இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –25

08-11-2016 03:37 PMசலித்துப் போய்ப் பேனாவை மூடி வைத்தான் விஸ்வம். திறந்து கிடந்த லெட்ஜரிலிருந்து பார்வையை மீட்டு எதிர்ச் சுவரின் பக்கம் திரும்பினான். படம் எதுவுமில்லாமல் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொன்றாய்ப் பெரிசாகத் தேதிகள் மட்டும் அச்சிடப்பட்ட காலண்டர் ஒன்று கண்ணில் பட்டது. இந்த எண்களோடு தான் நிரந்தரமாக ஐக்கியப்படுத்தப்பட்டு விட்டாற்போல் தோன்றியது. இப்போதெல்லாம் ராத்திரி கனவில் கூட எண்களாக வருவதை நினைத்துக் கொண்டான். டோட்டல் டாலி போடும் போது கணக்கில் வராமல் அலைக்கழித்த பத்து பைசாவை கனவிலேயே கண்டுபிடித்திருக்கிறான்! அதே மாதிரி டிரயல் பேலன்ஸ் ஷீட், பாஸாக வேண்டிய பில், டைப் பண்ண வேண்டிய மெமோ, என்ட்ரி போட வேண்டிய வவுச்சர்ஸ் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரும். இல்லாவிட்டால் எல்லாம் சேர்ந்து மொத்தமாக வரும். சுந்தர் ராஜனோடு பேசுகிற மாதிரி பியூன் சங்கரலிங்கத்தை காபி வாங்கிக் கொண்டு வரச்சொல்கிற மாதிரி, வரதராஜன் கூப்பிட்டு எதற்கோ திட்டுகிற மாதிரி, ஆபீஸ் தன் ஸப் கான் ஷியஸ்னஸ்ஸில் அவ்வளவு துாரம் இறங்கிப் போயிருப்பதை நினைத்துக் கொண்டான்.

மெல்ல ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. தலையை வலிக்கிற மாதிரி இருந்தது. பியூனை கூப்பிட்டுக் காபி வாங்கிக்கொண்டு வர சொன்னான்.

''காபியா சார், அப்படியே எனக்கும் ஒரு கப் வாங்கிண்டு வரச் சொல்லுங்க!'' என்றான் டைப் அடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி. அவனுக்கும் சேர்த்துக் காசு கொடுத்தனுப்பிவிட்டு, மெதுவாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

மரங்களுக்கிடையில் பளிச்சிட்ட வானத்தின் நீலம் மனசை லேசாக்கியது. கத்திக் கொண்டிருந்த காகம் ஒன்று விருட்டென்று பறந்து போயிற்று. மாமரத்தின் மேலிருந்து சரசரவென்று ஓர் அணில் இறங்கி வந்தது. பின்னாலேயே துரத்திக் கொண்டு இன்னோர் அணிலும் இறங்கியது. இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாகச் சருகுகளில் ஓடிச் சென்றன. அந்த விளையாட்டையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வம் டெலிபோன் அடிப்பதைக் கேட்டுச் சட்டென்று திரும்பினான். ரிஸீவரை எடுத்து செக்ஷன் பெயரைச் சொன்னான்.

''சுந்தர்ராஜன்...?'' கேட்ட குரலிலிருந்த வரதராஜனைக் கண்டுபிடித்துக் கொண்டான்.

''குட் மார்னிங் சார்! ஹி ஈஸ் ஆன் லீவ் டுடே!'' என்றான்.

''ஓ! அப்படீன்னா நீ கொஞ்சம் மேல வறியா?''

''எஸ், சார்!''

ரிஸீவரை வைத்துவிட்டு, சீட்டை விட்டு எழுந்த போது, பியூன் காபி கொண்டு வந்தான்.

''அப்படியே மேஜை மேலே வச்சு மூடிட்டுப்போ! வந்து சாப்பிட்டுக்கறேன்!'' என்று சொல்லிவிட்டு போனான். இரண்டு படிகளை ஒன்றாய் கடந்து வரதராஜனின் அறைக்கதவை விரலின் முட்டியால் மெதுவாக தட்டினான். 'எஸ்' என்ற குரல் கனத்து வந்ததும் உள்ளே நுழைந்து மறுபடியும் 'குட்மார்னிங்' சொன்னான்.

''மார்னிங்! அந்த கிங் அண்ட் கம்பெனி பில்லை கிளியர் பண்ணிடும்படி அன்னைக்கே சொன்னேனே, ஏன் பண்ணலை? இன்னிக்குக் கூட அவன் போன் பண்ணிக் கேட்டான்.''

''ஸாடர்டேவே பண்ணியாச்சு சார். இன்னிக்கு அவங்களுக்கு செக் போயிடும்.''

''சரி, தாம்ஸன் அண்ட் வில்லியம்ஸுக்கு டிராப்ட் அனுப்பினீங்களே, அதனோட அமவுண்ட் எவ்வளவு தெரியுமா?''

''த்ரீ தவுஸண்ட் அண்ட் ஆட், சார். இதோ சரியா பார்த்துண்டு வந்து சொல்றேன்.''

''வரும்போதே பார்த்துண்டு வரக்கூடாதா? அதுக்கு ஒரு தரம் கீழே போய் மேல வரணுமா? இந்த மாதிரி எவ்வளவு டைம் வேஸ்ட் ஆறது தெரியுமா?''

''ஸாரி, ஸார்! நீங்க இதை பத்தித்தான் கேக்கப் போறீங்கன்னு தெரியலை.''

அந்த பதிலைக் கேட்டு அவர் முகத்தை சுழித்தார்.

''லுக், மிஸ்டர் விஸ்வம்! இந்த மாதிரி பதில் சொல்லிட்டா போறாது. நீங்க இந்த ஆபீஸுக்கு வந்து எத்தனை மாசமாச்சு? இன்னும்கூட இதெல்லாம் பிடிபலைன்னா எப்படி? சுந்தர்ராஜனை பார்க்கிறீங்களே, ஒரு தரம் கூப்பிட்டா எதைக் கேட்பேனோன்னு நாலு பைலையும் துாக்கிண்டு வரலை? அதையெல்லாம் பார்த்துக் கத்துக்க வேணாமா? ஒவ்வொண்ணையுமா சொல்லித் தரணும்?''

''ஐ'ம் ஸார், சார்!''

''ஓ.கே. டோண்ட் ரிபீட் இட் அகெய்ன்! அந்த அமவுண்டைப் பார்த்து போன்ல சொல்லுங்க போறும். அப்படியே அவங்க இந்த தரம் மெடீரியல் சப்ளை பண்ணியிருக்காங்கன்னும் பாருங்க.''

''சரி சார்.''

''சுந்தர்ராஜன் இன்னும் எத்தனை நாள் லீவுல இருக்கார்?''

''நாளைக்கு வந்துடுவார், ஸார்.''

''எஸ்.யூ கேன் கோ. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் யு ஹேவ் டு பிக் அப் யுவர்செல்ப் ஓ.கே.''

''ஓ.கே. சார்!''

மாடியிலிருந்து இறங்கி மறுபடியும் செக்ஷனுக்குள் நுழைந்தபோது மிகவும் களைப்பாக உணர்ந்தான் விஸ்வம். பைலை புரட்டி விவரங்களை குறித்துக் கொண்டு போனில் வரதராஜனிடம் தெரிவித்துவிட்டு காபி கோப்பையை எடுத்தபோது காபி ஆறிக் கிடந்தது. குடிக்கப் பிடிக்காமல் கோப்பையை திரும்பவும் அதே இடத்தில் வைத்து சாஸரால் மூடினான்.

டாய்லெட்டிலிருந்து திரும்பி செக்க்ஷனுக்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி, ''சார், கொஞ்ச முன்னால உங்களுக்கு ஒரு போன் வந்தது,'' என்றான்.

அவன் தலை நிமிர்ந்து பார்த்தான்.

''யாரோ லேடீஸ் வாய்ஸ்!'' என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

''நீங்க மேல போயிருக்கீங்கன்னு சொல்லிப் பத்து நிமிஷத்துக்கப்புறம் திரும்ப போன் பண்ணச் சொல்லியிருக்கேன்!''

''ஐஸீ! யாருன்னு பேர் சொல்லலியா?''

''கேக்கறதுக்குள்ள வச்சுட்டாங்க!''

லேடீஸ் வாய்ஸ்! யாராக இருக்கும் என்று யோசித்தான் அவன். அகிலாவா இருக்குமோ? அகிலா எதற்கு போன் பண்ணப் போகிறாள்?

அவன் யோசித்துக் கொண்டிருந்த போதே டெலிபோன் அடித்தது. எடுத்து தன் பெயரைச் சொன்னான். ஒரு விநாடி மறுபக்கத்திலிருந்து பதில் இல்லை.

''ஹலோ!'' என்றான் கொஞ்சம் அழுத்தமான குரலில்.

''நான்தான் ஜமுனா பேசறேன்!''

''ஜமுனாவா!''

தன் வியப்பைக் குரலில் காட்டாமல், ''ஹெள ஆர் யூ?'' என்று கேட்டான்.

''பைன்! நீங்க எப்படி இருக்கீங்க?'

''ஆஸ் யூஷுவல்.'

''வேலை கிடைச்சதைக் கூட என் கிட்ட சொல்லக் கூடாதா? அவ்வளவு கோபமா உங்களுக்கு?''

''கோபம் ஒண்ணுமில்ல. ஜமுனா! பத்ரி சொல்லியிருப்பான்னு தெரியும். அதனாலதான் பேசாம இருந்துட்டேன்.''

''யாரோ சொல்றா, அப்புறம் எப்படியோ தெரியறது. ஆனா நீங்களா ஏன் சொல்லலைன்னுதான் வருத்தமா இருந்தது. என் லெட்டர் கிடைச்சுதா?''

''ம்... கிடைச்சுது!''

''அதை படிச்சப்புறங்கூட கோபம் குறையலையா?''

''கோபம் ஒண்ணுமில்லேன்னு சொன்னேனே!''

''கோபமில்லாமதான் ரெண்டு மாசத்துக்கு மேல் பார்க்காம, பேசாம இருந்தீங்களா...?''

''... .... ....''

''ஐம் ஸாரி விஸ்வம்! ரியலி வெரி ஸாரி! அது அவ்வளவு துாரம் உங்க மனசை புண்படுத்தும்னு நினைக்கலை!''

''அதை நான் கம்ளீட்டா மறந்துட்டேன். ஜமுனா, இப்ப எனக்கு உன்மேல ஒரு கோபமும் இல்ல...!''

''ரியலி....?''

''ஐ மீன் இட்.''

''அப்படீன்னா சாயந்தரம் பார்க்கலாமா?''

''இன்னிக்கு சாயந்திரமா?''

''ம்...''

அவன் யோசித்துக் கொண்டே சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.

''என்ன பதிலே இல்லை?''

''ஒண்ணுமில்ல. இன்னிக்கு வர முடியுமான்னுதான் பார்க்கறேன்.''

அதற்குள் ஆபரேட்டர் குறுக்கிட்டு நிறைய கால்கள் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிவித்து சீக்கிரம் முடித்து கொள்ளச் சொன்னான்.

''ஓ.கே! ஜமுனா வரேன்!'' என்றான் அவன் அவசரமாக.

''சரியா அஞ்சு மணிக்கு ஆபீஸ் வாசலுக்கு வந்துடணும்.''

''அஞ்சு மணிக்கு முடியாது. அஞ்சரைக்கு வரேன்.''

''ஓ.கே.!''

போனை வைத்ததும் சட்டென்று ஏதோ இறுக்கம் தளர்ந்த மாதிரி இருந்தது. மனசு லேசாயிற்று. பரபரவென்று வேலை பார்க்கத் தொடங்கினான். இன்வாய்ஸ், பில், ஸ்டேட்மென்ட் என்று நான்கு மணி வரை வேலையில் போயிற்று. பின், கான்டீனுக்கு போய் டீ குடித்துவிட்டு வந்தபோது ரிசப்ஷனில் ராமகிருஷ்ணன் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது.

''எங்கே இப்படி?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

ராமகிருஷ்ணனும் சிரித்தபடி எழுந்து நின்றான்.

''நம்ம மாகஸீனுக்கா மூர்த்தி சில டிராயிங்ஸ் தரேன்னு சொல்லியிருந்தான். அவன் வீட்டுக்கு போய் வாங்கிண்டு உன்னை பார்க்கலாம்னு வந்தேன். உன்னால இப்ப என்கூட வெளியில வர முடியுமா? உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...''

''இப்பவா...'' என்று கை கடிகாரத்தை பார்த்தான் விஸ்வம். பின் சிறிது நேரம் யோசித்தான்.

''அஞ்சு நிமிஷம் இருக்கியா வந்துடறேன்'' என்றான்.

''ஓ.எஸ்.'' என்று சொல்லிவிட்டு மறுபடியும் சோபாவில் உட்கார்ந்து கொண்டான் ராமகிருஷ்ணன்.

விஸ்வம் உள்ளே போய் பைல்களை எடுத்து டிராயரில் வைத்த பூட்டினான். இரண்டு மூன்று கடிதங்களை எடுத்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தியிடம் போனான்.

''நான் கொஞ்சம் அவசரமாக போக வேண்டியிருக்கு. அதனால இதையெல்லாம் நீங்களே பார்த்துடறீங்களா?'' என்று கேட்டான். கிருஷ்ணமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான். செக்க்ஷனில் மேலும் இரண்டு பேர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். ராமகிருஷ்ணனிடம் வந்து ''வா, போகலாம்,'' என்றான்.

இரண்டு பேரும் ஆபீஸை விட்டு வெளியில் வந்தார்கள். ''உங்க ஆபீஸின் சரவுண்டிங் ரொம்ப நன்னா இருக்கு!'' என்றான் ராமகிருஷ்ணன்.

''அது ஒண்ணுதான் இங்கே ஆறுதலான விஷயம்!'' என்று சொல்லி சிரித்தான் விஸ்வம்.

சிறிது துாரம் போனதும் ''இப்ப எங்க போகலாம்?'' என்று ராமகிருஷ்ணனே கேட்டான்.

விஸ்வம் பக்கத்திலிருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றின் பெயரைச் சொல்லி, அங்கு போகலாம் என்பதை தெரிவித்தான்.

இரண்டு பேரும் உள்ளே நுழைந்து ஒரு மூலையாக பார்த்து உட்கார்ந்து கொண்டார்கள். வெறும் காபி மட்டும் ஆர்டர் பண்ணினார்கள்.

''.... ஸோ, நெக்ஸ்ட் இஷ்யூவுக்கு மேட்டர் எல்லாம் ரெடியாயிடுத்து, இல்லையா?'' என்று ஆரம்பித்தான் விஸ்வம்.

''ம்.... இந்த இஷ்யூ வந்துடும். இதுக்கப்புறம்தான் என்ன பண்றதுன்னு தெரியலே!'' என்று இழுத்தான் ராமகிருஷ்ணன். அந்த குரல் என்னவோ போல் இருக்கவே, ''என்ன கிருஷ்ணா?'' என்று கேட்டான் விஸ்வம், நெற்றியில் சின்ன சுருக்கம் ஒன்று எட்டிப் பார்த்தது.

''ஒண்ணுமில்ல விஸ்வம். இனிமேல நம்ம பத்திரிகை வருமான்றதுதான் சந்தேகமா இருக்கு...?''

''ஏன்...?''

''என்னால இனிமேல இந்த மாதிரி இதுல 'கமிட்' பண்ணிக்க முடியாது. அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. டாக்டர் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்லியிருக்கார். இனிமேல அவரால பிஸினஸைக் கவனிக்க முடியாது. அண்ணா ரெண்டு பேரும் ரெண்டு பாக்டரியையும் கவனிச்சுக்கறா. ஆபீஸ் விஷயத்தைக் கவனிக்கப் பொறுப்பான ஒருத்தர் தேவையாயிருக்கு. யாரையும் நம்பி விட முடியாத நிலைமையில் இருக்கு...!''

விஸ்வம் அவனையே பார்த்துக் கொண்டு நிதானமாக காபியை உறிஞ்சினான்.

''இன்னொரு யூனிட் போடணும்னு பாங்க்லே நிறைய ஓவர் டிரா பண்ணியிருக்கு. ஆனா அந்த பணம் முழுசும் வெறும் ரா மெடீரியல்லே முடங்கிக் கிடக்கு. இப்ப என்ன பண்ணறதுன்னு தெரியலை. எப்படி பணத்தை புரட்டறதுன்னு புரியலை. ரெண்டு நாளைக்கு முன்னால அப்பா என்னை கூப்பிட்டு வச்சுண்டு நிறைய பேசினார். இனி மேல நீ பொறுப்பா இருக்கணும். ஆபீஸைக் கவனிச்சுக்கணும்னெல்லாம் சொன்னார். அவர் எப்பவும் இந்த மாதிரியெல்லாம் பேசினதே இல்லை. விஸ்வம். அவருக்கிருக்கிற கமிட்மென்ட்ஸ், லயபிலிடீஸ் இதை பத்தியெல்லாம் பேசினார். ஒரு சின்னக் குழந்தையைக் கவனிக்கிற மாதிரி இப்போ பிஸினஸைக் கவனிச்சாத்தான் உண்டு. இல்லேன்னான்னு சொல்ற போதே அவர் கண்ணெல்லாம் கலங்கிடுத்து விஸ்வம்...

அவரோட பதினெட்டாவது வயசிலேர்ந்து பிசினஸ் பண்றார். இப்போ வயசு அவருக்கு அறுபத்தி மூணு. இத்தனை வருஷமும் ஒரு நாள் ஓய்ச்சல் கூட இல்லாம இதுக்காகப் பாடுபட்டிருக்கார். அவர் ஆரம்பத்துல முதலா போட்டது மூவாயிரம் ரூபாதான். இப்போ அது மூணு பேக்டரியா வளர்ந்திருக்குன்னா அவரோட உழைப்பும் புத்திசாலித்தனமுந்தான் காரணம். அன்னைக்கு ராத்திரி பக்கத்தில உட்கார வச்சுண்டு ஒவ்வொண்ணா அவர் சொல்றபோது மனசு கலங்கிப் போயிடுத்து. அவருக்காக எது வேணும்னாலும் செய்யலாம்னு தோணித்து. ஒரு நிமிஷம் நீ ஞாபகத்துக்கு வந்தே. உங்கண்ணா – எங்கண்ணா – எல்லார் ஞாபகமும் வந்தது. அந்த மாதிரி ஆயிட வேண்டியதுதான். வேற வழி இல்லேன்னு தோணித்து...!''

விஸ்வம் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு, அவனை பார்த்தான். உதட்டில் வருத்தமாக ஒரு சிரிப்பு ஓடி மறைந்தது.

''என்ன விஸ்வம், சிரிக்கறே?''

''ஒண்ணுமில்லே...! நீ வேற வழி இல்லேன்னு சொன்னதை நினைச்சுப் பார்த்தேன்.''

''வேற என்ன பண்றது, சொல்லு? நீ என்ன பண்ணினே? உன்னால என்ன பண்ண முடிஞ்சது...? நேத்திக்கு எங்க ஆபீசுக்கு போனேன். ஆபீசுக்குப் பாங்க்குக்குமா ஸ்டேட் மெண்டடை துாக்கிண்டு அலைஞ்சேன். வீட்டுக்கு வரபோது ராத்திரி மணி பத்தாயிடுத்து. நாள் தவறாம பத்துக்கும், பதினொண்ணுக்கும் வர அண்ணாக்களை நினைத்துப் பார்த்தேன். ரெண்டு மன்னியோட ஞாபகமும் வந்தது. அவாள்ளாம் மனசாலயும், உடம்பாலயும் குடும்பத்துக்காக அலையறபோது நான் மட்டும் இப்படி ஊர் சுத்திண்டுருக்கேன்னு கஷ்டமா இருந்தது. இனிமேல என் பங்குப் பொறுப்பை ஏத்துக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டேன். அதனாலதான் வீட்டுக்கு வர ஒவ்வொரு நாளும் ராத்திரி மணி பத்தோ பதினொன்ணோ கூட ஆகும். காலைலேயும் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிடணும். அப்படி இருக்கற போது என்னால வேற எந்த வேலை செய்ய முடியும் சொல்லு, விஸ்வம்...?''

விஸ்வம் ஒன்றும் சொல்லவில்லை. அவனையே பரிவோடு பார்த்தான். கனமாக ஒரு பெருமூச்சு மட்டும் வெளிப்பட்டது.

'இது மட்டும் இல்லை, விஸ்வம். உன்னோட முடியாமை அப்புறம் என்னோட முடியாமைக்குப் பின்னால மீதிப் பேர் முடியாமையும் வந்துண்டிருக்கு. மூர்த்திக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. லைப்ல அவனோட கமிட்மெண்ட்ஸும் அதிகமாறது. இனிமேல அவன் கிட்டே இருந்து அதிகமா எதிர்பார்க்க முடியாது. அதே மாதிரி பத்ரிக்கு வேலை கிடைச்சிருக்கு...!'

''எங்கே?'' என்று கண்கள் பளிச்சிடக் கேட்டான் விஸ்வம்.

''கல்கத்தாவிலே, அதை சொல்ல நாலு நாளா உங்க வீட்டுக்கு நடையா நடக்கிறான். நீ இன்னும் ஆபீஸ்லேர்ந்து வரலைன்னு உங்கப்பாதான் பதில் சொல்லியனுப்பறாராம். இந்த பதினெட்டாம் தேதி கிளம்பறான். அதுக்குள்ள ஒரு நாள் கட்டாயம் உன்னை வந்து பார்ப்பான். ராஜாராமும் டிரான்ஸ்பர் ஆகி பவானிசாகர் போகப் போறான்.''

''அப்போ எல்லோரும் நம்மைவிட்டுப் பிரியப் போறான்னு சொல்லு...!''

ராமகிருஷ்ணன் பதில் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை. அமைதியாக விஸ்வத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே ஐந்து நிமிஷம் போயிற்று. பின்னர் மெதுவாக விஸ்வந்தான் பேச ஆரம்பித்தான்.

''இவ்வளவு சீக்கிரத்துல இப்படி பத்திரிகையை நிறுத்த நேரிடும்னு நினைக்கலை. என்ன பண்றது, கிருஷ்ணா? இந்த மாதிரி நாம் நினைக்காதது எத்தனையோ நடந்துண்டிருக்கு! அதுல இதுவும் ஒண்ணு. இந்த இஷ்யூ வரட்டும். அதுக்கப்புறம் வேற எப்படியாவது இதைக் கொண்டு வர முடியுமான்னு பார்க்கலாம். வேற வழியே இல்லாமப் போனா என்ன பண்ண முடியும்?''

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தான் ராமகிருஷ்ணன்.

இதற்காக அவன் அதிகம் சங்கடப்படுவான் என்று நினைத்துக் கொண்டு வந்திருந்தான். சொல்வதற்குக் கூட மிகவும் தயங்கினான். ஆனால் அவன் இவ்வளவு சுலபமாக எடுத்துக் கொண்டது அவனை ஆச்சரியப்படுத்தியது.

''நீ இவ்வளவு ஈஸியா எடுத்துப்பேன்னு நினைக்கலை, விஸ்வம்!'' என்று தன் ஆச்சரியத்தை தெரியப்படுத்தினான் விஸ்வம் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தான். மேலும் ஐந்து நிமிஷம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இருவரும் எழுந்து வெளியில் வந்தார்கள்.

''ஸோ?'' என்று அவன் முகத்தைப் பார்த்தான், ராமகிருஷ்ணன்.

''ஒரு வேலையா பாரீஸ் கார்னர் வரைக்கும் போகணும், நீ...?''

''நான் ஜமுனாவை பார்க்க போகலாம்னு இருக்கேன். அஞ்சரை மணிக்காக அவ ஆபீசுக்கு வரேன்னு சொல்லிருக்கேன்!''

''ஓ.கே. அப்ப நான் வரட்டுமா? அப்புறமா பார்க்கலாம்.''

'சரி' என்று தலையசைத்தான் விஸ்வம்.

ராமகிருஷ்ணன் எதிர்ப்பக்கம் நடந்து திரும்புகிறவரை பேசாமல் நின்று கொண்டிருந்தான். பின்பு, மெதுவாக நடக்க ஆரம்பித்தான். அவன் பேசிவிட்டுப் போனதெல்லாம் மனசில் வந்து பாரமாய் அழுத்தியது. 'பாவம், ராமகிருஷ்ணன்!' என்று சொல்லிக் கொண்டான். தன்னைப் போலவே, 'ஆபிஸ், ஆபீஸ்!' என்று அலையப் போவதை நினைத்தபோது கஷ்டமாக இருந்தது.

'நீ இவ்வளவு ஈஸியா எடுத்துப்பேன்னு நினைக்கலை...' என்று அவன் சொல்லிவிட்டுப் போனது நினைவுக்கு வந்தது. உடனே ருக்மிணியின் ஞாபகம் வந்தது.

'உனக்கு தெரியாது, கிருஷ்ணா. இப்படி எல்லாத்தையும் சுலபமா எடுத்துண்டு ஈஸியாப் போயிடறது என்பதை கற்றுக் கொடுத்ததே அவள்தான்..!' என்று சொல்லிக் கொண்டான்.

அந்த நர்ஸரி ஸ்கூல் வந்தபோது ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். ஸ்கூல் விட்டு நேரமாகி இருக்க வேண்டும். யூனிபார்ம் அணிந்த உருவங்கள் எதுவும்க ண்ணில் பட வில்லை. உள்ளே பியூன்களும் யாரோ பெரியவர்களும் மட்டும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவனை பரவசப்படுத்தக் கூடிய மழலைக் கலந்த அந்தக் கொச்சை ஆங்கிலத்தை கேட்க முடியவில்லை.

மவுனமாக மேலே நகர்ந்து ஜமுனாவின் ஆபீசுக்குப் போனான். அந்த சிவப்பு கட்டடம் இப்போது எந்த வெறுப்பையும் ஏற்படுத்தவில்லை. வாசலில் அதே கூர்க்கா நின்று கொண்டிருந்தான். உள்ளேயிருந்து சைக்கிள்களும் கார்களும் வெளியில் வந்தன. நிறைய பேர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சுகளில் இப்போது எந்தக் கர்வமும் இல்லை. எல்லாம் கேட்டுப் பழகிப் போய்விட்டது. எல்லா ஆபீஸிலிருந்தும் வெளியே வரும்போது பேசுகிற எல்லாப் பேச்சுக்களும் அநேகமாக ஒன்றாகத்தான் இருக்கின்றன...!

அவன் தலை நிமிர்ந்த போது ஜமுனா தனியாக படிகளில் இறங்கி வருவது தெரிந்தது. நீலப் புடவையில் இருந்தாள் அவள். அவனை பார்த்த போது முகம் பளிச்சிட்டது. லேசாக ஒரு புன்னகை எட்டிப் பார்த்தது. விஸ்வமும் மெதுவாக புன்சிரிப்பாக சிரித்தான். அவள் அருகில் வந்ததும் ''ஹலோ!'' என்றான்.

(முற்றும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்Trending Now: