3வது ஒருநாள் போட்டி- இந்தியாவுக்கு எதிராக அபாரமாக விளையாடி 313 ரன்கள் குவித்த ஆஸி

08-03-2019 06:34 PM

ராஞ்சி,

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸி. அணி 2-0 எனக் கைப்பற்றியது.

இதன் தொடர்ச்சியாக ஒரு நாள் தொடரில் இந்தியா ஏற்கெனவே 2 ஆட்டங்களை வென்று விட்டது.

ராஞ்சியில் 2 அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. தோனியின் சொந்த ஊர் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது இந்தியா.

டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை தரும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவத் தொப்பியை இன்று அணிந்துள்ளார்கள். இந்தத் தொப்பியை அனைத்து வீரர்களுக்கும் தோனி வழங்கினார்.

பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளம் என்பதால் அதை தொடக்க வீரர்களான ஃபிஞ்சும் கவாஜாவும் நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தார்கள். பந்து காலில் பட்டதால் காயம் ஏற்பட்ட ஷமி, ஆரம்பத்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசி வெளியேறினார். இதன் பிறகு சுழற்பந்துவீச்சாளர்கள் இந்த ரன் வேட்டையைத் தடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸி. அணியின் அதிரடி அதற்குப் பிறகும் தொடர்ந்தது. இதனிடையே தவன், கவாஜா அளித்த ஒரு கேட்சை நழுவவிட்டார். மேலும் இந்திய அணி வீரர்களும் அவ்வப்போது ஃபீல்டிங்கிலும் சொதப்பினார்கள். இதனால் ஆஸி. அணி இடைவிடாது ரன்கள் குவித்தது.

வழக்கமாக ஜாதவின் பந்துவீச்சில் எதிரணியினர் திணறுவார்கள். ஆனால் இன்று அவர் வீசிய 2 ஓவர்களில் 32 ரன்களைக் குவித்தார்கள். அவருடைய ஒரு ஓவரில் ஃபிஞ்ச் 2 சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். 51 பந்துகளில் ஃபிஞ்சும் 56 பந்துகளில் கவாஜாவும் அரை சதங்களைக் கடந்தார்கள். பிறகு 148 பந்துகளில் 150 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 186 ரன்கள் எடுத்து மிகப்பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்கள் ஃபிஞ்சும் கவாஜாவும்.

கடைசியில், ஃபிஞ்சை சதமடிக்க விடாமல் 93 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். எனினும் ஃபிஞ்ச் அவுட் ஆனபிறகு ரன் அடிப்பது சற்று குறைந்தது. 30 முதல் 35 ஓவர் வரை ஆஸி. அணியால் 22 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதை உணர்ந்த மேக்ஸ்வெல், ஜடேஜா வீசிய 36-வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரிகளும் அடித்தார்.

கவாஜா 108 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஷமி, தான் வீசிய முதல் ஓவரிலேயே கவாஜாவை 104 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். எனினும் மேக்ஸ்வெல் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். ஆனால் ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங் மற்றும் தோனியின் சமயோசிதமான செயலால் அவர் வெளியேற்றப்பட்டார். மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி மேக்ஸ்வெலின் அச்சுறுத்தலில் இருந்து தப்பித்தது.

இதனால் மீண்டு வந்த இந்திய அணி, ஆஸி. அணியைத் தடுமாற வைத்தது. 44-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ஷான் மார்ஷ் (7) மற்றும் ஹேண்ட்ஸ்காம்பை (0) வெளியேற்றி அசத்தினார். இதனால் 193/0 என இருந்த ஆஸ்திரேலிய அணி திடீரென 263/5 என நிலை தடுமாறியது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸும் அலெக்ஸ் கேரியும் பக்குவமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டாய்னிஸ் 31, கேரி 21 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்திய அணித் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ளது.Trending Now: