பாவாடச் சித்தர்கள் கட்டிய வடபழனி முருகன் கோவில்

24-09-2018 05:52 PM

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் அமைந்துள்ள முருகன் கோவில் என்றால் முதலில் நினைவுக்கு வருவது வடபழனி முருகன் கோவில்தான். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருத்தலங்களுள் தொன்மை வாய்ந்த தலமாக விளங்குவது தென்பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். 

அங்கு முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் காட்சியளிக்கிறார். அதேபோல், வடபழனியிலும் முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் அருள்புரிகிறார்.

சித்தர் கோவில்

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முருக பக்தரான அண்ணாசாமி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். எத்தனை இடையூறுகள் நேர்ந்தாலும் அதனை கடந்து திருத்தணி, திருப்போரூர் ஆகிய முருகன் திருக்கோவில்களுக்கு தவறாமல் சென்று வழிபட்டு வந்தார்.

அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி,”உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் எங்கெங்கோ அவனைத் தேடிக்கொண்டு செல்கின்றாய்? நீ இருக்கும் இடத்திலேயே முருகனை வழிபடலாமே” என கூறியுள்ளார்.அதைக்கேட்டு உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த அண்ணாசாமி, நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை என இரு வேளைகளிலும் முருகனை வழிபட்டுவந்தார்.

ஒரு நாள் பழநியை சேர்ந்த சாது ஒருவரை அண்ணாசாமி நாயக்கரைச் சந்தித்தார். அவர் தெரிவித்தது போன்று திருத்தணியில் முருகன் சன்னதி எதிரில் காணிக்கையாக தனது நாக்கை அறுத்துக்கொண்டார். (நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). பாவாடம் தரித்துக்கொண்ட பின் தனக்கு இருந்த தீராத வயிற்று வலி தீரப்பெற்றார்.

குறிமேடையில் வைத்து பூஜை செய்த படம்தங்க ரதத்தில் வடபழனி ஆண்டவர்

ஒரு சமயம் பழநி யாத்திரைக்கு அண்ணாசாமி நாயக்கர் சென்றிருந்தார். தண்டாயுதபாணியை தரிசித்துவிட்டு மலையில் இருந்து கீழிறங்கி வந்தார். வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய வரைபடம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது.

அந்த படத்தினை பெற்ற அண்ணாசாமி நாயக்கர் அதனை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அப்படத்தினை வைத்து வழிபாடு நடத்திவந்தார். அந்த இடத்தில் சிறிய ஓலை கொட்டகையொன்று அமைத்து தம் குடும்பத்தை வேறிடத்திற்கு இடம் பெயரச்செய்தார். பழநி ஆண்டவர் படத்திற்கு பூஜை செய்து வழிபட்டு பக்தர்களுக்கெல்லாம் குறி சொல்லி அவர்களது குறைகளுக்கு தீர்வுகள் கூறி வந்தார்.

அண்ணாசாமி நாயக்கரிடம் தொண்டு செய்து வந்த இரத்தினசாமி செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த அண்ணாசாமி நாயக்கர், அந்த கீற்றுக் கொட்டகையை மாற்றி பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்தார். இரத்தினசாமி செட்டியார், அண்ணாசாமி நாயக்கரின் விருப்பத்தை ஏற்று அங்கு ஒரு திருக்கோவிலை கட்ட முடிவெடுத்தார்.

இரத்தினசாமி செட்டியார் வண்ணையம்பதி (வண்ணாரப்பேட்டை) சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழநி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார். குறிமேடைக்கு அருகில், இப்போது வடபழநி ஆண்டவர் எழுந்தருளும் கருவறைப்பகுதி உள்ள இடத்தில், செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று முதலில் அமைக்கப்பட்டது. இது 1865 ஆண்டில் கட்டப்பட்ட கோவிலாகும். இந்நிலையில் ஆவணி மாதம் அமாவாசைத் திதி, மக நட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்துவிட்டார்.

பின்னர், ஒருநாள் இரத்தினசாமி செட்டியார் கனவில் அண்ணாசாமி நாயக்கர் தோன்றி அவரையும் தம்மை போலவே ”பாவாடம்” தரித்துக் கொள்ளுமாறு பணிந்தார். அவ்வாறே ஆடிக்கிருத்திகை அன்று இரத்தினசாமி செட்டியாரும் பாவாடம் தரித்துக்கொண்டார். அடுத்த கிருத்திகை முதல் இரத்தினசாமி தம்பிரானும் குறி சொல்லும் ஆற்றல் பெற்றார். பின் சில நாட்களில் அண்ணாசாமி தம்பிரான் விரும்பியபடியே தொடங்கிய கோவில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது.

பழநியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பெற்று கும்பாபிஷேகமும் அமோகமாக நடைபெற்றது.

வழக்கம்போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே இரத்தினசாமி தம்பிரான் திருக்கோயில் பூஜைகளை நடத்தி வந்தார்.

வடபழநி ஆண்டவர் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் பரவியது. 1886ஆம் ஆண்டு மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ இரத்தினசாமி தம்பிரானும் இறைவன் திருவடி நிழலைடைந்தார்.

சண்முகர் (உற்சவர்) திருக்கல்யாணம்

அவருக்கு பின்னர் அவரது சீடர் பாக்கியலிங்க தம்பிரான் என்பவர்  ”பாவாடம்” தரித்துக்கொண்டு அருள்வாக்கு சொல்லிவந்தார். இப்போதுள்ள வடபழநி திருக்கோவிலின் கருவறையும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றிலும் கருங்கல் திருப்பணியை பாக்கியலிங்க தம்பிரான் அவர்களே செய்துள்ளார். கடந்த 1931ஆம் ஆண்டு புரட்டாசித் திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று பாக்யலிங்கத் தம்பிரானும் பழநியாண்டவர் திருவடியைப் சென்றடைந்தார்.

தென்பழநிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், அங்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்த முடியாதவர்களும் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு வந்து செய்யலாம். பழனியில் தரிசித்த பலனை இத்தல முருகனும் எள்ளளவு குறையாமல் வழங்கி அருள்பாலிக்கிறார்.

நாளாக நாளாக இத்திருக்கோயிலின் புகழ் மேலும் வளர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாக உயர்ந்தது. சித்தர்களும், சாதுக்களும், சான்றோர்களும், ஆன்றோர்களும், பக்தர்களும், முக்கியப் பிரமுகர்களும் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர்.

3 பேரின் சமாதிகள்

இத்திருக்கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களும் சமாதியடைந்த இடம் இத்திருக்கோயிலுக்கு பின்புறம் உள்ள நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் ”சித்தர்கள் ஆலயம்” அமையப்பெற்று ஒரே நேரத்தில் மூவரின் சமாதிகளை தரிசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. குரு பூஜையும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
இவர்கள் மூவரும் குறி சொல்லிவந்த குறிமேடையானது வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் ஆதிபீடம் என்ற பெயரில் இன்றும் காணப்படுகிறது. மேலும், முதல் முதலாக குறிமேடையில் வைத்து அண்ணாசாமி தம்பிரான் பூஜை செய்த வரைபடத்தையும் கோவிலில் இன்றும் காணலாம்.

காலணி அணிந்த கந்தன்

ஒரு கோவிலை எடுத்துக்கொண்டால், தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய 3 அம்சங்களில் ஏதோ ஒன்றினால் அந்த கோவில் பிரசித்திபெற்று விளங்கும். இத்தலத்தை பொறுத்தவரை மூலவர் அருள்மிகு வடபழநி ஆண்டவரின் மூலம் சிறப்பு பெற்றுள்ளதாக விளங்குகிறது.வடபழனி முருகன் (மூலவர்)
வடபழனி முருகன் (உற்சவர்)

இத்தல முருகனைப்போல் அறுபடை வீட்டிலும்கூட காண முடியாதது. மூலவர் வடபழனி ஆண்டவர் காலணிகளுடன் (பாத இரட்சை) அருள்பாலிக்கிறார். பாத காலணிகள் அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது.

பழனி முருகன் கோவிலில் உள்ள முருகனோ, இரு கால்களையும் நேர்க்கோட்டில் வைத்து காட்சி அளிப்பார். ஆனால், இந்த வடபழனி ஆண்டவரோ தனது வலது காலை சற்று முன்வைத்து காட்சியளிக்கிறார். தன்னிடம் வந்து தங்கள் குறைகளை கூறும் பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை தீர்க்க தானே முன்வந்து அருள தயாராக காத்திருக்கின்றார்.

பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தால் பிரார்த்தனை தலமாக உயர்ந்து, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கின்றது. பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளி ஆகியவற்றிலான வேல், பணம் ஆகியவற்றை கோவில் உண்டியல்களில் செலுத்துகின்றனர்.

மயிலாக மாறிய தேனீக்கள்

வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு  குடமுழுக்கு நடைபெற்றது. அந்த சமயம் கோவில் கொடிமரம் தங்கத்தால் மாற்றியமைக்கப்பட்டது.வேலாக மாறிய தேனீக்கள்
மயிலாக மாறிய தேனீக்கள்

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, கோவிலில் வழக்கம்போல் உச்சிகால பூஜை முடிந்து நடை சார்த்தப்பட்டது. கோவில் நிசப்தமாக இருந்தது. அப்போது திடீரென மூலவர் முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரே இருக்கும் கொடி மரத்தை தேனீக்கள் படையெடுத்து வந்து சுற்றி வலம் வந்தன. கொடிமரத்தில் மயில் வடிவில் தேனீக்கள் அமர்ந்தன.

மாலை 3 மணியளவில் கோவிலுக்குள் சென்ற ஊழியர்கள், கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம் மயில் தோற்றம் அமைந்திருந்தது.

மயில் தோற்றத்தில் தேனீக்கள் கூடு கட்டத் தயாரான தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்குள் சென்று மயில் வடிவத்தில் உள்ள தேனீக்களை கண்டு பரவசமடைந்தனர்.

அத்துடன் விட்டுவிடாமல், இரண்டு நாட்கள் அந்த கொடிமரத்திலேயே தஞ்சமடைந்த தேனீக்கள் 2011, மார்ச் 10 ஆம் தேதி முருகனின் ஆயுதமான அன்னை பார்வதிதேவி வழங்கிய வேல் வடிவத்திலும் மாறின. தலைக்கீழாக வேல் இருந்தால் எப்படி இருக்குமோ அதேபோல், தேனீக்கள் காட்சியளித்தன.

வேலாக மாறிய தேனீக்கள் சில மணிநேரங்களிலேயே பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் ஏற்படுத்தாமல் அங்கிருந்த சென்றுவிட்டன.

வேலும் மயிலும் துணை என்னும் வாசகத்தை போன்று முருகப்பெருமான் தான் இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் உணர்த்த தேனீக்கள் மூலம் இந்த அதிசயத்தை முருகப்பெருமான் புரிந்துள்ளது நிரூபனமாகியுள்ளது.

திருவிழாக்கள்

வடபழனி முருகன் கோவிலை பொருத்தவரை வருடத்தில் பல விழாக்கள் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. எனினும், இதில் 2 விழாக்கள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகப் பெருவிழாவும், சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும் இக்கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

சூரவதம் செய்ய புறப்படும் வடபழனி ஆண்டவர்சூரசம்ஹாரம்

வைகாசி விசாகம் பிரம்மோத்சவத்தின் 10 நாட்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் ஸ்வாமி வீதியுலா வருவார். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளிப்பார். இதில் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனியும், திருக்கல்யாணமும் உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக கருதப்படுகிறது. இந்த 10 நாட்களுக்குப் பின்னர், விடையாற்றி உற்சவம் துவங்கும். முதல் 10 நாட்கள் வீதியுலா சென்ற முருகப்பெருமான் மிகவும் சோர்வுடன் இருப்பார் என்பதால், அவர் இளைப்பாற வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வு சூரசம்ஹாரம். இந்த வைபவத்தில் முருகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் எழுந்தருள்வார். அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்படும் சண்முகர் ஆரவாரத்துடன் ஆடிக்கொண்டே புறப்படுவார். சூரனை சம்ஹார செய்ய அன்னை பார்வதியிடம் இருந்து வேலை வாங்கினார் முருகப்பெருமான். அதை நினைவுகூரும் வகையில், கோவிலில் உள்ள அன்னை மீனாட்சியம்மன் சன்னிதிக்கு முன்பு வந்து நிற்பார். மீனாட்சி அன்னையிடம் வைக்கப்பட்டிருக்கும் சக்திவேலை அர்ச்சகர் எடுத்துக்கொண்டு வந்து முருகப்பெருமானிடம் சேர்ப்பார். வேலைப் பெற்றதும் முருகப்பெருமான் வீரியத்துடன் ஆடிக்கொண்டே புறப்படுவார். இந்த நிகழ்வினை கான இரண்டு கண்கள் போதாது. பின்னர், வீதியுலா வந்து, பிரதான கோபுர வாசல் எதிரே சூரபத்மனை சம்ஹாரம் செய்வார். அன்றைய தினம் பல்லாயிரக்காண மக்கள் அங்கு கூடுவர். 

அமைவிடம்

இத்திருக்கோவில், சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலைவிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100அடி தொலைவிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிமீ தொலைவில் வடபழநியில் அமைந்துள்ளது.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர் கருத்துக்கள் :

பாபுராஜேந்திரன் 2019-04-16 10:00:36
19ம் நூற்றாண்டு என்பது சரியா?

செல்வம் 2019-01-17 12:46:01
அற்புதம்

Renu 2018-09-29 16:34:53
Superb Dinesh!!! What s article.. u r god gifted child...

Hari krishnan 2018-09-27 00:09:54
Super congratulations

Nachammai 2018-09-25 13:31:45
மிக அற்புதம் !!!

Suriya bharathi 2018-09-25 09:26:06
Really Very awesome Dinesh thanks a lot brother...

Jeyanthi 2018-09-24 22:22:32
Excellent information about our vadapalani murugar..Thank u so much Thambi..