இந்தியாவின் இசை ராணி

13-09-2018 02:29 PM

எம்.எஸ்.சுப்புலட்சுமி

16.9.1916 –- 11.12.2004

மதுரை, தமிழ்நாடு

இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்தவர்; பாரதியார் பாடல்களை விடுதலைப் போராட்டத்தின்போது பாடியவர்; பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் ஒலிக்கும் குரல் இவருடையதாகவே இருக்கும். அவர், இந்திய இசை உலகில் 'சுஸ்வரலஷ்மி' என்றும், 'எட்டாவது ஸ்வரம்' என்றும் பாராட்டப்பட்ட மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

அவரது பாட்டி வயலின் வாசிப்பவர், தாய் வீணை மீட்டுவதுடன் பாடுவதிலும் புகழ்பெற்றவர். சகோதரர் மிருதங்கமும் சகோதரி வீணையும் இசைக்கக்கூடிய கலைஞர்களாக இருந்தனர். இத்தகைய இசைக் குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயதில் இருந்தே இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு 17வது வயதிலேயே இசை வானில் தனது குரலையும் பரவச் செய்தார். அவரது அம்மா, வீணை இசைத்து இவர் பாடிய பாடல் இசைத்தட்டாக 1926இல் வெளிவந்தது. முதல் கச்சேரி 1929இல் சென்னை மியூசிக் அகாதெமியில் அரங்கேறியது. இனிமையான குரலால் அனைவரையும் தன்வசப்படுத்திப் புகழ்பெற்ற பாடகரானார். சுப்ரபாதம், பஜகோவிந்தம், குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம் போன்ற இவரது பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. திரைப்படத்தில் அறிமுகமாகிப் பாடியதுடன் நடித்தும் மக்கள் மனங்களில் நிறைந்தார். 1966இல் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு! உலகின் பல நாடுகளுக்கு கலாசாரத் தூதராகச் சென்று, இசை நிகழ்ச்சிகள் நடத்தி இந்தியாவின் புகழைப் பரப்பினார் இந்த இசை ராணி! இசை பெருகினால் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். தான் சேர்த்த செல்வத்தை நற்பணிகளுக்கும் சமூக சேவைக்கும் தானமாகக் கொடுத்த எம்.எஸ். புகழ், இசை இருக்கும்வரை நிலைத்திருக்கும்.

விருதுகள்: 1954: பத்ம பூஷண், 1968 சங்கீத கலாநிதி, 1974: ரமோன் மகசேசே விருது, 1975: பத்ம விபூஷண், 1996: கலாரத்னா, 1998: பாரத ரத்னா, 2004: வாழ்நாள் சாதனையாளர் விருது.Trending Now: