பெண் கல்விக்கான முட்டுக்கட்டைகள் : ஒரு யதார்த்த ஆய்வு

13-03-2019 08:12 PM

 இந்தியாவில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நவீன காலக்கட்டத்திலும் பல பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் அவலநிலை தொடர்கிறது. பெண் கல்விக்கு எதிராக இருக்கும் சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல முட்டுக்கட்டைகள் தான் இதற்கு காரணம்.

பல தொழில்நுட்ப வசதிகள், சமுதாய மாற்றங்கள் ஏற்பட்ட சூழ்நிலையிலும் கல்வி என்பது பல பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்தியாவில் பெண்கல்வி

இந்தியாவில் கல்வி கற்ற பெண்களின் சதவீதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. பொதுவாக இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியாவில் பெண் கல்வி சதவீதம் அதிகமாக உள்ளது.

அதிகப்பட்சமாக கேரளாவில் பெண்கள் கல்வியறிவு 92 சதவீதமாகவும் தமிழகத்தில் 73 சதவீதமாகவும் உள்ளது. அதேப்போல் இந்தியாவில் குறைந்த அளவு பெண்கள் கல்வியறிவு கொண்ட மாநிலங்களாக உத்தரபிரதேசம் 42.2 சதவீதம், பீகார் 33.1 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

பெண் கல்விக்கான தடைகள்

வறுமை, சமுதாய கட்டுப்பாடுகள் போன்று இந்தியாவில் பெண்கள் கல்வி கற்க சமுதாய ரீதியாக பல தடைகள் உள்ளன.

அதை பற்றி சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You) என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் சமீபத்தில் நான்கு மாநிலங்களில் ஆய்வு ஒன்றை நடத்தி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தன் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹரியானா, பீகார், குஜராத் மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 1,604 குடும்பங்களை சேர்ந்த 3000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த 4 மாநிலங்களில் பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்ல துணைக்கு ஒரு ஆள் இல்லாத காரணத்தால் கல்வியை இழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளிக்கூடத்திற்கு அதிக நாட்கள் செல்ல முடியாத சூழ்நிலையால் 29 சதவீத குழந்தைகளும் பள்ளிகளில் பெண் ஆசிரியர் இல்லாத காரணத்தால் ஏற்படும் சங்கடம் காரணமாக 15 சதவீத குழந்தைகளும் பள்ளிக்கு செல்லாமல் தவிர்ப்பது தெரியவந்துள்ளது.

இந்த காரணங்களை இன்னும் ஆழமாக ஆராயும் போது உடல்நல பிரச்சனைகள் காரணமாக 52 சதவீத பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள்.

வீட்டு வேலைகள் காரணமாக 46 சதவீத குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர். பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்க இந்த விஷயத்தை பெற்றோர் முக்கிய காரணமாக (65 சதவீதம்) தெரிவித்துள்ளனர்.இதை தவிர மோசமான சாலைகள், பள்ளிகளுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாதது ஆகியவை பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாததற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

பருவமடைந்த பின் கல்விக்கு தடை

பெண் குழந்தைகள் பருவமடைந்த பின் பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பள்ளிகளில் பெண்களுக்கு போதிய சுகாதார வசதி இல்லாமல் இருப்பது. உதாரணமாக சைல்ட் ரைட்ஸ் & யூ நிறுவனம் ஆய்வு நடத்திய 4 மாநிலங்களில் 87 சதவீத பள்ளிகளில் பெண்களுக்கு என தனி கழிவறை இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவற்றில் போதிய தண்ணீர் வசதி இல்லை.

எனவே பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை, போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டால் பெண் குழந்தைகள் குறிப்பாக வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதேசமயம் பெண் குழுந்தைகள் வயதுக்கு வந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் கல்வியை பாதியில் நிறுத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
62 சதவீதம் பெற்றோர்கள் கல்விக்காக ஆகும் செலவுகள் காரணமாக தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு இல்லை

பள்ளிக்கு செல்லும் 70 சதவீத பெண்கள் அரசு வழங்கும் மானியங்களை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வு நடத்தப்பட்ட 4 மாநிலங்களிலும் பெண் கல்விக்காக பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 40 சதவீத பெற்றோர்களுக்கு அந்த நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இந்த நிலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. எனவே பெண் கல்வியை அதிகரிக்கும் நடவடிக்கையாக மாநில அரசுகள் தங்கள் கல்வி நல திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். அவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால் மட்டும் பெண் கல்வி உயராது. பள்ளிக்கூடங்களின் உள்கட்டுமானம் மேம்படுத்தல், பள்ளிகளில் தேவையான தண்ணீர் வசதி, சுத்தமான கழிவறைகள், சாலை வசதிகள், பேருந்து போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றையும் வழங்கினால் மட்டுமே பெண்கள் பள்ளிக்கூடம் செல்வது அதிகரிக்கும்.

அரசு தவறிவிட்டது

பெண் கல்விக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த பல மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. முக்கியமாக மீடியா துறையில் பல வளர்ச்சிகள் மற்றும் தொழிநுட்ப வசதிகள் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்கள், குறும்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசு தரப்பில் அறிக்கை வெளியிட மட்டுமே மீடியா துறை பயன்பட்டு வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இனியாவது மாநில அரசுகள் மீடியா துறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

பெண் கல்வியால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள்

பெண்கள் கல்வி கற்பது அதிகரிக்கும் போது நாட்டில் சமுதாய ரீதியான மாற்றங்களும் அதிகரிக்கும்.

உதாரணமாக பெண்கள் கல்வி கற்பது அதிகரிக்கும் போது குழந்தை திருமணங்களின் சதவீதம் தானாக குறைய துவங்கும். பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் வயதும் அதிகரிக்கும்.

மேலும் பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்களிக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

அதன் காரணமாக திருமணமான பெண்கள் ஆண் குழந்தை பெற்று தர வேண்டும் என்ற அழுத்தம் நாளடைவில் குறையும். இதன் மூலம் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பில் ஏற்பட்டுள்ள பாலின விகித குறைபாடு நீங்க வாய்ப்புள்ளது.

பெண்கள் கல்வியறிவு பெறுவதன் மூலம் அவர்களின் அறியாமைகள் நீங்கும். தங்கள் உடல் சார்ந்த, சமூகம் சார்ந்த உரிமைகளை அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடும் துணிச்சல் அவர்களுக்கு கிடைக்கும்.

உதாரணமாக தமிழகத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண், 9ம் வகுப்பு படிக்கும் போது தனக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தனியாளாக துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார்.

அவரது தைரியத்தை பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி .கே. பழனிசாமி அவருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

தனது போராட்டத்திற்கு தன் கல்வி அறிவுதான் கைகொடுத்ததாக நந்தினி தெரிவித்துள்ளார். பள்ளிகள் உட்பட பல இடங்களில் தன் அனுபவம் குறித்து உரையாற்றி வரும் நந்தினி, பெண் கல்வி, பெண்களுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சவாலான நிலையில் பெண் கல்வி

வீதி தோறும் இரண்டொரு பள்ளி….
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,

ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பள்ளிகள், நகரங்கள் எங்கும் பல பள்ளிகள் என்ற பாரதியாரின் கனவு இன்று நிறைவேறி வருகிறது. ஆனால் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகள் சென்று சேர்வதும் அங்கு தங்கள் கல்வியை இறுதி வரை வெற்றிகரமாக முடிப்பதும் பெரும் சவாலாகவே இன்றும் உள்ளது.

கல்வி இல்லாத ஊரை தீக்கிரையாக்க வேண்டும் என்று பாரதியார் பாடினார். இன்று கல்வி அளிக்க பள்ளிகள் இருந்தும் அங்கு கல்வி கற்க பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண் கல்வியை ஊக்குவிக்க ஒவ்வொரு மாநில அரசும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிலை உணர்த்துகிறது.

கிராம பஞ்சாயத்து முதல் அரசாங்கம் அளவில் மக்கள் மத்தியில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். 

 Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :