பிரேசில் நாட்டுக் கோழிக்கறி இந்தியாவில் விற்க அரசு அனுமதி

29-04-2019 06:07 PM

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜே.பி.எஸ். என்ற கோழி மாமிசம் மற்றும் பிற மாமிசப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் இந்தியாவில் தனது கோழி கறி வகைகளை ஏற்றுமதி செய்து விற்பனை செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுள்ளது.  ஜே.பி.எஸ். நிறுவனம் பிரேசில் நாட்டில் உள்ள மிகப்பெரிய மாமிசம் பதப்படுத்தும் தொழில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இதர மாமிச வகைகளைப் பதப்படுத்தி விற்பனை செய்வதோடு கோழியின் மாமிசத்தையும் பதப்படுத்தி விற்பனை செய்கிறது.

ஜே.பி.எஸ். நிறுவனத்தின் கோழி மாமிச வகைகளை விற்பனை செய்வதற்கு தன்னுடைய துணை நிறுவனமான சியாரா என்ற நிறுவனத்தை பயன்படுத்த ஜே.பி.எஸ். திட்டமிட்டு இருக்கிறது.

சியாரா நிறுவனம் நேரடியாக இந்தியாவில் கோழி மாமிச வகைகளை விற்பனை செய்வதற்கு விண்ணப்பித்தது. உரிய அனுமதியை இந்திய அரசு சியாரா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

அமெரிக்கா தன் நாட்டு கோழி மாமிச வகைகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு உலக வர்த்தக நிறுவனத்தில் வர்த்தக தகராறு எழுப்பி அதன் மூலம் அனுமதியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கே.எஃப்.சி. உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் தங்கள் மாமிச வகைகளை விற்பனை செய்து வருகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் இந்திய கோழிப்பண்ணை நிறுவனங்கள் பெரிதும் ஆட்டம் கண்டுள்ளன. அவற்றின் மாமிச விற்பனையும் கோழி முட்டை விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார புலனாய்வு புள்ளி விவர இயக்குனரகம் தந்த  புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் கோழி மாமிசங்கள் மற்றும் பிற பொருள்கள் இறக்குமதி 797.73 டன்களாக உயர்ந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 37 கோடி ரூபாய் ஆகும்.

அதற்கு முந்திய ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட கோழி மாமிச வகைகளில் அளவு 572 டன்கள் ஆகும் அதன் இறக்குமதி மதிப்பு 26 கோடி ரூபாய் ஆகும்.

அமெரிக்காவில் இருந்து மட்டும் 36.9 டன்கள் கோழி மாமிசம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 12 லட்சம் டாலர் ஆகும்.

2017-18ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொத்த கோழி மாமிசம் அளவு 0.01 டன் ஆகும்.

இந்தியாவில் கோழிப் பண்ணை நடத்தும் நிறுவனங்கள் மக்காச்சோளம் இறக்குமதி செய்து கோழி தீவனமாகத் தயாரித்து கோழிகளுக்கு கொடுக்கின்றன.

அதற்குத் தேவையான மக்காச்சோளம் அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் மக்காச்சோளத்தின் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் கோரி வருகின்றனர்.

அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மாமிச வகைகளுக்கு கூடுதல் இறக்குமதி தீர்வை விதிக்கப்பட வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரி வருகின்றனர்.

தற்போது 100% இறக்குமதித் தீர்வை விதிக்கப்படுகிறது. இந்த தீர்வை விதிப்பு இந்திய கோழி பண்ணை நடத்தும் நிறுவனங்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் தொலைநோக்கு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் விலை குறைவான கோழி மாமிச வகைகளை இந்தியாவில் கொண்டுவந்து குவிக்கத் தொடங்கினால் இந்திய கோழிப்பண்ணை நிறுவனங்களின் பாடு மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும் என சுகுணா கோழி பண்ணை நிறுவன மேனேஜிங் டைரக்டர் சவுந்தரராஜன் கூறினார்.

வெளிநாட்டில் கோழியின் கால், தொடை மாமிசத்தை யாரும் சாப்பிடுவதில்லை. அதனால் அவற்றை குப்பைத்தொட்டியில் கொட்டும் விலையில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதன் மீது 100 சதவீத வரி இந்தியா விதிக்கும் நிலையில்கூட அவற்றின் விலை மிகவும் மலிவானதாக உள்ளது என சவுந்தரராஜன் தெரிவித்தார்.

1 டன் கோழி முட்டை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்காவில் 700 முதல் 800 டாலர் வரை செலவழிக்கப்படுகிறது. அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது 100% தீர்வை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் 1 டன் கோழி முட்டை இறக்குமதி விலை 1500 முதல் 1600 டாலர் வரை அமைகிறது. அமெரிக்காவில் பதப்படுத்தப்பட்ட கோழி மாமிசம் விலை இந்தியாவில் 1 டன்னுக்கு1800 டாலராக உள்ளது.

இந்திய கோழிப்பண்ணை நிறுவனங்களுக்கு சம வாய்ப்பு தர வேண்டும். அப்பொழுதுதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கோழி மாமிச வகைகளுடன் உள்ளூர் கோழிப்பண்ணை நிறுவனங்கள் போட்டியிட முடியும். அதற்கு இந்தியாவில் ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை 300 டாலராக உள்ளது. ஆனால் அமெரிக்காவிலும் பிரேசிலிலும் அங்குள்ள கோழிப்பண்ணை நிறுவனங்களுக்கு ஒரு டன் மக்காச்சோளம் 160 முதல் 170 டாலர் விலையில் கிடைக்கிறது. எனவே இறக்குமதியாகும் மக்காச்சோளத்தின் மீது கூடுதல் தீர்வை விதிப்பதை அரசு கைவிட வேண்டும்.

கடந்த 6 மாத காலத்தில் உற்பத்தி செலவு அதிகரித்ததால் மக்காச் சோளத்தின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த மக்காச்சோள உற்பத்தி விலை உயர்வு இந்திய கோழிப்பண்ணை நிறுவனங்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருவதாக அமைகிறது.

இந்தியாவில் கோழி வளர்ப்பு தொழில் சிறிய அளவில் விவசாயிகளால் நேரடியாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து மிகக் குறைந்த விலையில் கோழி மாமிச வகைகளும் கோழி முட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்டால் இந்திய விவசாயிகள் சிறிய அளவில் கோழி பண்ணை நடத்துவது கட்டுபடியாகாத தொழிலாகிவிடும்.

அப்பொழுது அவர்கள் கோழிப்பண்ணை தொழிலில் இருந்து துரத்தப்படுவார்கள். ஒருமுறை தொழிலில் இருந்து துரத்தப்படும் இந்திய விவசாயிகள் மீண்டும் கோழிப் பண்ணைத் தொழிலுக்கு திரும்பிவந்து நின்று நிலைப்பது நடக்காத காரியம் என்று கோழிப்பண்ணை தொழில் நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர் கருத்துக்கள் :

naveenkumarkumar0396@gmail.com 2019-06-20 10:04:39
Kkk