பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 23

17-04-2017 09:35 PMஎன்ன ஆயிற்று?

எங்கு எது தவறாகிப்போயிற்று?

ஒரு ஆகாத்தியம், ஒரு தப்பான காரியம்? ம்ஹூம், ஒன்றுமில்லை.

அப்புறம் எப்படி?

மாலை ஐந்து மணி சுமாருக்கு இடுப்பிலும் வயிற்றிலும் லேசான வலி. ஒன்பதுக்கு அதுவே இன்னும் அதிகமாய். இரவு பதினொன்றுக்கு டாக்டர் வந்து பார்ப்பதற்குள் அதன் கதை முடிந்துவிட்டிருந்தது.

"அபார்ஷன் ஆறதுக்குப் பல காரணங்கள் இருக்கு... ஆர்.ஹெச். பாக்டர் மாறியிருக்கலாம்; ஹார்மோன் குறைபாடு இருக்கலாம்; கர்ப்பப்பை இருந்த விதம் தப்பா இருக்கலாம்; வி.டி.ஆர்.எல். காரணமா இருக்கலாம்... எதுன்னு இப்ப எப்படிச் சொல்ல முடியும்? காரணத்தை டெஸ்ட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்! சில பெண்களுக்கு இப்படி திடும்னு கலைஞ்சுபோறது உண்டுதான்... நாலு நாள்ல உடம்பு கொஞ்சம் சரியானதும் க்ளினிக்குக்கு வாங்க... டெஸ்ட் பண்ணிப் பாத்துடலாம்..."

டாக்டர் நீளமாய் பேசிவிட்டுப் போய்விட்டார்.

ஆசைகளே இல்லாத மனசில் சின்னச்சின்னதாய் குழந்தையைப் பற்றின கனவுகள் தோன்றிவிட்டதால், சட்டென தேற்றிக்கொள்ளத் தெரியாமல் மோஹனா தவித்துதான்போனாள்.

கண்கள் கலங்கிப்போயின. விழிகளில் பூத்த நீர் கன்னத்தில் முத்துக்களாய் உருண்டன.

இரண்டு நாட்களுக்கு ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு பரத் அவள்கூடவே இருந்தான்.

"என்ன டார்லிங், இது! சின்னக் குழந்தை மாதிரி? நாம ரெண்டு பேரும் சின்னவாதான்... அப்பறம் என்ன? கமான், சியர் அப்!" என்றான்.

"ஸில்லி கேர்ல்! இப்ப என்ன நடந்துடுத்துன்னு நீ இத்தனை வேதனைப்படறே? எதுக்கும் அசையாத என் மோஹனாவா இதுன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு, டார்லிங்!" என்றான்.

அவள் முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினான். சமாதானம் செய்தான்.

கட்டிலை விட்டு முழுசாய் நாலு நாட்கள் மோஹனா இறங்க ஜெயம்மா இடம் கொடுக்கவில்லை.

வீட்டுக்காரியங்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று போட்டுவிட்டு, சதா மோஹனாவோடு அவள் அறையிலேயே குழந்தையுடன் இருந்தாள்.

"தைரியமா இரும்மா... கடவுள் சோதனை பண்ணிட்டுத்தான் நல்லதைக் குடுப்பார்... மனசு வேதனைப்படாதே..." என்றாள்.

"நீ கலங்கினா, என் தேகம் ஆடிப்போறதும்மா... அழாதே... திருஷ்டிப் பரிகாரம் கழிச்சாச்சுனு நா என்னைத் தேத்திக்கறேன்! இங்க பாரு... நீ அழுதா ஸந்த்யாவும் ஒண்ணும் புரியாம அழறா..." என்றாள்.

நாலு நாட்களில் மோஹனா சமாதானம் அடைந்துவிட்டாள்.

உனக்கு ஸந்த்யா இருக்கிறாளே, இன்னும் எதற்காக இன்னொன்று என்று கடவுள் நினைத்துவிட்டாரோ?

அன்பான குடும்பத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டேனே, அப்புறம் பேராசை எதற்கு, என்று நினைக்கிறாரோ?

உன் மனசு இன்னும் பக்குவப்படவில்லை, பொறுத்திரு என்கிறாரோ?

ஸந்த்யா என்னையே தன் அம்மாவாக நினைத்திருக்கையில், உடனடியாய் என் வயிற்றுக் குழந்தைக்கு நான் ஆசைப்பட்டது தவறுதானோ?

தனக்குத்தானே யோசனை பண்ணிய பிறகு தெளிந்துபோன மோஹனா, தன் பழைய விவேகத்தோடு, நிதானத்தோடு, அடுத்துவந்த நாட்களைக் கழிக்க முயன்றதை உணர்ந்த தினுசில், பரத் அவளைப் புண்படுத்தாமல் இருப்பதில் விழிப்புடன் இருந்தான்.

ஆபீஸ் நேரம் தவிர, மற்ற பொழுதை அவளுடனேயே கழித்தான். நாலு நாட்கள் ஆகி, அவளை வெளியில் அழைத்துப்போக அம்மா அனுமதித்ததும், காரில் ட்ரைவ் கூட்டிப் போனான். பீச்சில் வண்டியை நிறுத்திவிட்டு அவள் கையைத் தன் கையோடு சேர்த்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். கோவில்களுக்கு அழைத்துப் போனான். 'எல்லாம் சீக்கிரமா சரியாப்போயிடும்' என்று அடிக்கடி முணுமுணுத்தான்.

மோஹனாவுக்கு அபார்ஷன் ஆகி இருபது நாட்கள் போல ஆன சமயத்தில், புது வருஷம் பிறந்தது.

வருஷப் பிறப்புக்கு முதல் நாள் ஆபீஸிலிருந்து திரும்பிய பரத், ஒரு சின்னக் கவரை மோஹனாவிடம் நீட்டினான்.

"என்ன, பரத்?"

"பாரேன்..."

'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பரத்' என்று விலாசமிடப்பட்டிருந்த கவரைப் பிரித்தாள். புது வருஷப் பிறப்பைக் கொண்டாடும் பார்ட்டிக்கு அழைப்பிதழ்!

தஸ்தூர் க்ரூப் ஆப் கம்பெனியின் விருந்தா?

சக்ரவர்த்தி அண்ட் அஸோஸியேட்ஸில் வேலைபார்த்த நாட்களில், இந்தக் கம்பெனி சம்பந்தப்பட்ட பைல்களை மோஹனா பார்த்திருக்கிறாள்.

பன்னிரண்டோ பதிமூன்றோ கம்பெனிகளைக் கொண்ட நிறுவனம் அது. கப்பல் போக்குவரத்திலிருந்து, டிராக்டர் உற்பத்திவரை ஒரு துறை விடாமல் அசுரத்தனமாய் வளைத்துப்போட்டிருக்கும் பெரிய கம்பெனி.

அதன் சேர்மன் தஸ்தூரை ஒன்றிரண்டு முறைகள் மோஹனா சந்தித்திருக்கிறாள்.

தாட்டியான சரீரம். அறுபதுக்குக் கொஞ்சம் குறைந்த வயசு. வெள்ளைக் குறுந்தாடி. மேல்நாட்டு ஸூட். பைப். அட்டகாசச் சிரிப்பு. ஆள் பலே பணக்காரத்தனத்துடன் இருப்பார்.

சீனியர் பார்ட்னர் ரமணனுக்குச் சினேகிதர் என்ற முறையில் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் என்ற தொடர்பும் கம்பெனியோடு உண்டு.

அந்த தஸ்தூரா அனுப்பியிருக்கிறார்?

"நாளைக்கு இதுக்கு நாம்ப போகணும், டார்லிங்..."

பரத்தை நிமிர்ந்து பார்க்காமலேயே, "நானுமா?" என்றாள் மோஹனா.

"ம்... இன்னிக்கு தஸ்தூரே போன் பண்ணி உன்னையும் கண்டிப்பா அழைச்சிண்டு வரணும்னு சொன்னார், டார்லிங்!"

"நா எதுக்கு, பரத்? எனக்கு வரணும்போலவே இல்லியே! வேணும்னா நீங்க மட்டும் போயிட்டுவாங்களேன்..."

மோஹனாவை நெருங்கி உட்கார்ந்து, அவளை அணைத்துக்கொண்டான் பரத்.

"தஸ்தூர் எத்தனை பெரிய மனுஷன்னு உனக்குத் தெரியும்... நமக்கு எத்தனை முக்கியமான க்ளையண்டுன்னும் தெரியும்... அவரே உன்னைக் கூப்பிட்டப்பறம், நீ வராட்டா நன்னாயிருக்காது, மோஹனா... அவர் வருத்தப்படுவார்! நீ வரலேன்னா, நானும் போப்போறதில்ல! நாளைக்கு ரமணன், மத்த சீனீயர் பார்ட்னர்ஸ் எல்லாம் வருவா... ரொம்பப் பெரிய பார்ட்டியா இருக்கும்... உனக்கு நிச்சயம் பிடிக்கும்! நீ வந்துதான் ஆகணும்..."

"ரமணன், மத்தவாளோடெல்லாம் அவா பொண்டாட்டியும் வருவாளா?"

"மிஸஸ் ரமணன் எங்கேயுமே வர்றதில்லியே, மோஹனா... அந்த மாமி ரொம்ப மடி... பழங்காலம்! சிவராம் பொண்டாட்டி நிச்சயம் வருவா..."

"எனக்கு வரணும்போல இல்ல, பரத்... ப்ளீஸ்... என்னை விட்டுடுங்கோளேன்..."

பதில் சொல்லாமல் பரத் மோஹனாவை ஒரு நிமிஷம் வெறித்தான். அப்புறம், உன் இஷ்டம் என்பதுபோலத் தோள்களைக் குலுக்கியபடி எழுந்தான்.

அன்றிரவு பரத் கொஞ்சம் விட்டேத்தியாக இருக்கிற மாதிரி மோஹனாவுக்குப் பட்டது.

நான் வரவில்லை என்று சொன்னதில் வருத்தமா?

தூங்குவதற்காகப் படுத்த கணவனின் அருகில் சென்று உட்கார்ந்தாள்.

"நீங்க ட்ரிங்க் பண்ணாம இருக்கறதா சத்தியம் பண்ணினா, நா வரேன்... பன்னெண்டு மணி அடிச்சதும் நாம புறப்பட்டு வந்துடலாம்னா, நா வரேன்..." என்றாள் மெதுவாக.

'அட அசட்டுப்பெண்ணே... இதற்காகவா வரமாட்டேன் என்றாய்!' என்கிற தினுசில் கண்களை விரித்து அவளைப் பார்த்த பரத், "ட்ரிங்க் இல்லாட்டா என்ன, டார்லிங்? சத்தியமா நா குடிக்க மாட்டேன், ஓகே?" என்றுசொல்லி, அவள் உள்ளங்கையை வாயில் வைத்து முத்தமிட்டான்.

மறுநாள் இரவு எட்டு மணிக்கு மேல் பார்ட்டிக்குக் கிளம்பினார்கள்.

"உடம்பு சரியில்லாத பொண்ணு... ரொம்ப இழுத்தடிக்காதே, பரத்..." என்று அம்மா சொன்னதற்குத் தலையாட்டிக்கொண்டே பரத் காரில் ஏறினான்.

தஸ்தூர் வீடு நுங்கம்பாக்கத்தில் இருந்தது.

வீடு என்று அதைச் சொல்லக்கூடாது... மாளிகை!

தோட்டத்து மரங்களும், வீட்டின் முகப்பும், நகைகள் அணிந்த மாதிரி வண்ண வண்ண விளக்குகளில் மின்னின.

தோட்டத்தில், புல்வெளியில், வராந்தாவில், உள்கூடங்களில் என்று, எங்கு பார்த்தாலும் பணக்காரர்கள், பெரிய பணக்காரர்கள், மகா பெரிய பணக்காரர்கள்...

தஸ்தூர் வாசலிலேயே நின்று இவர்களை வரவேற்றார்.

"ஏன் லேட்டு?" என்றவர், பரத்தைத் தழுவிக்கொண்டார். மோஹனாவின் கையைப் பிடித்துக் குலுக்கி, "குட் ஈவ்னிங், மை டியர்! ஹெள ஆர் யூ? யூ லுக் ப்யூட்டிபுல்!" என்றார்.

மோஹனா சிரித்து, "பைன், தேங்க்யூ..." என்றதும், "தோட்டத்துக்கு இவங்களை அழைச்சுட்டுப் போ..." என்று பக்கத்திலிருந்த ஆளை ஏவினார் தஸ்தூர்.

புல்வெளியில் கூட்டமாய் விருந்தாளிகள் குழுமியிருந்தனர். இதமான இசை.

தூரத்தில் ரமணன்... பக்கத்தில் ஷ்யாம்... அங்குமிங்குமாய் தெரிந்த முகங்கள்...

வெள்ளைச் சீருடை அணிந்த பணியாள், மதுபானங்கள் நிறைந்த தட்டை பரத்தின் முன் நீட்டினான். மோஹனாவை நிமிர்ந்து பார்த்த பரத், தயக்கத்துடன், "வேண்டாம்ப்பா... ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ் கொண்டுவா..." என்றான்.

மறு நிமிஷம் அன்னாசி ரசம் வந்தது.

பரத் கையில் கிளாஸை எடுத்த கணத்தில், ஷ்யாம் கிட்டத்தில் வந்தான்.

"ஹேய், பரத்... என்ன இது? பைனாப்பிள் ஜூஸா? உனக்கு என்னாச்சு?"

பரத் பதில் சொல்லாமல் அசட்டுச் சிரிப்புடன் நின்றான்.

ரமணன், இன்னும் தெரிந்த ஓரிருவர் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.

"என்ன பரத், ஏதாவது விரதமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல..."

பரத் நப்பாசையோடு மோஹனாவை நிமிர்ந்து பார்த்தான்.

"அவளை எதுக்குப் பாக்கறே, பரத்? என்னமோ அவ உத்தரவுக்காக நீ காத்துண்டிருக்கற மாதிரி! இந்த வேஷமெல்லாம் வேண்டாம்!"

நண்பர்கள், ரமணன் அடித்த ஜோக்கிற்குச் சிரித்தனர்.

"என்ன ஜோக்? எனக்கும் சொல்லுங்க..." தஸ்தூர் வந்து சேர்ந்துகொண்டார்.

"பரத் பைனாப்பிள் ஜூஸ் எடுத்துண்டிருக்கான்!"

"அப்படியா?"

கண்களை விரித்துக்கொண்டு பரத்தைப் பார்த்த தஸ்தூர், அவன் கையிலிருந்த கிளாஸை சுவாதீனத்துடன் பிடுங்கினார். "பேரர்..." என்று பணியாளை அழைத்தார். ஸ்காட்ச் கிளாஸ் இரண்டை எடுத்து, ஒன்றை அவனிடம் கொடுத்து, இன்னொன்றை நீட்டி "சியர்ஸ்!" என்றார்.

இனியும் எப்படி வேண்டாம் என்பது?

மோஹனா இருந்த திசையைப் பார்க்காமல் பரத், "சியர்ஸ்" என்றான்... குடித்தான்.

இரண்டு நிமிஷம் அந்தக் கூட்டத்தில் நின்ற தஸ்தூர், மோஹனாவின் கையைப் பற்றி, "கமான், யங் லேடி... தெரியாத விருந்தாளிகளை உனக்கு நா அறிமுகப்படுத்தறேன்... இன்னிக்குப் பூரா உன் அழகான கம்பெனி எனக்குத்தான்! பரத் ஒண்ணும் சொல்லமாட்டான்..." என்று சொல்லியபடி கிளம்பினார்.

அடுத்த அரைமணியில் மோஹனா யார்யாரையோ சந்தித்தாள்.

பரத் எங்கே என்று பார்வையால் துழாவினபோது, ஒவ்வொரு முறையும் கையில் ஒரு முழு கிளாஸுடன் பரத் தன்னை மறந்து யாருடனோ சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பது புரிந்தது.

புது வருஷம் பிறந்த பிறகுதான் விருந்து. அதுவரை, மது, இசை, நடனம், லக்கி டிப், 'ஹெளஸி ஹெளஸி' விளையாட்டு, பரிசுகள், சிரிப்பு, போதை, சந்தோஷம்...

பதினொன்றே முக்கால் ஆனதும் விருந்தாளிகள் பரபரப்படைந்தார்கள். செத்துப் போகும் வருஷத்துக்கு டாடா சொல்லவும், பிறக்கப்போவதை வாழ்த்தவும் தயாரானார்கள்.

பரத் எங்கே?

தேடியவரைக்கும் மோஹனாவுக்குத் தெரியவில்லை.

நூறு பேர்கள் இருக்கும் கூட்டத்தில் எங்கே போனார்?

"ஹலோ..."

தஸ்தூர் யாரையோ வரவேற்பது புரிந்தது. மோஹனா திரும்பினாள்.

கிரி...

கடவுளே! இவன் எங்கேயிருந்து வந்தான்?

"என் இவ்வளவு லேட்?"

"இன்னொரு பார்ட்டிக்குப் போகவேண்டியிருந்தது..."

"வா... ஒரு ட்ரிங்க் எடுத்துக்க! இது மோஹனா... இது கிரி..."

பரத் எங்கே என்கிற தினுசில் புருவத்தை உயர்த்தின கிரி, கிட்டத்தில் அவன் இல்லை என்பது புரிந்ததுபோல, "ஹலோ, மோனா..." என்றான், மென்மையாய் இழுத்து.

விளக்குகள் அணைந்தன.

"ஹாப்பி நியூ இயர்!"

இந்த நிமிஷம் பார்த்து இந்த கிரி ஏன் வந்தான்? பரத் எங்கே? அவர் கிரியை என்னருகில் பார்த்தால், என்ன நினைப்பார்?

இருட்டில் தஸ்தூருக்கும் கிரிக்கும் நடுவில் நின்றுகொண்டிருந்த மோஹனாவினுள், விவரிக்கத்தெரியாத பயம் கொப்புளமாய் வெடித்தது.

 (தொடரும்)Trending Now: