இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –22

17-10-2016 11:16 PMகூட்டம் முடிந்ததும் ருக்மிணியை ஓர் ஓரமாக நிற்கச் சொல்லி நண்பர்களோடு பேசப் போனான் விஸ்வம். பத்திரிகையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். கவிதைகள் அவ்வளவு திருப்தியாய் இல்லை என்றார்கள். புத்தக விமர்சனம் விமர்சகரின் குறுகிய பார்வையைத்தான் காட்டுகிறது என்றார்கள். சினிமா விமர்சனமும், இன்டர்வியூவும் நன்றாக இருப்பதை தெரிவித்தார்கள். ஏற்கனவே பத்திரிகை ஆரம்பித்து நிறுத்தின நண்பர்கள் அதன் சிரமங்களைப் பற்றி பேசினார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நிதானமாய் பதில் அளித்தான் விஸ்வம். பின்னர், அவர்களிடம் விடை பெற்று ராமகிருஷ்ணனிடம் போனான்.

''மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம் கிருஷ்ணா. இப்ப கொஞ்சம் சீக்கிரமாய் போகணும். மன்னி காத்துண்டிருக்கா...!'' என்றான்.

''ஓ. எஸ். நீ போ விஸ்வம்! நாங்க பார்த்துக்கறோம்,'' என்று சொல்லி அனுப்பினான் ராமகிருஷ்ணன்.

ருக்மிணியிடம் வந்து, ''வாங்க போகலாம்'' என்றான்.

இரண்டு பேரும் நடக்க ஆரம்பித்தார்கள். கட்டடத்தை விட்டு வெளியே வந்ததும், ''இப்போ மணி என்ன ஆறது?'' என்று கேட்டாள் ருக்மிணி.

கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, ''எட்டு பத்து!'' என்றான்.

''அவ்வளவுதானா...? அப்படின்னா பேசிண்டே காத்தாட நடந்து போயிடலாமே?''

''ஓ.எஸ். நான் ரெடி.. ஆனா உங்களால் அவ்வளவு துாரம் நடக்க முடியுமா?''

''ஏன் முடியாது? பேசிண்டே போனா எந்த சிரமமும் தெரியாது.''

''சரி, அப்படின்னா நடக்கலாம்.''

இருவரும் பேசாமல் நடந்தார்கள். சிறிது துாரம் போனதும் ருக்மிணிதான் பேச்சை ஆரம்பித்தாள்.

''பத்திரிகை நன்னா வந்திருக்கு. சைஸ் கூட படிக்க வசதியா அழகா இருக்கு!'' என்றாள்.

விஸ்வம் ஒன்றும் சொல்லவில்லை.

''இன்டர்வியூ எனக்கு ரொம்ப புடிச்சது. அதை யார் டிரான்ஸ்லேட் பண்ணினது?'' என்று கேட்டாள்.

''நான்தான்!'' என்றான் விஸ்வம்.

''சினிமா ரிவ்யூ?''

''பத்ரி தெரியுமா உங்களுக்கு? கொஞ்சம் குள்ளமா, அம்மைப் புள்ளி மூஞ்சியோட மீசை வச்சுண்டு வருவானே...? அவன்தான் பண்ணினான்.''

''ரிவ்யூ நன்னா வந்திருக்கு. ஆனா டெக்னிகல் வார்த்தைகள் தான் கொஞ்சம் அதிகமா இருக்கு. அதை குறைச்சிருக்கலாம்னு தோணறது..!''

''ஆகட்டும். பத்ரிகிட்ட நீங்க இப்படிச் சொன்னதா சொல்றேன்!'' என்று சிரித்தான் விஸ்வம். ருக்மிணியும் புன்னகை செய்தான்.

சாலையில் கார்கள் எண்ணி விடுகிற அளவில் போய்க் கொண்டிருந்தன. ஒன்றுவிட்டு ஒன்றாகத் தெரு விளக்குகள் எரிந்தன. கடைகளில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் தொங்கின. மவுண்ட் ரோடை அந்த அரை இருட்டில் பார்க்க அழகாக இருந்தது. ஜெமினி மேம்பாலத்தை கடந்து திரும்புகிறவரை பேச்சு எதுவும் இல்லை.

விளக்கு வெளிச்சத்தில் புடவைக்குள்ளிருந்து ருக்மிணியின் பாதம் பளிச்சிட்டு மறைவதைப் பார்த்துக் கொண்டே நடந்தான் விஸ்வம். டிரைவ் இன்னைத் தாண்டினதும் மெதுவாகக் கேட்டாள் ருக்மிணி.

''நான் பரோடா போயிட்டாக்கூட மறக்காம எனக்கு பத்திரிகையை அனுப்பீங்க, இல்லையா?''

அனுப்புவதாக தலையாட்டினான் அவன். பின், ஒரு விநாடி கழித்து ''நீங்க பரோடா போறேன்னு சொல்றதைக் கேக்கறப்போதே கஷ்டமா இருக்கு...!'' என்றான்.

ருக்மிணி பேசாமல் இருந்தாள்.

''பரசு போனதே வீடு வெறிச்சுனு ஆயிடுத்து. இன்னும் நீங்களும் போயிட்டா'' என்று முடிக்காமல் நிறுத்தினான். மேலே பேச்சு வராமல் தவித்தான்.

அவன் முகத்தை பார்த்து வருத்தமாய் சிரித்துக் கொண்டே, ''என்ன பண்றது?'' என்றாள் ருக்மிணி.

''எனக்குக்கூட கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்ண முடியும்?''

''ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியறது. ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு...!''

''... ... ...''

''பரசுவை அங்கே தனியா விட்டுட்டு இங்கே இப்படி இருக்கிறதும் உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும்...''

அவள் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம் என்று போயிற்று. பின், பேச ஆரம்பித்தபோது, குரல் தழைந்து வந்தது.

''உண்மைதான். அன்னிக்கு அவர் ரயில்ல போன போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. மனசை என்னமோ பண்ணித்து. வயிற்றை சங்கடப்படுத்தித்து. சொல்லத் தெரியாமல் ஒரு அவஸ்தை. ரெண்டு நாள் வரைக்கும் அதே அவஸ்தை அரிச்சுண்டிருந்தாலும் கூடவே ஒரு தைரியமும் இருந்தது. பதினைஞ்சு நாளோ ஒரு மாசமோ அப்புறம் அவர் கூடத்தானே இருக்கப் போறோம்ற தைரியம். இப்ப இது அப்படியில்லை. உங்களையெல்லாம் விட்டுட்டுப் போனா திரும்பி வந்துட முடியப் போறதில்லை. இத்தோட அகிலா கல்யாண த்துக்குத்தான் வரணும்! அது எப்போன்னு யாருக்குத் தெரியும்?''

அவள் குரல் கரகரப்பதை முதல் தடவையாகக் கேட்டான் விஸ்வம். உதட்டிலிருந்த அந்த புன்னகை மறைந்து போயிற்று. கண் பளபளப்பது தெரிந்தது. அவனாலும் பேச முடியவில்லை. மனசை ஏதோ இருக்கிற்று. தலை குனிந்து மவுனமாகவே நடந்தான்.

''உங்கண்ணா ரயில்ல ஏறுகிற கடைசி நிமிஷம் வரை வருத்தப்பட்டு ண்டேதான் போனார். இப்படி ஒரு டிரான்ஸ்பேர் இப்ப வந்திருக்க வேணாம்னு சொல்லிண்டே இருந்தார். முக்கியமா உங்க மேல எல்லாப் பொறுப்பையும் சுமத்தறதுல அவருக்கு ரொம்ப கஷ்டம்...'' என்று சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அப்போதும் அவன் தலை நிமிரவில்லை. மேலே பேச ஆரம்பித்தபோது அவள் குரல் இன்னும் தழைந்து வார்த்தைகள் எல்லாம் மிகவும் மென்மையாக வெளிப்பட்டன.

''உங்கண்ணா ரொம்ப உயர்ந்த மனுஷர். அவர் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாதோன்னு சில சமயம் எனக்கு தோணும். இந்த மாதிரி ஒரு மனசான்னு ஆச்சரியமாக் கூட இருக்கும். அந்த மனசுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு அடிக்கடி கேட்டுப்பேன்!''

சட்டென்று திரும்பி அவளை பார்த்தான் விஸ்வம். மனசை உலுக்கிவிட்ட மாதிரி இருந்தது. உடம்பு ஒரு தரம் சிலிர்த்தது. 'என்ன இது! இதில் யார் உயரம் அதிகம்! இந்த மாதிரி பொறுக்கிப் பார்த்து ஸ்வாமி எப்படி ஒன்றாய்ப் போட்டது!'

''என்ன அப்படி பார்க்கறீங்க? நான் உண்மையைத்தான் சொல்றேன். அந்த மாதிரி ஒரு மனசு உங்கண்ணாவுக்கு! தப்பா எதையும் நினைக்கத் தெரியாது. யாரையும் தப்பாப் பார்க்கத் தெரியாது. கோபப்படத் தெரியாது. பிறத்தியர் கஷ்டத்தை பார்த்துண்டிருக்கத் தெரியாது. தன் கஷ்டத்தை வெளியே சொல்லிக்கத் தெரியாது. கல்மிஷமில்லாமல் அப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்க முடியாது. அந்த மாதிரி ஆயிரத்துல ஒருத்தர் – லட்சத்துல ஒருத்தராவது இருப்பாரான்றது கூட சந்தேகம்தான்.

ஆனா அவரென்னவோ நான் இடம் மாறி வந்துட்ட மாதிரி நினைச்சுக்கிறார். எங்கேயோ கோபுரத்துல இருக்க வேண்டியவள்ங்கிற மாதிரி பழகுறார். அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு. நான் அழகா இருக்கறதுதான் கஷ்டமா இருக்கு. அழகா இருந்துட்டா அதுக்கு இன்னொரு அழகுதான் சொந்தமாகணும்னு தானா நினைச்சுண்டு அவஸ்தை பட்டா என்ன பண்றது?''

தலையை குனிந்து கொண்டான் விஸ்வம். 'ருக்மிணி, பேசாதேயேன். என்னால தாங்க முடியலையே!' என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், பேசாமல் இருந்தான்.

''உங்காத்லேர்ந்து பெண் பார்த்துட்டுப் போனதுக்கு அப்புறம் எங்கப்பா வந்து என்கிட்ட பேசினார். 'அம்மா, பையன் கொஞ்சம் கறுப்புதான். எஸ்.எஸ்.எல்.ஸி.தான் படிச்சிருக்கான். சம்பளமும் அவ்வளவா இல்லை. ஆனா, குணம்இருக்கே, அது ஒண்ணு போறும். நான் பார்த்து வளர்ந்த பையன், நீ என்ன சொல்றே?'ன்னு கேட்டார். 'ஏம்ப்பா, நிறம், படிப்பு, சம்பளம் இதெல்லாம்தான் தகுதியா? மனுஷா மனுஷாளா இருக்கிறது பெரிய தகுதி இல்லையா?'ன்னு கேட்டேன். ஒரு தரம் அசந்து போன மாதிரி என்னை பார்த்தார். அப்புறம் பேசாமல் போயிட்டார்.''

''என்ன சொன்னீங்க? திருப்பிச் சொல்லுங்க!'' என்று குரல் நடுங்கக் கேட்டான் விஸ்வம்.

'ஆமாம் விஸ்வம். நமக்கு மனுஷத்தனம் மட்டும் இருந்தாப் போறும்னு நினைக்கிறேன். வேற என்ன தெரியணும்? மீதி எல்லாத்தையும் தெரிஞ்சுண்டு இது தெரியாமப் போனா என்ன பிரயோஜனம்? அன்னிக்கு ஒரு நாள் நீங்க உங்க ஜமுனாவைப் பத்தி பேசினபோதே சொல்லணும்னு நினைச்சேன். என்னால அவ கூட சந்தோஷமா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு!'ன்னு நீங்க சொன்னதைக் கேட்டபோதே சொல்லணும்னு நினைச்சேன். ஆனா அப்ப சொல்லியிருந்தா அது அவ்வளவு சரியா இருந்திருக்காது இப்ப சொல்றேன். நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். சந்தோஷமா இருக்கத்தான் நாமெல்லாம் பிறந்திருக்கோம்னு. சிரிச்சுண்டே இருந்துட்டா சந்தோலுமா இருந்துடலாம் பார். அந்த சிரிப்பு மூஞ்சியிலேயும், மனசுலேயும் வந்துட்டா சந்தோலுத்துக்கு குறைச்சலே இல்லேம்பார். அவர்தான் எனக்கு சிரிக்கக் கத்துக் கொடுத்தார். எதுக்கும் எப்போதும் சிரிக்கணும்னு சொல்லிச் சொல்லிப் பயிற்சியாகவே மாத்திட்டார். உங்ககிட்ட அன்னிக்குப் பேசிண்டிருந்த போது இதையெல்லாம் சொல்லிடணும்னு தோணித்து. ஆனா ஒரு சந்தர்ப்பம் வரும், சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன்.

இப்ப அந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சொல்லிடறேன். நீங்களா ஒரு கனமான குண்டைத் துாக்கி வச்சுண்டு அவஸ்தைப் படறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கு. எதுக்கு இந்த அவஸ்தையெல்லாம்? கொஞ்சம் ஈஸியா இருந்துட்டு போனால்தான் என்ன? சாதாரணமா இருக்கிறதிலே என்ன தப்பு சொல்லுங்கோ? என்று கேட்டு நிறுத்தினாள் ருக்மிணி.

அவன் பதில் சொல்லவில்லை. தலை குனிந்து மவுனமாய் நடந்து கொண்டிருந்தேன். அவனிடமிருந்து பதில் வராது என்று புரிந்து கொண்ட ருக்மிணி, மீண்டும் தானே பேசினாள் :

''எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கறது நல்ல நினைப்புதான். ஆனா தெரிஞ்சுண்டு என்ன பண்ணப்போறோம்? தெரிஞ்சுண்டவாள்ளாம் என்ன பண்றா? நாம பண்ணறதைத்தான் பண்றா. அதுக்காகத் தெரிஞ்சுக்கறதே அவசியம் இல்லேன்னு சொல்லலை. தெரியாததனால தப்பு ஒண்ணுமில்லேன்னுதான் சொல்ல வரேன். அபத்தமா பேசறான்னு அன்னிக்கு நீங்க ஜமுனாவைப் பத்தி சொன்னீங்களே, அதுக்குத்தான் சொல்றேன். அவளுக்கு உங்களை மாதிரி பேசத் தெரியாம இருக்கலாம். யோசிக்கத் தெரியாம இருக்கலாம். உங்களை மாதிரி அத்தனை படிச்சவளா இல்லாம இருக்கலாம். ஆனா அவளுக்கு உங்க மேல ஒரு பிரியம் இருக்கு. அளவு கடந்த அவளுக்கு உங்க மேல ஒரு பிரியம் இருக்கு. அளவு கடந்த பிரியம். அந்த அன்பைத் தவிர வேற என்ன வேணும் பிரியம். அந்த அன்பைத் தவிர வேற என்ன வேணும் உங்களுக்கு? அது எவ்வளவு பெரிய விஷயம்! மனுஷ உறவுகளை விட அதெல்லாம் பெரிசா என்ன? உங்க புத்திசாலித் தனத்தை நுழைச்சு எல்லோரையும் துருவிப் பார்க்கிறதை நீங்க விட்டுடணும். ஒவ்வொருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துண்டு

சந்தோஷமா இருக்கத் தெரியணும். அவாளையும் சந்தோஷப்படுத்தத் தெரியணும்...''

விஸ்வம் மனசு உருக மேலே நடக்காமல் அப்படியே நின்றான். எது எதுவோ புரிந்த மாதிரி இருந்தது. திடீரென்று எல்லாமே சந்தோஷமாக தெரிந்தது. தாங்க முடியாமல் கண் கலங்கிற்று. பேச்சு வராமல் அடைத்துக் கொண்டது.

''மன்...னி!'' என்ற ஒரே வார்த்தைதான் வெளியில் வந்தது.

            (தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்Trending Now: