ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் யாருக்கு? – ஜோதிடர் ஞானரதம்

29-04-2017 01:18 AM

என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெற்றோர்கள் அதிகமாக சொல்வது என்னவென்றால் என் மகள் அல்லது மகனுக்கு தார தோஷம் என்று சொல்கிறார்கள் மற்ற ஜோதிடர்கள். அதனால் என் மகளுக்கு திருமணத்திற்கு பிறகு கணவனை விட்டு பிரிந்து தனித்து வாழ்வாளோ அல்லது அவரவர் துணை திருமணம் ஆன குறுகிய காலத்தில் இறந்துவிடுவார்களோ அல்லது தார தோஷம் உள்ள ஜாதகருக்கு திருமணம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுமா என்றெல்லாம் கேட்டு அச்சப்படுகின்றனர். தார தோஷம் என்றால் என்ன? அதில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்று கேட்கின்றனர். இதோ அதற்கான விடையை மற்ற வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

தார தோஷம் என்றால் என்ன-?  

தார தோஷம் என்றால் என்பதை இங்கு தெளிவாக விளக்குகிறேன். தாரம் என்றால் தங்கள் துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். அதாவது தன் மனைவிக்கு தோஷம் ஏற்படுதல் என்பதாகும். ஒரு சில ஜோதிடர்கள் ஒரு சில ஜாதகத்தைப் பார்த்து உங்களுக்கு தாரம் இரண்டு. அல்லது தாரம் மூன்று என்று சொல்வதை கேட்டிருக்கின்றோம். இதனை எப்படி பார்க்க வேண்டுமென்றால் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாவது ஸ்தானத்திலோ அல்லது ஏழாவது ஸ்தானமான கணவன் அல்லது மனைவி ஸ்தானத்திலோ அல்லது லாப ஸ்தானத்தையும் மற்றும் களத்திரகாரகனோடு எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை நபர்கள் சம்பந்தபடுவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இதனைத்தான் தார தோஷம் என்கின்றனர். பொதுவாக குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நிற்க கூடாது. சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இந்த ஐந்தும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து அதாவது பல கிரகங்களுடன் சேர்ந்து நின்றால் குறிப்பாக சுக்கிரனுடனோ அல்லது ஏழாமதிபதியுடனோ பல கிரகங்கள் இருந்தால் தார தோஷம் உண்டாகின்றது. மேலும், களத்திர ஸ்தானத்தில் நீசம் பெற்ற சூரியன் அல்லது நீசம் பெற்ற செவ்வாய் இணைந்து இருந்தாலும் மற்றும் நீசம் பெற்ற சுக்கிரன் பாப கிரகங்களான ராகு கேதுக்களுடன் இணைந்து  இருந்தாலும் அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலோ அல்லது அந்த இடத்தில் கிரகங்கள் வலிமை இழந்து பல கிரகங்களுடன் சேர்ந்து இருப்பதும் தார தோஷத்தை உண்டாக்கும் என்கின்றனர்,

கீழ்க்கண்ட உதாரண ஜாதக கட்டங்களில் எங்கே என்ன கிரகம் இருந்தால் தார தோஷம் உண்டாகும் என பார்க்கலாம்.

உதாரண ஜாதகம் 1:  ஏழாவது ஸ்தானத்தில் நீசம் பெற்ற சுக்கிரனுடன் செவ்வாயும் ஆறாம் இடத்திற்கு அதிபதியான சூரியனும் இணைந்து இருப்பதால் இவருக்கு தாரம் இரண்டு என ஆயிற்று.

உதாரண ஜாதகம் 2: இவருக்கு லக்னம் மேஷம் ஏழாம் இடத்தில் நீசம் பெற்ற சூரியனுடன் அஷ்டமாதிபனும் மற்றும் ஆறாம் இடத்திற்கோனும் இணைந்து இருந்தாலும் இரண்டோ அல்லது மூன்று திருமணமோ ஏற்படுகிறது.

உதாரண ஜாதகம் 3: குடும்ப ஸ்தானத்தில் நீசம் பெற்ற செவ்வாயுடன் அஷ்டமாதிபதியான சனியும் மற்றும் புதனும் இணைந்து இருப்பதால் இவருக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல தாரம் ஏற்படலாயிற்று.

மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் முக்கியமானதை மட்டும் இங்கு எடுத்துரைத்திருக்கின்றேன். மேலும், மற்ற கிரகங்களின் அமைப்பையும் மற்றும் அவரவர்கள் இருக்கும் நட்சத்திரச் சாரம் மற்றும் நவாம்சம் போன்ற அமைப்பையும் பார்த்து விட்டுத்தான் முடிவெடுக்க கோருகிறேன். காரணம் மேலோட்டமாக பார்த்து விட்டு பலன் சொல்வது மிகவும் தவறானது. மேலும்,

எனது ஆய்வின் படி இவ்வாறு ஏழாவது மற்றும் இரண்டாவது  ஸ்தானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தும் சிறப்பாக வாழ்ந்த ஜாதகங்கள் என்னிடம் நிறையவே உள்ளது. பொதுவாக ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் இரண்டு என்ற சொல்லப்படும குடும்பஸ்தானம் ஏழு என்று சொல்லப்படும் களத்திர ஸ்தானம் மற்றும் எட்டு என்று சொல்லப்படும் மாங்கல்ய ஸ்தானம் போன்றவை திருமணவாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கூடவே அடுத்த அடுத்த திருமண யோகத்திற்கு லாபஸ்தான தொடர்பும் இருக்க வேண்டும். நான் கூறிய மூன்று ஸ்தானங்கள் மட்டும் பார்க்காமல் இந்த லாப ஸ்தானத்தையும் பார்த்து முடிவெடுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகின்றது. பொதுவாக இந்த ஸ்தானத்தின் அதிபதிகள் நன்கு அமர்ந்து இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இந்த ஸ்தானங்களில் எல்லாம் தீய கோள்கள் பல இருந்தால் பல தார யோகம் ஏற்பட்டு அவர்கள் இல்வாழ்க்கை இனிக்காமல் போய்விடும். மேலும், பல தார திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் முன் அந்த இடத்தின் மேல் சுபகிரகமான குரு பார்வை உள்ளதா இல்லையா அல்லது அந்த இடத்தில் பாவ கிரகங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதும் மற்றும் மற்ற ஸ்தானங்களையும் ஒட்டியே தீர்மானிக்க வேண்டும்.

மேற்பட்டவாறு நான்கூறியதைப் பற்றி அரை குறையாக தெரிந்து கொண்டு தாங்களே பொருத்தம் பார்ப்பதை தவிர்த்து நல்ல ஜோதிடரிடம் சென்று பொறுத்தம் பார்த்து திருமணம் செய்வதன் மூலம் தார தோஷத்தை தவிர்த்து அவர்களின் மணவாழ்க்கை துன்பத்திலிருந்து தவிர்க்க நன்கு பொறுத்தம் பார்த்து செய்வது மிக நல்லது.

* * *
Trending Now: