கீழ் வாஷிங்டனில் வசிப்பவர்கள் யாரேனும் தங்கள் உடலை உரமாக மாற்ற விரும்பினால் அதற்கு சட்டப்படி அனுமதி உண்டு.

இறந்தவர்களின் உடலை உரமாக மாற்றி தர ரிகம்போஸ் (Recompose) என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. ரிகம்போஸ் நிறுவனத்தின் நிறுவுனர் கட்ரினா ஸ்பேட் தான் இந்த திட்டத்தை உருவாக்கியவர். இதுகுறித்து காட்ரினா ஸ்பேட் கூறுகையில்;

‘‘இறந்தபின் மீண்டும் நேரடியாக இயற்கைக்கு திரும்பும் இந்த திட்டம் மிகவும் அழகானது. இந்த செயல்பாடு இயற்கையானது, பாதுகாப்பானது, நீடித்து நிலைக்க கூடியது. இதன் மூலம் நில பயன்பாடு மற்றும் கார்பன் வெளியீடு குறைக்கப்படும்’’ என்று கட்ரினா ஸ்பேட் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன் கட்ரினா ஸ்பேட் 30 வயதை கடந்த போது அவருக்கு தன் மரணம் பற்றிய சிந்தனை தோன்றியுள்ளது. அப்போது தன் உடலை எரிக்காமல், புதைக்காமல் அல்லது பதப்படுத்தாமல் சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் ஒரு மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனை பிறந்தது.

இது தொடர்பாக வாஷிங்டன் பல்கலைகழகத்துடன் இணைந்து கட்ரினா ஸ்பேட் ஆய்வில் ஈடுபட்டார். தானமாக வழங்கப்பட்ட உடல்கள் மூலம் அவர்களது ஆராய்ச்சி நடைபெற்றது.

இறந்தவரின் உடலை ஒரு பெட்டியில் வைத்து அதில் மரக்கட்டைகள், வைக்கோல் மற்றும் ஆல்ஃபா ஆல்ஃபா (alfalfa) என்ற பாசி ஆகியவற்றை அதில் போட்டு இறுக்கமாக அடைக்கப்பட்டது.

உடலுடன் போடப்பட்ட பொருட்களில் இருந்த நுண்கிருமிகள் 30 நாட்களில் அந்த உடலை எலும்பு உட்பட முழுவதுமாக சிதைத்து உரமாக மாற்றியது. பண்ணைகளில் இறந்த விலங்குகளை இதே முறையில் தான் உரமாக மாற்றுவார்கள். இதே நடைமுறையை மனித உடல்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை கட்ரினா ஸ்பேட் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அந்த மனித உரத்தின் தோற்றம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கடையில் வாங்கும் சராசரி இயற்கை உரத்துடன் ஒத்துபோனது. காய்கறி தோட்டம் உருவாக்க இந்த உரம் பயன்படும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 2000 கோடி டாலர் வரை சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.Trending Now: