வீட்டுக்கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி?

20-01-2016 11:16 PM

கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் வீட்டு மாடி, வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து காய்கறிச்செடிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. காய்கறிச்செடிகளுக்கு கடைகளில் உரங்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிய முறையில் உரத்தை தயாரித்து இடலாம்.

1. வீட்டுக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம்

நாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளின் தோல் கழிவுகளை சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி அதில் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால் உரக்குழி தயாராகி விடும். இதே போல பயன்படுத்தப்பட்ட டீத்தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் சிறந்த இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரத்தை தயாரிக்கலாம். இக்கழிவு நன்கு வெயிலில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும் போது அவை நன்கு வளரும். சுவையான காய்கனிகள் கிடைக்கும்.

2. மாட்டுச்சாண குழம்பு உரக்கலவை

நிலக்கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டுச்சாணம் ஆகியவற்றை தலா ஒரு கிலோ சேகரித்து ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர், கோமியம் சேர்த்துக் கலந்து வாய்ப்பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும். இக்கலவை நொதிக்க 4, 5 நாட்கள் ஆகும். 5 நாட்களுக்குப் பின், ஒரு கோப்பைக் கலவையுடன் 10 கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து ஒரு அடி தள்ளி ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

3. பாக்டீரியா பூச்சிக்கொல்லி

சூடோமோனாஸ் என்னும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்றுப் பைகளுக்குப் பயன்படுத்தலாம். சூடோமோனாஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது.

தகவல்: சி. ராஜாபாபு, உதவிப் பேராசிரியர், வேளாண் உதவி மையம், பாளையங்கோட்டை.Trending Now: