கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 176

22-04-2019 04:48 PM

டி.எம்.எஸ்சும் தமிழின் வெற்றியும்!

டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குக் கலை­ஞர்­க­ளின் வாழ்க்­கை­யைப் பற்­றிய ஒரு கொள்கை இருந்­தது. கட­வுள், கலை­ஞ­னுக்கு சோகங்­க­ளைக் கொடுத்து அவ­னி­ட­மி­ருந்து  உணர்ச்சி ததும்­பும் படைப்­பு­க­ளைப் பெறு­கி­றான் என்று டி.எம்.எஸ். கரு­தி­னார். தன்­னு­டைய வாழ்க்­கை­யில் நடந்த சம்­ப­வங்­க­ளை­யும் பாடிய பாடல்­க­ளை­யும் கரு­தித்­தான் அவர் இந்த முடி­வுக்கு வந்­தி­ருந்­தார்.

 அவர் சந்­தோ­ஷ­மா­கப் பாடித் திரிந்­த­போது, இடை­யி­டையே நெஞ்­சைப் புண்­ணாக்­கிய சம்­ப­வங்­கள் அவரை இப்­படி நினைக்க வைத்­தன. இரண்­டா­வது மகள் சந்­தி­ரிகா வயிற்று வலி என்று அரசு ஆஸ்­பத்­தி­ரிக்­குப் போனாள். முப்­பத்­தி­யோரு வய­தில் உயிர் போய்­விட்­டது. கொடுத்த மருந்­தின் ஒவ்­வாமை அவ­ளு­டைய வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்­டது.

‘இப்­படி செய்­துட்­டாங்­களே’ என்று வேத­னை­யில் எம்.ஜி. சக்­ர­பா­ணி­யி­டம் போன் செய்­தார் சவுந்­த­ர­ரா­ஜன் (அப்­போது எம்.ஜி.ஆர். முதல்­வ­ராக இருந்­தார்). ‘சேர்ப்­ப­தற்கு முன் கூறி­யி­ருக்­க ­கூ­டாதா’, என்­றார் சக்­ர­பாணி.

பின்­னர், மார்ச் 2000த்தில் முதல் மகள் சித்­ர­லேகா கால­மா­னாள். சவுந்­த­ர­ரா­ஜ­னின் வேத­னை­யைப் பார்த்த கிருஷ்­ணாம்­பேட்டை வெட்­டி­யா­னுக்­குத் தாங்­க­வில்லை. ‘நீங்க பாடிய பாட்­டுக்­க­ளைப் பாடித்­தான் நாங்க ஒவ்­வொரு ராத்­தி­ரி­யைக் கழிக்­கி­றோம். நீங்க அழக்­கூ­டாது சாமி’,  என்­றார்.

அழுகை என்ன....ஒரு முறை மின்­சா­ரக் கம்­பி­களை கையில் சுற்றி எம­னுக்கே அழைப்பு விடுத்­த­துண்டு. ‘அடி தாங்­கும் உள்­ளம் இடி தாங்­குமா?’ ‘கலை உள்­ளத்­தைக்­கொ­டுத்­து­விட்டு இப்­படி கஷ்­டங்­களை ஏன் அடுக்­கு­கி­றான் முரு­கன்?’  என்று சவுந்­த­ர­ரா­ஜன் கேட்­டார்.

கஷ்­டங்­கள் அவரை அரு­ளா­ளர்­க­ளி­டம் இழுத்­துச் சென்­றன. அப்­படி சவுந்­த­ர­ரா­ஜன் சந்­தித்த ஒரு மகான், புதுக்­கோட்டை புவ­னேஸ்­வரி பீடத்­தின்  சாந்­தா­னந்த சுவா­மி­கள். சவுந்­த­ர­ரா­ஜ­னி­டம் அன்­பா­கப் பேசி அரு­ளைப் பொழி­வார் அவர். அந்த சாந்­தா­னந்த சுவா­மி­கள் ஒரு முறை கூறி­னார், ‘‘எல்­லா­ரும் நிம்­ம­திக்­காக எங்­கிட்ட வர்­றாங்க...எனக்கு சவுந்­த­ர­ரா­ஜன் பக்­திப் பாட்டு நிம்­ம­தி­யைக் கொடுக்­கி­றது!’’

அப்­ப­டி­யென்­றால் அந்­தப் பக்­திப் பாடல்­க­ளைப் பாடி­ய­வன் யாரி­டம் நிம்­ம­தி­யைத் தேடு­வது?

சத்­ய­சாய் சன்­னி­தி­யில் சவுந்­த­ர­ரா­ஜன் பல முறை நிம்­ம­தி­யைத்  தேடி­ய­துண்டு. புட்­ட­பர்த்­தி­யில் ஒரு முறை,  சுவாமி சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பாடச் சொன்­னார்.  பூர்­ண­சந்­திர ஹாலில் ஆயி­ரம் ஆயி­ரம் பேர் குழுமி இருக்க, ‘சவுந்­த­ர­ரா­ஜன் பாடு­வார்’ என்று  சுவாமி அறி­வித்­தார்.

‘மகா­பி­ரபு நம்ம பேரை சொல்­றாரே’ என்று சவுந்­த­ர­ரா­ஜ­னின் மயிர்க்­கால்­கள் நின்­றன. ஒரு முறை சுவாமி அதே மண்­ட­பத்­தில், ‘உன் பேர் என்ன?’ என்று சவுந்­த­ர­ரா­ஜ­னைக் கேட்­டார். ‘சாய்­ராம்’, என்­றார் சவுந்­த­ர­ரா­ஜன்!

மகாத்­மாக்­க­ளி­டம் அருள் தேடு­கிற விழைவு சவுந்­த­ர­ரா­ஜ­னி­டம் நிறை­யவே இருந்­தது. பூண்டி சாமி­யா­ரி­டம் சென்­ற­துண்டு. யாக­வா­வின் புது மொழி வேதங்­களை அவர் பல காலம் ஓதி வந்­ததை நான் பார்த்­தி­ருக்­கி­றேன்.

‘நீ சித்­தனா நூறு வரு­ஷம் வாழப்­போேற’ என்று யாகவா முனி­வர் அரு­ளி­ய­துண்டு. அவர் கால­மா­ன­போது, ‘எங்கே போனீங்க  சாமி? நீங்க மட்­டும் போனீங்­களா? உங்க அருள்­மொழி கொண்டு போயிட்­டீங்­களா?’ என்று சவுந்­த­ர­ரா­ஜன் ஏங்­கி­ய­துண்டு.

செங்­கல்­பட்டு அரு­கில் உள்ள ‘விஸ்­வ­மா­தா’­­­­வி­டம் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு நம்­பிக்கை அதி­கம்.

ஆயி­ரம் பாட­கர்­கள் உண்டு...அதில் ஆயி­ரத்­தில் ஒரு­வ­ரா­கத் தன்னை இனம் காட்­டி­ய­வன் ஒரு­வனே...அவன் இறை­வன். அவன் சன்­னி­தி­யில் தனக்­குக் கிடைத்த பேறுக்­காக கால­மெல்­லாம் கைகூப்­பி­னார் சவுந்­த­ர­ரா­ஜன்.

இறை­வன் புக­ழைப் பாட ஏது­வாக இருக்­கும் இந்த உடல் ஒரு கோயில் என்ற பிரக்­ஞை­யும் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு இருந்­தது. அவர் நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு மேல் விடா­மல் செய்த யோகா­ச­னப் பயிற்சி உட­லைச் சீராக வைத்­தது.

பக்­தி­மான்­க­ளும் போற்ற, பாம­ர­னும் போற்ற, வியா­பா­ரச் சந்­தை­யான சினி­மா­வின் சத்­தங்­க­ளுக்கு மத்­தி­யில் இப்­படி ஒரு நவ­ரச நாட­கமா? தத்­து­வச் சாரலா? தமிழ் அரு­வியா? பணச் சந்­தை­யில் ஒரு பண்­பாட்­டுச் சரித்­தி­ரமா? யாருக்­குக் கிடைக்­கும் இந்­தப் பாக்­கி­யம் என்ற பெரு­மி­த­மும் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு இருந்­தது.

‘கீத­வா­ரிதி’ (திருச்சி தமிழ் இசைச் சங்­கம்), ‘இசைக்­க­டல்’ (கவி­ஞர் கண்­ண­தா­சன்,  காம­ராஜ் முன்­னி­லை­யில்), ‘கற்­ப­கத்­தரு மன்­னர்’  (சேலம் தமிழ் இசைச் சங்­கம்), ‘எழி­லிசை மன்­னர்’ (ஏ.வி.எம். சார்­பில் அன்­றைய முதல்­வர் மு.கரு­ணா­நிதி), ‘கலை­மா­மணி’ (தமிழ்­நாடு இயல், இசை, நாடக மன்­றம்), ‘கீத­ரஞ்­சன வாரிதி’ (மதுரை ஆதீ­னம் சோம­சுந்­தர தம்­பி­ரான்), ‘அருட்பா இசை­மணி’ (வட­லூர் திரு­வ­ருட்பா இசைச் சங்­கம்)... என்று குவிந்த பட்­டங்­கள் ஒன்­றைத்­தான் வலி­யு­றுத்­தின.  தமிழ்க் காற்று மண்­ட­லத்­தில் அவர் நாதம் விடா­மல் சஞ்­ச­ரித்­துக்­கொண்­டி­ருந்­தது. பாக­வ­தரை அடி­யொற்றி வந்­தார்...ஆனால் தனக்­கென ஒரு பாதை­யைக் கண்­டு­விட்­டார். அதைப் பறை­சாற்ற எத்­தனை ‘எதி­ரொலி’ குரல்­கள்.

சவுந்­த­ர­ரா­ஜனை போல் பாடி வாழ்வு பெற்­ற­வர் சீனி­வா­சன் என்ற கோவை சவுந்­த­ர­ரா­ஜன்.  ‘என் பூஜை அறை­யில் அவர் படம்­தான் முன்­னாடி இருக்­கும்’.

பாட­கர் கிருஷ்­ண­மூர்த்தி, சவுந்­த­ர­ரா­ஜன் குர­லில் பாடாத நக­ரம் உண்டா? பின்­ன­ணிப் பாட்­டு­டன் நடிக்­க­வும் தெரிந்த மலே­சியா வாசு­தே­வன் முக்­கி­ய­மா­கப் பின்­பற்­றி­யது சவுந்­த­ர­ரா­ஜ­னைத்­தான்.

சவுந்­த­ர­ரா­ஜ­னின் குமா­ரர்­கள் பால்­ரா­ஜும், செல்­வ­கு­மா­ரும் அப்­பா­வின் குர­லில் பாடித்­தான் உல­க­மெங்­கும் வலம் வரு­கி­றார்­கள். காலங்­கள் போகப்­போக, சவுந்­த­ர­ரா­ஜ­னின் பாடல் மகிமை  திக­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இவர்­க­ளுக்கு வாய்ப்­பு­க­ளும் கூடு­கின்­றன. அந்­தப் பாட்­டில் தங்­க­ளைப் பறி­கொ­டுத்­த­வர்­கள் ஆயி­ரம். அந்த நாதத்­தின் குளிர்ச்­சி­யி­லும், குழை­வி­லும், வீச்­சி­லும் தங்­களை இனம் கண்­ட­வர்­கள் ஆயி­ர­மா­யி­ரம்.

திண்­டுக்­கல்­லில் டி.எம். அர்­ஜு­னன், டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன் மாலையை எடுத்­துக் கொடுக்க மணம் புரிந்­த­வர்.   ‘அன்று எனக்கு ஐயா பொன்­னாடை போர்த்­தி­னார்­கள். அது என் முதல் பொன்­னாடை... அன்­றி­லி­ருந்து அவர் பாட்­டைப் பாடி எனக்கு எத்­தனை பொன்­னா­டை­கள் போர்த்­தப்­பட்­டு­விட்­டன!’ தன் பெண்­ணுக்கு ‘சவுந்­தர்யா’ என்று பெயர் வைத்­தி­ருக்­கி­றார்.

சாய்­க­ணேஷ் பி.ஏ. வக்­கீல் கிருஷ்­ண­மூர்த்­தி­யின் மகன். மயி­லாப்­பூர் ரங்­காச்­சாரி சாலை­யில் இருந்த இவ­ரது குடும்ப இல்­லத்தை சவுந்­த­ர­ரா­ஜன் விலைக்கு வாங்கி தனது அலு­வ­ல­க­மா­கப் பல வரு­டங்­கள் பயன்­ப­டுத்தி வந்­தார். கணே­ஷுக்கு அவர் அப்­பா­வைப் போலவே சவுந்­த­ர­ரா­ஜன் பாட்­டென்­றால் உயிர். கணே­ஷைப்

பாடச்  சொல்லி சவுந்­த­ர­ரா­ஜன் ரசிப்­ப­துண்டு. ‘அவர்­தான் எனக்கு அண்ணா, அப்பா, அம்மா, தெய்­வம்...உரு­வத்­தைப் பாத்து ஒரு மனு­ஷனை இக­ழாத பெரி­ய­வர் சவுந்­த­ர­ரா­ஜன்.’

சவுந்­த­ர­ரா­ஜ­னின் பாடல்­களை வெற்­றி­க­ர­மாக மேடை­யில் பல ஆண்­டு­க­ளா­கப் பாடிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள், டில்லி பிர­கா­ஷும் ஜி.ஆர். கண்­ண­னும். டி.எம்.எஸ். பாட்­டுத்­தான் இவர்­க­ளுக்கு வாழ்க்கை, வரு­மா­னம், ஆதர்­சம்.

‘‘என் வாழ்க்கை வர­லாற்றை எழு­து­வ­தற்­கா­கவே வாம­னன் பிறந்­தி­ருக்­கி­றார்’’ என்று டி.எம்.எஸ். அடை­யா­ளம் கண்ட இந்த கட்­டுரை ஆசி­ரி­யர், டி.எம்.எஸ்­சின் சரி­தத்தை எழு­தி­ய­தோடு (டி.எம்.எஸ். -- ஒரு பண்­பாட்­டுச் சரித்­தி­ரம்), அவ­ரைக் குறித்து, ‘பாட­கன், ஏழி­சைப்­பா­ட­கன்’ என்ற பாடலை எழுதி, மெட்­ட­மைத்­துப் பாடி­யி­ருக்­கி­றார். இந்­தப் பாட­லைக் கேட்ட டி.எம்.எஸ்., ‘‘சித்­தர்­கள் பாடடு மாதிரி பாடி­யி­ருக்­கீங்­கய்யா,’’ என்று வாழ்த்­தி­னார்.

‘நான் கால­மான பின்­தான் என்­னு­டைய பெருமை தெரி­யும்’ என்று 1985ல் ஒரு பேட்டி கொடுத்­தார் சவுந்­த­ர­ரா­ஜன். ‘நீங்­கள் அப்­ப­டிச் சொல்­லக்­கூ­டாது என்று ஓசூ­ரி­லி­ருந்து ஏழு பக்­கக் கடி­தம் அனுப்­பி­னார் எஸ்.ஆர். தாம­ரைச்­செல்­வன் என்­ப­வர். ‘உங்­கள் கடி­தம் எனக்கு மன ஆறு­தலை கொடுத்­தது. ஓசூ­ருக்கு இசை நிகழ்ச்சி வழங்க வரு­கி­றேன்...என்னை வந்து சந்­தி­யுங்­கள்,’ என்று பதில் கடி­தம் எழு­தி­னார் சவுந்­த­ர­ரா­ஜன்!

அந்த முதல் சந்­திப்­பிற்­குப் பிறகு, சென்­னை­யில் சினிமா உல­கில் உதவி இயக்­கு­நர் பட­லத்­தில் தாம­ரைச்­செல்­வன் மனம் நொந்­தார். தன் செல்­வாக்­கைப் பயன்­ப­டுத்தி வானொலி/தொலைக்­காட்சி அறி­மு­கங்­கள் பெற்­றுத்­தந்­தார் சவுந்­த­ர­ரா­ஜன்.

வேலூர் தாலுகா செது­வா­லை­யில் நடந்த தாம­ரைச்­செல்­வ­னின் திரு­ம­ணத்­

­திற்­கு குடும்­பத்­து­டன் சென்று, அதற்­குத் தலைமை தாங்கி நடத்­தி­வைத்­தார் சவுந்­த­ர­ரா­ஜன். இப்­போது தாம­ரைச் செல்­வன் மூன்று நாவல்­கள் எழுதி வெளி­யிட்­டி­ருக்­கி­றார். அவற்­றில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் வாழ்த்­துக்­கள் அணி­வ­குக்­கின்­றன! அவர் ஒரு­வி­தத்­தில் தாம­ரைச்­செல்­வ­னின் ‘காட்­பா­தர்’ ஆகி­விட்­டார்

தென் ஆப்­ரிக்­கா­வில் விஷ்ணு நாயுடு என்­றொ­ரு­வர்.... இவர் சவுந்­த­ர­ரா­ஜ­னின் பாடல்­களை பல நிகழ்ச்­சி­க­ளில்

பாடி­ய­தால்,  ‘டி.எம்.எஸ். ஆப் சவுத் ஆப்­ரிக்கா’ என்று அழைக்­கப்­ப­டு­கி­றார்.

மேலே சொன்­னது சவுந்­த­ர­ரா­ஜன் என்ற பாட­க­ருக்­குக் கிடைத்த வர­வேற்­பின் ஒரு துளி. மயி­லாப்­பூர் முதல் மான்­டி­ரி­யல் வரை, சிதம்­ப­ரம் முதல் சிகாகோ வரை, அவர் நடக்­கும் இட­மெல்­லாம் அவ­ரு­டன் ஒரு சங்­கீத ஒளி­வட்­டம் கூட வரு­கி­றது. அந்த ஜோதி­யில் கலந்­து­தான் கோடிக்­க­ணக்­கான தமிழ் இத­யங்­கள் அவ­ருக்­குக் கைகூப்­பு­கின்­றன.... அவர்­க­ளின் ரச­னை­யின் முன் அடி­ப­ணி­யும் எளி­மை­யான சவுந்­த­ர­ரா­ஜ­னின் கையைக் குலுக்­கு­கின்­றன.

‘‘தென் மதுரை வீதி­யிலே நடந்த

தென்­றல், இவன்

வைகை­யிலே முகம் பார்க்க வந்த திங்­கள்

தேம­துர தமிழ் ஓசை முழங்­கும் சங்­கம், இவன்

தேவார திருப்­பாட்­டின் அந்­த­ரங்­கம், என

தேன­மு­தாய் தமிழ் உலகை வலம் வந்­தான்

தேவ­தே­வன் முரு­க­ன­வன் பலம் தந்­தான்’’ என்று இந்த கட்­டுரை ஆசி­ரி­யர் எழு­திய இசைப்­பா­டல் வரி­கள், இந்த மகத்­தான வர­வேற்­பின் ரக­சி­யத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

சவுந்­த­ர­ரா­ஜன் என்­கிற பாட­கன்­பால் பெரு­வா­ரி­யான மக்­க­ளுக்கு இருந்த பரி­வை­யும் மரி­யா­தை­யை­யும் உணர்ந்து, தமி­ழக முதல்­வர் செல்வி ஜெய­ல­லிதா, அவ­ருக்கு இயல், இசை, நாடக மன்­றத் தலைமை பொறுப்பை அளித்­தார். மது­ரை­யில் ஏறக்­கு­றைய அறு­பது வரு­டங்­க­ளுக்கு முன் ஆஷர் அண்டு கோயில்  வேலைக்­குப் போன­வர், இயல், இசை மன்­றத்­துக்­குப்  போனார்! புதிய பணி­யில் குதூ­க­லம் அடைந்­தார்!

அவ­ரி­டம் அசர வைக்­கும் குணா­தி­ச­யம்... அவ­ரது அபா­ர­மான உற்­சா­கம்.. எனர்ஜி.. பாட்டு பாணத்தை குரல் வளை­யத்­தில் பூட்டி, அதை இத­யம் வரைக்­கும், அதன்­பின் நாபிக் கம­லம் வரைக்­கும் இழுத்­துத் தொடுக்­கும் போது ராம­ரின் பாணம் ஏழு மரங்­க­ளைத் துளைத்­துச் சென்­ற­தைப் போல், இவர் பாட்டு இத­யங்­க­ளைத் துளைத்­துச்

சென்­றது.

அமெ­ரிக்­கப் பாட­கர் பிராங்க் சினாத்­ராவை பற்றி பி.பி.சி. ஒரு செய்­திப் படம் எடுத்­தது. அதில், கேரி கூப்­பர், ஸ்பென்­சர் டிரேசி போன்­ற­வர்­க­ளுக்கு உணர்ச்­சி­கள் உடனே வெடிக்­கப் போவ­து­போல் ஒரு தன்மை இருந்­தது, இது பிராங்க் சினாத்­ரா­விற்கு அமோ­க­மாக இருந்­தது என்று குறிப்­பிட்­டது.  

எரி­மலை எப்­போது வெடிக்­கும் என்­ப­து­போல் உணர்ச்­சி­யின் விளிம்பு நிலை­யில் நிற்­கும் தன்மை சவுந்­த­ர­ரா­ஜ­னி­ட­மும் ‘டன்’ கணக்­கில் உண்டு. அதைப் புரிந்­து­கொண்­டால் அவர் பாட்­டில் கிடைக்­கும் உயி­ரோட்­டத்­தைப் புரிந்து கொள்­ள­லாம்.

‘நாம் எங்கே...வெள்­ளைக்­கா­ரன் எங்கே?’ என்று இன்­றும் தொட­ரும் அடிமை உணர்ச்­சி­யில் மருண்­டு­போ­ன­வர்­கள் யாரா­வது இருந்­தால்...அவர்­கள் மீனாட்சி அம்­மை­யின் கோபு­ரங்­க­ளைப் பார்க்­கட்­டும். ஆத­வன் ஒளி­யில் கல­சங்­கள் பள­ப­ளக்­கின்­றன.

‘‘தமி­ழால் முடி­யும் என்று சவுந்­த­ர­ரா­ஜன் குர­லில் காட்­டி­னேனே. தாய்­மொ­ழி­யின் பலத்­தால் கோடிக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு அறி­வுக்­கண் கொடுங்­கள்......தமிழ் சாதியை எழுப்­புங்­கள்,’’ என்று அறை­கூ­வல் விடுக்­கி­றாள் மீனாட்சி. இதைத்­தான்,  

‘ஒளி­ம­ய­மான எதிர்­கா­லம் என் இத­யத்­தில் தெரி­கி­றது’ என்ற கம்­பீ­ரக் குரல்

எதி­ரொ­லித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.  

(தொட­ரும்)