ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 3–4–19

02-04-2019 06:01 PM

இளையராஜா பற்றி வாலியின் கவிதை!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

இளையராஜா!

கறுப்பு வெள்ளை யுமான

கட்டைகளைத் தொட்டே –

இவனால்

வர்ணங்களை

உண்டாக்க முடிகிறது!

எப்போதும் ஏராளமான

விசிறிகள் இருப்பதால்…

இவனுக்கு

வியர்ப்பதே இல்லை

இவனது

வளர்ச்சியைப் பார்த்து

இமயம் வெட்கிக்கிறது!

நகையணியாத செவிகள்

நாட்டிலே உண்டு!

இவன்

இசையணியாத செவிகள்

எங்குமே இல்லை!

ஆறு வாரம் தாண்டாத

அநேகப் படங்கள்

நூறு வாரம் தாண்ட

இவன் இசைதான்

அஸ்திவாரம்!

வானொலி –

இவன் பெயரைத்தான்

மனப்பாடம்

செய்து வைத்திருக்கிறது!

ஒரு மந்திரிக்குள்ள

மரியாதை

இந்த ராஜாவிற்கு

இருக்கிறது!

இவனுக்கு இசைப்பாடத் தெரியும்!

இன்னொருவரை

வசைபாடத் தெரியாது!

இவனது

கொலு மண்டபத்தில்

இரந்து நிற்கும் புலவர்களை

இறந்து போகாமல்

இவன் ரட்சிக்கிறான்.

இவன் ஓர் இசைத் தீ;

இந்தத் தீயை உண்டாக்கியது

பஞ்சு!

இவன்தான் நாட்டுப்பாடலை

நகரத்திற்கு அழைத்து வந்து...

கோடம்பாக்கத்தில்

குடி வைத்தான்!

வயலின் வாசிப்பவனுக்கு

வயலின் சங்கீதத்தை

இவன்தான்

கற்றுக் கொடுத்தான்;

இவனது சுரங்களை

இசைக்காவிட்டால்

வாத்தியங்களுக்குச்

சுரங்கள் வந்துவிடும்!

இவனது அகம்

தை… தை… என்று ஆடாததால்…

அகந்‘தை’ இவனுக்கில்லை!

 Trending Now: