ஓரம் போ! ருக்மிணி வண்டி வருது!

14-02-2019 08:01 PM

சென்னையில் போக்குவரத்து, கூட்ட நெரிசல், புகை மாசு என்று நாள்தோறும்  பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த  சென்னை மாநகராட்சி  ‘ஸ்மார்ட் பைக்’  என்ற நிறுவனத்துடன்  இணைந்து     நவீன வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  

நவீன காலத்தில் பெரு நகரங்களில் மறைந்து போன வாடகை சைக்கிள் முறை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற வாகன  பயன்பாட்டை குறைத்து மக்கள் இதனை பயன்படுத்த ஆரம்பித்தால்  சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்க முடியும்.

உலக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் முதலிடம் பிடித்து இருப்பது மோட்டார் வாகனங்கள் தான். பழுதடைந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் கரும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. அதிலிருந்து வெளியேறும் புகை, காற்றில் கலந்து நமக்குக கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவை குறைக்கிறது. மாசடைந்த காற்றை சுவாசிப்போருக்கு பல்வேறு  உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு ஒரு சில பகுதிகளில் அதிகளவு மழையும். சில பகுதிகளில் மழையே இல்லாமல் வறட்சியை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து தற்பொழுது கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிக அளவு காற்று மாசு உள்ள நகரம் என்றால் டில்லி தான். டில்லியில் தற்பொழுது காற்றைக் கூட சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதற்காக பெரும்பாலான மாசு வாகன போக்குவரத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்த டில்லி அரசு ஒற்றைப்படை, இரட்டை படை எண்கள் என வாகனங்களை பிரித்து குறிப்பிட்ட  நாளுக்கு ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்களும், மற்றும் இரட்டைபடை எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே இயங்க அனுமதி அளிப்பட்டு சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 

இந்நிலையில் தான் ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டத்தை டில்லி, ஹைதராபாத், புனே போன்ற பெரு நகரங்களில் அறிமுகப்படுத்தினர்.

சென்னையும் அதைபோல் காற்று மாசு அடைந்து வருகிறது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் டில்லி இருக்கும் நிலமை தான் நமக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிமுறைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

நவீன வாடகை சைக்கிள் திட்டம்

இதன் ஒரு பகுதியாக சென்னையில் மாநகராட்சி ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்மார்ட் பைக்’ எனும் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகரட்சி  நவீன வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உலகில் பல்வேறு நாடுகளில் தற்போது நவீன வாடகை சைக்கிள் திட்டம் பிரபலமடைந்து வருகிறது. இத்திட்டம் விரைவில் சென்னை முழுக்க செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டத்தின் பயன்

இந்த திட்டம் செயல்படுகளில் வரும்பொழுது சென்னையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். அதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் மாசு அளவு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.  மேலும் நாம் உடல் ஆரோக்கியம் பெறும்.

இத்திட்டத்தின்படி, சென்னை மாநகரம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள்  உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 378 இடங்களில் நவீன வாடகை சைக்கிள்  நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன

ஒருவர் ஒரு நிலையத்தில் இருந்து சைக்கிள் எடுத்துக்கொண்டு பல கிமீ சென்று அங்குள்ள நிலையத்தில் விட்டுவிடலாம். எடுத்த இடத்திலேயே விட வேண்டிய அவசியம் இல்லை. வாடகை கார், ஆட்டோக்கள் செல்லாத தெருக்களில் கூட சைக்கிளில் செல்ல முடியும். இத்திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.இதற்காக மெரினா, பெசன்ட்நகர், அடையாறு, மயிலாப்பூர், அண்ணாநகர், சென்டிரல், கிண்டி, செனாய்நகர் உள்பட 378 இடங்களில் சைக்கிள் நிறுத்தங்களும், அதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையிலும் அமைய உள்ளது.
ஒருவர் மட்டுமே இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

சைக்கிளின் முன்புறமும் பின்புறமும் தானாக எரியும் எல்இடி விளக்குகள், வேகமாக இயக்குவதற்கு மூன்று கியர்கள், உயரத்திற்கேற்ப ஏற்றி இறங்கும் இருக்கை உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் ஆப் 
நவீன வாடகை சைக்கிள் சேவையை பயன்படுத்த தங்களின்  ஸ்மார்ட் போன்களில் ‘ஸ்மார்ட் பைக்’ என்ற செயலியை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். அதில் உங்களின் வங்கி விவரங்களை இணைத்திட வேண்டும். சைக்கிள் தேவைப்படும் போது அந்தச்செயலியில் பதிவு செய்து அருகில் உள்ள நிறுத்தத்தில் இருந்து நீங்கள்  சைக்கிளை எடுத்துச் செல்லலாம். ஒவ்வொரு சைக்கிளிலும் ஜி.பி.எஸ் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் மட்டுமே சைக்கிளின் பூட்டை திறக்க முடியும். எந்த நிறுத்தத்திலும் சைக்கிளை விட்டு செல்லலாம்.

சைக்கிள் மீது உள்ள குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம்.  பணமில்லா பரிவர்த்தனை முறையில், கைபேசி செயலி மூலமாகவே கட்டணம் பெறப்படும்.

சைக்கிளை நிறுத்தத்தில் விட்டு பூட்டியதும் எவ்வளவு மணி நேரம் சைக்கிளை ஓட்டி உள்ளர்கள், அதற்கான வாடகை எவ்வளவு, எங்கிருந்து புறப்பட்டீர்கள், எங்கு வரை சென்றீர்கள்  என்பது போன்ற அனைத்து விவரங்களும் உங்கள்  செல்போனில் தெரிந்து விடும்.
குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பும் வரை சைக்கிளின் பெடல் எத்தனை முறை சுற்றுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு உடலில் எவ்வளவு கலோரி குறைந்துள்ளது என்றும், கணக்கிடப்பட்டு தெரிவிக்கப்படுகிறது.

சைக்கிளின்  வாடகை கட்டணம் நாம் வைத்திருக்கும் செயலி மூலம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் சைக்கிளை எங்கு ஓட்டிச் சென்றாலும் சுலபமாக கண்காணிக்க முடியும்.
சைக்கிள் வாடகையாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு பின்பு ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் 9 ரூபாய் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

ஆப்பின் செய்முறை

‘ஸ்மார்ட் பைக்’  என்ற ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். நாம் கிரேடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு கொண்டு பரிவர்த்தனை செய்யலாம்.

சைக்கிள் மீது உள்ள குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து சைக்கிளை லாக் மற்றும் அன்லாக் செய்யமுடியும். இதில் பார்க்கிங் என்ற ஆப்சன் உள்ளது. நீங்கள் சைக்கிளில் சென்றுகொண்டு இருக்கும்பொழுது அருகில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு பார்க் என்ற ஆப்சனை கிளிக் செய்துவிட்டு திரும்ப வந்து  அதனை அன்லாக் செய்து கொள்ளலாம்.

பயண அட்டைதிட்டம்

பயண அட்டை திட்டம்

பயண

கட்டணம்

பலன்கள்

3 மாதம்

699

தலா இரண்டு முறை 1 மணி நேரத்திற்கு    அருகில் உள்ள நிறுத்தத்துக்கு சைக்கிளை கொண்டு சென்று பூட்டி விட்டு மீண்டும் செயலி மூலம் எடுத்துக்கொள்ளலாம்.
.


1 மாதம்

249

தலா இரண்டு முறை 1 மணி நேரத்திற்கு    உள்ள நிறுத்தத்துக்கு சைக்கிளை கொண்டு சென்று பூட்டி விட்டு மீண்டும் செயலி மூலம் எடுத்துக்கொள்ளலாம்


ஒரு நாள்

49

 1 மணிநேரத்திற்கு எத்தனை முறை  வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்

தனி பாதை

சென்னையின் பெரும் நகரம், முக்கிய சாலைகளில், சைக்கிள் ஓட்டுநர்களுக்கான தனிப்பாதை மற்றும் நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சைக்கிள் ஓட்டுவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,  சுற்றுச்சூழலை காக்கவும்,  மக்களுக்கு குறைந்த செலவில் வாகன வசதி செய்து கொடுக்கவும், உடல் நலம் ஆரோக்கியத்தை காக்கவும் வகை செய்யும். சென்னையின் இந்த நவீன திட்டத்திற்கு, மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :