11-10-2016 10:23 PM
தொடர் இன்ப அதிர்ச்சிகள்!
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் பலரும் அறிந்ததே. அதிலும் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர் சிரமப்படுவதை காணப் பெறாமல் எப்படி உதவ ஓடோடி வந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதே நேரத்தில் இது ஒரு நன்கொடை போலவும் ஆகிவிடாமல் பிஸினஸாகவே செய்தார். நான் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து நிற்க வழிவகுத்தார். எம்.ஜி.ஆருடைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த, ஆடிட்டர்தான் சித்ராலயாவிற்கும் ஆடிட்டர், அவரது மகன் என்.சி.சுந்தரராஜன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரிடம் எம்.ஜி.ஆரின் கடிதத்தைக்காட்டி யோசனைக் கேட்டேன். அவர் உடனே கிரஸெண்ட் மூவிஸ் குரூப் என்ற நிறுவனத்தை அணுகலாம். அவர்கள் பெரிய அளவில் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வார்கள். விநியோகஸ்தர்களும் கூட நான் தான் அவர்களுக்கு ஆடிட்டர், அதனால் அவர்களை எனக்கு நன்கு தெரியும் என்றார்.
அடுத்தநாளே கிரஸெண்ட் மூவிஸ் பாஸ்கர், யாசின் எனது வீட்டுக்கு வந்துவிட்டார் சுந்தரராஜனுடன். விவரமறிந்ததும் அவர் ரொம்ப ஆர்வமாகப் பேசினார். வழக்கமான இதர பங்குதாரர்களையும் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவெடுப்பேன். ஆனால் இந்த விஷயத்தில் இப்பவே ஓ.கே. சொல்கிறேன், ஏனென்றால் என் பாகஸ்தர்கள் ஆட்சேபனை ஏதும் சொல்லவே மாட்டார்கள் என்பது நிச்சயம். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு என்னை மலைக்க வைப்பதாக இருந்தது. மறுநாளே யாசின் திரும்பவும் வந்தார். உங்களுக்கு பைனான்ஸ் செய்வதுடன் நிறுத்திக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், வடஆற்காடு, தென்ஆற்காடு, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய ஏரியாக்களின் பட விநியோகத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். அதற்குரிய அட்வான்ஸ் பணத்தையும் இப்போதே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றார். நான் திக்குமுக்காடிப் போனேன். இந்த மாதிரி எதிர்பாராத விதமாக அட்வான்ஸும், கடனும், கிடைக்க, உடனடியாக வேலையைத் துவங்கினேன், ’உரிமைக்குரல்’ படப்பிடிப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்தன. சினிமா துறையில் இருந்த அத்தனை முக்கியஸ்தர்களும் திரளாக வந்திருந்து என்னை வாழ்த்திக் கௌரவித்தார்கள்” என்கிறார் இயக்குநர் ஸ்ரீதர்.
சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய ஸ்ரீதர் மட்டும் அல்ல இன்னும் பல முன்னணி இயக்குநர்கள் சிவாஜியை வைத்து படங்கள் எடுத்து நொடித்துப்போன நிலையில் இனி மறுபடியும் நிமிர்ந்து நிற்க எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தால் தான் முடியும் என்று எம்.ஜி.ஆரை தேடி வந்தனர். உயர்ந்த எண்ணங்களும், உண்மையை நேசிக்கும் குணமும், உழைப்பை –உழைப்பவர்களை மதிக்கும் பண்பும் கொண்ட உயர்ந்த மனிதன் எம்.ஜி.ஆர். அவரை நம்பியவர்கள் வீணாகிப் போனதில்லை, வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் உண்மை இது பொய் இல்லை. அவருடன் அறிமுகமான – நடித்த – நடிகைகள் (சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா, லதா) ஒரே படத்தின் மூலம் இந்தியா எங்கும் விளம்பர வெளிச்சம் பெற்று பிரபலமாகி இருக்கிறார்கள்.
“எம்.ஜி.ஆர். ரொம்ப பெருந்தன்மையான மனிதர், அவர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம், அதுதான் அவரை நான் என் தெய்வம், என் குரு”னு சொல்றேன், அவர் இல்லேன்னா, இந்த சரோஜா தேவி இல்லை, “இந்தப் போண்ணு நல்லாயிருக்கு ஹீரோயினா நடிக்க போடுங்க’னு ரெண்டு, மூணு பேர்கிட்ட சொன்னாரு, எல்லாரும் யோசிச்சாங்க, சட்டுனு தான் எடுத்த ‘நாடோடி மன்னன்’ படத்துல என்னை ஹீரோயினா புக் பண்ணினார். அப்புறம் நடந்தது எல்லாருக்கும் தெரியும்” என்பது சரோஜாதேவியின் நன்றியுரை. ”நளினி என்று இயற்பெயர் கொண்ட எனக்கு லதா என்று எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது முதல் அது ராசியாகி விட்டது. லதா என்ற பெயர் எங்கும் பிரபலமானது.
எம்.ஜி.ஆர். கைராசி மிக்கவர், அவர் என்னை நடிகையாக்கிய முதல் படத்திலேயே (உலகம் சுற்றும் வாலிபன்) நான் சூப்பர் ஹிட் நடிகையாகிவிட்டேன், அவருடன் அடுத்தடுத்து நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘உரிமைக்குரல்’, ‘நவரத்தினம்’, ‘மீனவ நண்பன்’ எல்லாமே வெற்றி மேல் வெற்றி தந்த படங்கள்” என்கிறார் நடிகை லதா. அவர் படங்களுக்கு பாடல் எழுதியவர்கள் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், புலமைப் பித்தன், மருதகாசி, வாலி, முத்துலிங்கம், நா.காமராசன். இவர்களின் பாடல்கள் பெரும்புகழ் பெற்றதும் வெகு மக்களால் பாடப்பட்டது என்றால் அது எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல் என்பதால் தான், இதை வாலி அழுத்தமாக பின்வருமாறு (1988-ல்) பாடுகிறார்; “பொன்மனச் செம்மலே – என் பொழுது புலரக் கூவிய சேவலே! உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில் தான் உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது! என் கவிதா விலாசம்… உன்னால் தான் விலாசமுள்ள கவிதையாயிற்று! இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ! என்னை வறுமைக் கடல்மீட்டு… வாழ்க்கைக் கரைசேர்த்த படகோட்டியே! நான் பாடிய பாடல்களை நாடு பாடியது… ஏழை எளியவர்களின் வீடு பாடியது!” அதே போன்று அவருக்கு பின்னணி பாடியவர்கள் டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்.ஜி.ஆரின் குரல்களாகவே பேசப்பட்டார்கள்; எங்கும் பேசப்பட்டார்கள். “பத்தோடு ஒன்றாக நானும் ஒரு பாடகனாக இருந்த காலத்தில் ‘அடிமைப்பெண்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் பாடியதின் மூலம் ஒரே நாளில் அனைத்துப் பத்திரிகைகளிலும் பேசப்பட்டேன். தமிழ் நாட்டின் பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டேன். ஒரே நாளில் உயரத்தில் ஏற்றி வைத்தவர் எம்.ஜிஆர். இந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன்” இது எஸ்.பி.பி.யின் உள்ளத்தின் வார்த்தைகள். அவரை வைத்துப் படம் எடுத்தவர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் நன்றாகச் சம்பாதித்தார்கள், இவர் படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் புகழும் பணமும் பெற்றார்கள். எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு செல்வாக்கு, மக்கள் ஆதரவு, கைராசி, முகராசி எல்லாம் அமைந்ததில்லை. அவர் மறைந்து 23 ஆண்டுகளுக்கு மேலாகி இன்னமும் அவரது அலை ஓயவில்லை, மக்கள் செல்வாக்கு குறையவில்லை…. அதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.