வயலுக்கு வராத காவேரி கடலில் தற்கொலை

08-09-2018 03:21 PM

காவிரி கடைமடைப் பாசன விவசாயிகள் என்றும் சபிக்கப்பட்டவர்களாக துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.காவிரி ஆற்றுக்கும் கங்கை, பிரமபுத்திரா, சிந்து ஆகிய வடமாநில நதிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு காரணமாக காவிரி டெல்டா விவசாய நிலம் என்றும் வானம் பார்த்த பூமியாகவே இருக்க வேண்டியுள்ளது.

இமயமலைப் பகுதியில் உள்ள பனி உருகி நீராக பெருகி ஆறாக பரிமாணம் பெருகிறது. ஆனால், காவிரியைப் பொருத்த மட்டில், தென்மேற்கு பருவமழை கேரளம், கர்நாடக மாநிலம், தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் பொழுதுதான் காவிரியில் நீர்பெருக்கு சாத்தியமாகிறது.

வடகிழக்கு பருவ மழையைவிட தென்மேற்கு பருவ மழைதான் குறுவை, சம்பா ஆகிய இரண்டு போகப் பயிர்களுக்கும் பாசன நீர் வழங்குகிறது.

தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டும்பொழுது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.

வழக்கமாக மலட்டு வயிறுகளாக விளங்கும் கபினி, ஹேமாவதி, ஹேராங்கி ஆகிய ஆறுகளில் உள்ள சிறிய அனைகளும் கிருஷ்ணா ராஜ சாகரமும் இனிமேல் தாங்காது என்ற நிலையில்தான் காவிரியில் வெள்ளி நீரைத் திறந்து விடுகிறது கர்நாடக அரசு.

வழக்கமான அளவுகளைத் தாண்டிய மழை என்றால் பில்லிகுண்டுலுவில் அளக்காமலே வெள்ள நீரைத் திறந்துவிடுகிறார்கள்.

தென்மேற்கு பருவமழை தவறாது பொய்க்காமல் பெய்ய வேண்டும். அல்லது பருவமழை மாற்றத்தால் குருட்டு மேகங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் மழையைக் கொட்ட வேண்டும். அப்பொழுதுதான் 1 லட்சம் கன அடி அளவில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

1 லட்சம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் 4 அல்லது 5 நாளில் மேட்டூரின் உயர்ந்தபட்ச கொள்ளவை எட்டிவிடமுடியும்.

120 அடியை மேட்டூர் அணையின் நீர்மட்டம் எட்டிவிட்டால் மேட்டூர் அணையில் அதற்குமேல் தண்ணீரை நிறுத்தி வைக்கமுடியாது, மேலும் வரும் தண்ணீரின் அளவுக்கு சமமான அளவு தண்ணீரை வெளியேற்றியாக வேண்டும் இல்லாவிடில் அணை தாங்காது.

எனவே, காவிரி டெல்டா விவசாயிகள் விரும்பினால் மட்டும் எல்லா ஜூன் 12ம் தேதியும் குறுவைப் பாசனத்துக்கு தண்ணீரைத் திறக்க முடியாது.

இயற்கை விநேதங்களை காவிரி டெல்டா விவசாயிகள் சமாளிக்க அவர்களுக்கு ஒரு கருவியாக உருவாக்கப்பட்டதுதான் மேட்டூர் அணை. காவேரியில் உள்ள பெரிய அணை, மேல் அணைக்கட்டு, கீழ் அணைக்கட்டு எல்லாம்.

விவசாயிகளுக்கு உதவும் இந்தக் கருவிகள் என்றும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

காவிரியிலிருந்து தண்ணீரை வயலுக்கு கொண்டு செல்ல கரிகாலன் அணை அமைத்தான். ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் கால்வாய்களை அமைத்தார்கள். கட்டளைக் கால்வாய், உய்யகொண்டான் கால்வாய் ஆகியவை 1000 ஆண்டுகள் பழமையானவை. இவை கரூர் மாவட்டத்திலிருந்து காவிரி நீரை ஏந்திவந்து திருச்சி, தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு வழங்குகின்றன.

காவேரி ஆறு - காவேரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு ஆகிய 3 பகுதிகளாகப் பிரிந்தபின் அவை வயல்களுக்கு நீரைக்கொண்டு போய் சேர்ப்பதை முக்கியப் பணியாக நிறைவேற்றி வந்துள்ளன.

வயல்களுக்கு நீரை வழங்குவதோடு, இந்தக் கால்வாய் பல ஆயிரம் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் ஆகியவற்றை நிரப்பும் பணியையும் செய்கின்றன.

வயல்களுக்கு மத்தியில் சிறிய நீர்க்குட்டைகளை அமைக்கும்பணி இன்றைய புதிய உத்தி என்று மகிழ்ச்சி கொண்டாடமுடியாது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள் அமைக்கப்பட்டு உபரித் தண்ணீரை குறைந்த காலத்துக்கு சேமித்து, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கிறார்கள் தமிழர்கள்.

காவிரி முழுக்க பூமியின் ஏற்றமான பகுதியிலிருந்து படிப்படியாக தாழும் பூமித்தாயின் மேல் வயல்களில் நிமிர்ந்து நிற்கும் நெற்பயிர்களுக்கு நீர் புகட்ட தவழ்ந்து வருகிறாள்.

கல்லும் மலையும் குதித்து வந்த காவேரி தமிழகத்தில் ஏறத்தாழ சமமான நிலப்பகுதியில் அங்குலம் அங்குலமாக சரியும் நிலத்தில் ஓடி வருகிறது. இந்த நீரோட்டம் தேக்கம் ஆகாமல் இருக்க வேண்டுமானால், காவிரியின் முழு அமைப்பும் தொடர்ந்து கண்காணித்து தூர்வாரப் படவேண்டும்.

முழுமையான, முன்னாள் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த உஸ்பெக்கிஸ்தான் நம்மைப் போலவே விரிவான நதி நீர்ப்பாசன அமைப்பைக் கொண்டது. அங்கு சிர் தார்யா, அமு தார்யா, ஜராப்ஷான், நரீன் ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. சிர் தார்யா நதியின் மொத்த நீளம் 1374 கிலோ மீட்டர், அபிதார்யாவின் நீளம் 1500 கிலோ மீட்டர், ஜராப்ஷான் 545 கிலோ மீட்டர் நீளமும், நரின் நதி 501 கிலோ மீட்டர் நீளமும் உடையன.

இந்த ஆறுகளின் பாசன நிர்வாகம் குறித்து ஆய்வு செய்து விரிவான ஆய்வு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு அறிக்கையின் முதல் வாக்கியம் இங்கு குறிப்பிடத் தகுந்ததாகும்.

உலகின் பல பகுதிகளில் 20ஆம் நூற்றாண்டில் நீர்ப்பாசன நிர்வாகத்துக்கு அரசு செலவிடும் தொகை குறைந்து போய்விட்டது. அதனால், நீர்ப்பாசன அமைப்புகளின் தரம் படிப்படியாக சீரழிந்துவிட்டது.

கங்கையைத் தூய்மைப்படுத்த தனி மத்திய அமைச்சகமே செயல்படுகிறது. கங்கையில் அடித்துவரும் வண்டல் மண் நீரோட்டத்தை குறைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஒரு வரைவு அறிக்கை தயார் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மலையிலிருந்து வரும் நதிகள் தங்கள் பாதை, அப்பகுதி மண்ணின் தன்மை, நீரின் வேகத்தின் அடிப்படையில் தண்ணீரில் வண்டல் ஏற்படுகிறது.

அணைகளில் நீர் தடுத்து நிறுத்தப்படும் பொழுது இந்த வண்டல் தளத்தில் படிகிறது.

ஆற்றிலும் தளத்தில் படிந்து இயல்பான நீரோட்டத்துக்கு தடையாகி விடுகிறது. இதனால், நதியில் உடைப்புகள் ஏற்படுவதுண்டு. இதனைத் தவிர்க்க அணையிலும், ஆற்றிலும் வண்டல் மண்ணை அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு வண்டல், மணலை அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள் செய்த பிறகே அகற்ற வேண்டும். மிகவும் அதிகமாக அகற்றப்பட்டால் அதனால் நதித்தளத்தின் மீது அமைக்கப்படும், பாலங்கள், மதகுகள் ஆகியவற்றின் திறன் பாதிக்கப்படுகிறது. அவற்றுக்கு நதிப்படுகை நிலைத்து இயங்குவதற்கு ஆதரவு தரமுடியாத நிலை ஏற்படுகிறது. இது கங்கை நதி தொடர்பாக தரப்பட்ட எச்சரிக்கை. காவிரிக்கும் இது பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

காவிரி நீர் அதன் டெல்டா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பாக கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உரிய அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறந்து, முந்தைய ஆண்டுகளில் கடைமடைப் பகுதிக்கு போதுமான தண்ணீர் கிடைத்தது என்று கடைமடைப் பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், 2018 ஆகஸ்டு மாதத்தில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டபோதும் கடைமடைப் பகுதிக்கு – நாகை மாவட்டம், திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல்வாரம் வரை தண்ணீர் வந்து சேரவில்லை என்று விவசாயிகள் உறுதி செய்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதை உறுதிசெய்யும் விடியோ காட்சிகளும் ஏராளமாக உள்ளன.

வெள்ளத்தினால் கர்நாடகத்திலும், அண்டை மாநிலமான கேரளத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன நிலையில், தமிழக கடைமடைப்பகுதி விவசாயிகள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

இந்த நிலையில் விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்வது அனைவரின் நலனுக்கும் அவசியமாகும்.

முன்னர் 1 வாரத்தில் கடைமடைப் பகுதியை வந்தடையும் காவிரி நீர் என்றனர் காவிரி விவசாயிகள்,  ஆனால், கடைமடைக்கு நீர் செல்ல 75 நாட்களாகும் என இப்பொழுது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மிகவும் மோசமான இந்த மாற்றத்துக்கான காரணங்கள் என்ன?

காவிரி ஆற்றில் வளர்ந்திருந்த காட்டுக் கருவேல மரங்கள் போன்ற முட் மரங்கள், புதர்கள் அகற்றப்படவில்லை. காவிரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் பக்கம் பொதுப்பணித்துறையின் கவனம் திரும்பவில்லை.சென்னை நகரில் பருவ மழைக் காலம் துவங்குவதற்கு முன்னரே மழை வெள்ளம் வடிவதற்கான கால்வாய்களைத் தூர்வாருகின்றனர்.

அதே போல காவிரியிலும், கால்வாய்களிலும் தூர்வர வேண்டாமா?

முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணை காய்ந்து கிடந்தபோது, அங்கு குவிந்திருந்த வண்டல் மண்ணை அகற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால், காவிரிக் கால்வாய்களில் வளர்ந்திருந்த மரம், செடி, கொடி, நாணல் புதர்களை அகற்றாதது ஏன்?

காவிரி கண்காணிப்புக்குழு, நெறியாற்றும் குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லை. அதோடு தென்மேற்கு பருவமழை பெய்யும், அதனால் வெள்ளம் வரும் என்று கனவில்கூட யோசிக்கவில்லை.

அதனால்தான் காவிரிக் கால்வாய்கள் எதுவும் சீரமைக்கப்படாத நிலையில் தண்ணீர் போய்ச் சேரவில்லை.

குறுவை, சம்பாவுக்காக தண்ணீர், தண்ணீர் என்று விவசாயிகள் கதறும்பொழுது, கொள்ளிடத்தில் 1 லட்சம் கன அடி தண்ணீர் ஓடி கடலில் கலந்ததை நினைக்கும்பொழுது விவசாயிகளின் ரத்தம் கொதிப்பதை குறைசொல்ல முடியாது.

மணல் கொள்ளை

காவிரியில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் சிறு ஓடையில்கூட லாரியை இறக்கி மணல் கொள்ளை கூச்சம், பயம் இல்லாமல் நடந்தேறுகிறது.

காவிரியில் மணல் குவாரிகள் நடத்த தேர்வு செய்யப்பட்ட இடங்களில் விதிகளை மீறி மணலை கணக்கு வழக்கு இல்லாமல் அள்ளி இருக்கிறார்கள். கொள்ளிடம் ரெகுலேட்டருக்கு முன்னும் பின்னும் உள்ள மணல் குவாரிகளில் இப்படி மணலைத் தோண்டி அள்ளியதால் அதன்மேல் பாலம் கூட நிற்காது என்று ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.

இதைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் ஆர்தர் காட்டன் அமைத்த ரெகுலேட்டர் காவிரி வெள்ளத்தில் உடைந்து தகர்ந்தது.

காவிரி நீர்ப்பாசன அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு கோதாவரி, துங்கபத்திரா நதியில் அணை, கால்வாய்களை அமைத்த பிரிட்டன் பொறியாளர் ஆர்தர் காட்டன் ஆன்மா தமிழக அரசை ஒருபோதும் மன்னிக்காது.  பென்னி குயிக்கின் சாபம் காவிரிக் கரையில் எதிரொலிப்பதை தமிழக விவசாயி ஒவ்வொருவரும் கேட்கிறார்கள்.

கூட்டுச் சதி

இவை எல்லாம் கண்ணுக்கு தெரிந்த காட்சிகளைக்கொண்டு வரையறை செய்யப்பட்ட உண்மைகள்.

இவற்றைத் தவிர சிந்திக்கும்பொழுது நம்மை உறையவைக்கிற சதி பற்றி காவிரியின் கடைமடைப் பகுதி விவசாயிகள் மத்தியில் விரிவாகப் பேசப்படுகிறது.

பெட்ரோல், மீத்தேன் எடுக்கலாம், இயற்கை எரிவாயு எடுக்கலாம் என்றும் காவிரியில் கச்சா எண்ணெய் ஓடுவதாகக் கனவு கண்ட மத்திய அரசு நாம் வேண்டாம்  வேண்டாம் என்று கூறியும் மேலும் 24 கிணறுகளைத் தோண்ட அனுமதி தந்திருக்கிறார்கள். அந்த இரண்டு கம்பெனிகள் யார் என்றால் இன்னும் நெஞ்சம் கொதிக்கும்.

தூத்துக்குடி காற்றை நஞ்சாக்கி, கழனியை பொட்டலாக்கிய ஸ்டெர்லைட் ஆலை கம்பெனியின் அப்பா கம்பெனி வேதாந்தா. தூத்துக்குடியில் எங்கள் கம்பெனியை மூடவைத்த தமிழக மக்களை ஒரு கை பார்க்கிறேன் என மீண்டும் திரும்ப வருகிறது வேதாந்தா.

தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்து அவச் சொல்லுக்கு ஆளான ஓஎன்ஜிசி அடுத்த கம்பெனி.

காவிரிப் பகுதியில் ஒரு போகமாவது விவசாயிகள் தங்கள் வியர்வையையும் ரத்தத்தையும் பாய்ச்சி விளைய வைப்பதால் தமிழர்களுக்கு இந்த தலைக்கணம். அந்தப் பகுதியெல்லாம் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனம் ஆனால், ஹைடிரோ கார்பன் எடுக்கவிடமாட்டார்களா?

அதற்கு வழி என்ன? காவிரியில் தண்ணீர் வந்தாலும் கடலுக்குத்தான் போக வேண்டும், வயலுக்கு செல்லக்கூடாது என்ற தொலைநோக்குச் சதிதான் காரணம் என்கிறார்கள் காவிரி கடைப்பகுதி விவசாயிகள்.
இந்தக் கருத்து வேரூன்றக் கூடாது. இந்தக் கருதுகோளை வேரோடு களைய வேண்டுமானால் முன்புபோல 1 வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும், இடையில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்ப வேண்டும். இதற்கு முழுமையாகத் தூர் வரவேண்டும். இதற்கு ஒவ்வொரு கால்வாய் பகுதிக்கும் ஒரு பணிக்குழுவை அமைத்து திட்டமிட வேண்டும்.

இந்தப் பணிக்குழுவில் விவசாயிகளுக்கு கஞ்சத்தனம் இல்லாமல் இடம் தர வேண்டும்.

காவிரி தமிழகத்தின் மகா தமனியாக உயிரோட்டத்துக்கு வகை செய்கிறது என்பதை உணர்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரியை அதன் அணைகளை சீரழித்து கால்வாய்களை தூர் வாராமல், தண்ணீர் கடைமடை பகுதிக்கு வரவிடாமல் காயப் போட்டால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா அரசை மன்னிக்காது.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :