இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –21

10-10-2016 01:13 AM

பரசு, புதன்கிழமை போவதாக ஏற்பாடாகி இருந்தது. அப்பா பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு புரட்டிப் பார்த்து நாள் குறித்துச் சொன்னார். விஸ்வம் டிக்கெட் ரிசர்வ் பண்ணிக் கொண்டு வந்தான் பரசுவை அழைத்துப் போய் நல்லதாக நாலு சட்டையும், பான்ட்டும் எடுத்துத் தைக்கக் கொடுத்தான். ஹோல்டால் ஒன்று வாங்கினான். கம்பளியில் போர்வையும், பெட்ஷீட்டும் எடுத்தான்.

''இதெல்லாம் எதுக்கு?'' என்று பரசு தடுத்த போது ''நீ பேசாமல் இரு. இன்னும் நாலே நாள். எங்க இஷ்டப்படிதான் இருந்துட்டுப் போயேன்...'' என்று சிரித்தான் விஸ்வம். அந்தச் சிரிப்பில் தெரிந்த வறட்சியைப் புரிந்து கொண்டு பேசாமல் இருந்துவிட்டான் பரசு.

நாலு நாளும் வெறும் பேச்சில் போயிற்று. பரசுதான் நிறைய பேசினான். எல்லாவற்றையும் பற்றி பேசினான். விஸ்வத்திடம் பேசின மாதிரி ராம்ஜியையும் தனியே அழைத்துப் போய் பேசினான். ''நன்னா படி, ராம்ஜி படிப்புதான் இப்போ முக்கியம். வேறு எதுவும் முக்கியமில்ல. சினிமாவும் டிராமாவும் எப்ப வேணும்னா பார்த்துக்கலாம். அதுக்காகப் போக வேணாம்னு உன்னை தடுக்கலை. எங்களை மாதிரி ஆயிட்டா நீயும் போகப் போறதில்லை. அந்த மாதிரியே படிப்பிலயும் கவனம் இருக்கட்டும்னுதான் சொல்றேன்...'' என்றான். ராம்ஜி பதில் எதுவும் சொல்லாமல் தலையாட்டினான். அகிலாவிடமும் அப்பாவிடமும் அதே மாதிரி தனித் தனியாக ஏதோ சொன்னான். ருக்மிணியைக்  கூட மாடிக்கு அழைத்துப் போய் பேசிக் கொண்டிருந்தான். வாயைத் திறந்து எதையும் சொல்லத் தெரியாத அந்த பரசுவா இவன் என்று ஆச்சரியமாய் இருந்தது.

நாலாம் நாள் காலையில் எல்லாம் அடங்கிப் போய் விட்டது. மறுபடியும் பழைய பரசுவாக மாறிப் போனான். முகம் விழுந்து போயிற்று. மனம் வேதனையில் விழுந்து தத்தளிப்பதைக் காட்டியது. வீடே பேச்சள்ள மவுனத்தில் கனத்துக் கிடந்தது. அப்பா மட்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

''அங்கெல்லாம் ரொம்ப குளிரா இருக்குமோ, என்னமோ...? அதனால மறக்காம ஸ்வெட்டரை எடுத்துண்டு போ...!''

''ஊர் புதுசு. பழகற வரைக்கும் ஜாக்கிரதையா இரு.''

''ராத்திரி நேரம் கழிச்சு வராதே. பாஷைகூடத் தெரியாது. அதனால ரொம்ப ஜாக்கிரதையா இரு.''

''வேளைக்கு சாப்பிடு. உடம்பை கெடுத்துண்டாதே...!''

இப்படி நினைத்து நினைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் தலையாட்டினான் அவன்.

கிளம்பத் தயாரானதும் ராம்ஜி போய் டாக்ஸி கூட்டி வந்தான். ஹோல்டாலையும் சூட்கேஸையும் ஏற்றிவிட்டு வந்த பரசு, அப்பாவை நிற்க வைத்து நமஸ்கரித்தான். அப்பாவுக்கு கண் கலங்கிற்று.

''தீர்க்காயுசா நன்னா இருடா குழந்தே...!'' என்று ஆசிர்வதித்தபோது குரல் அடைத்துக் கொண்டது. பரசுவும் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

எல்லோரும் ஸ்டேஷனுக்கு போயிருந்தார்கள். பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த போது வண்டி பிளாட்பாரத்திற்குள் நின்றிருந்தது. கூட்டம் நெரிசல் பட்டது. உருத் தெரியாமல் ஏதேதோ பேச்சு சத்தம். 'கட கட'வென்று ட்ராலி உருளுகிற சத்தம். வாழைப்பழமும், பிஸ்கட்டுகளும் விற்கிற சத்தம். குரலை இறுக்கின மாதிரி விட்டு விட்டுத் தொடருகிற அறிவிப்பு சத்தம். ஒரு கம்பார்ட்மெண்ட் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு சிரிப்பும், பேச்சுமாய் இருந்த ராணுவ உடைகளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் விஸ்வம். தன் இடத்தைக் கண்டுபிடித்துச் சாமானை வைத்து விட்டுப் பரசு இறங்கி வந்தபோது, வண்டி கிளம்ப பத்து நிமிடங்களே இருந்தன.

''வரேம்ப்பா...!''

''ஜாக்கிரதையாப் போ. போனதும் லெட்டர் போடு.''

''உடம்பை பார்த்துக் கோண்ணா...!''

''நன்னாப்படி ராம்ஜி!''

''ஆகட்டும். நீ அடிக்கடி லெட்டர் போடு. இங்க இருந்த மாதிரி வேலை வேலைன்னு கிடக்காதே...!''

பரசு தலையாட்டிவிட்டு நகர்ந்தான். விஸ்வத்திடம் வந்து ஒன்றும் சொல்லாமல் நின்றான். கண் கலங்கிற்று. ''வரட்டுமா?'' என்று தலைமட்டும் ஆடியது. விஸ்வமும் எதுவும் பேசவில்லை. அவன் கையை மட்டும் பிடித்து ஒரு தரம் அழுத்தினான். அதில் எல்லாம் பேசிவிட்ட மாதிரி இருந்தது.

''நேரமாயிடுத்து, போ! ருக்மிணி கிட்ட சொல்லிக்கோ...!''

கடைசியில் ருக்மிணியிடம் போனபோது ஒரு நிமிஷ நேரந்தான் இருந்தது. சட்டென்று அவள் கையைப் பற்றிக் கொண்டு ஒரு விநாடி நேரம் அப்படியே நின்றான். பின், சமாளித்துக் கொண்டு, ''வரட்டுமா?'' என்று கேட்டான். பேச்சு எழும்பாமல் அவள் தலை மட்டும் மெதுவாக ஆடியது. பின், அவள் கையை விட்டுவிட்டு ஓடிப்போய் வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டி ஒரு தரம் ஊதிற்று. மெதுவாக நகரவும் ஆரம்பித்தது. ஜன்னல் முழுதும் கைகளாக ஆடின. பிளாட்பாரத்திலும் கைகள் தெரிந்தன. வாசலில் நின்ற நெரிசலில் ஒரு கையால் தொற்றிக் கொண்ட பரசு, மறுகையை ஆட்டினான்.

''ருக்..மிணி.... வரே...ன்...!''

கொஞ்சம் கொஞ்சமாய் பின்னால் தெரிந்த சிவப்பு விளக்கு மங்கிப் பின்பு மறைந்து போயிற்று. கனமான ஒரு மூச்சோடு மெதுவாக திரும்பி ருக்மிணியைப் பார்த்தான் விஸ்வம். அவள் கண் மினுமினுத்தது. கோடியில் ஒரு முத்து பளிச்சிட்டது.

'மனசைப் பிடித்து உலுக்குகிற மாதிரி இது என்ன பிரிவு! இவளை இப்படி விட்டுப்போக உனக்கு எப்படி மனசு வந்தது, பரசு...?'

தலையை கவிழ்த்துக் கொண்டு பிளாட்பாரத்தை விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பினான் விஸ்வம். நேராக பத்ரியின் வீட்டுக்கு போனான். அவன் போனபோது பத்ரி குளித்துக் கொண்டிருந்தான். பத்ரியின் அம்மா அவனை உட்கார வைத்துக் காபி கொடுத்தாள். எல்லாரும் சவுக்கியமா என்று விசாரித்தான்.

''அண்ணா போய் லெட்டர் போட்டானோ...?''

''ம்.... ஒரு லெட்டர் வந்தது!'' என்று பதில் சொன்னான் விஸ்வம்.

''மன்னி எப்போ போகப் போறா?''

''தெரியலை. வீடு பார்த்ததுக்கு அப்புறந்தான்.''

''அகிலா என்ன பண்றா?''

''சும்மாதான் இருக்கா.''

''எப்படிப் போது போறது?''

''ம்...?''

''அவளுக்கு பொழுது எப்படி போறதுன்னு கேட்டேன்...?''

''எப்படியோ போயிடறது. ஏதே தையல் கத்துக்கறா. மீதி நேரத்துக்கு டிரான்சிஸ்டர் இருக்கவே இருக்கு!''

சிறிது நேரம் பேசாமல் இருந்த பின்

''இன்னிக்கா உங்க பத்திரிகை வர்றது?'' என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

''ஆமாம்!'' என்று தலையாட்டினான் அவன்.

''நாங்கள்ளாலம் வரலாமோ...?''

''தாராளமா வரலாம், மாமி! நீங்கள்ளாம் வரது மட்டுமில்லை, வாங்கிப் படிக்கவும் படிக்கணும்'' என்றான்.

அதற்குள் உள்ளேயிருந்து வந்த பத்ரியின் தம்பி, ''எதை? உங்க பத்திரிகையையா? யார் படிக்கிறது?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டான். விஸ்வமும் சிரித்தான்.

''நிஜமாவே கேட்கிறேன். இதெல்லாம் என்ன பத்திரிகைன்னு ஆரம்பிக்கிறீங்க? ஒரு எழுத்து புரியறதில்லை. எழுதறவங்கள்ளாம் தங்களைப் பெரிய மேதாவின்னு நினைச்சுண்டு எழுதிடறது...!''

சட்டையைப் போட்டுக் கொண்டே வெளியில் வந்த பத்ரி, ''அது சரி. அதையெல்லாம் உன்னால புரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் புத்திசாலின்னு தனம் வேணும்!'' என்றான்.

''ஆமாம். உன் மனசுல நீ பெரிய புத்திசாலின்னு நினைப்போ?'' என்று முறைத்தான் அவன்.

அதில் காதில் விழாத மாதிரி பத்ரி, விஸ்வத்தின் பக்கம் திரும்பினான். ''போகலாமா?'' என்று கேட்டான் விஸ்வம். எழுந்து கொண்டான். பத்ரியின் அம்மாவைப் பார்த்து ''சாயங்காலம் கட்டாயம் வாங்கோ...'' என்றான்.

''வேஸ்ட் ஆப் டைம்!'' என்று பத்ரியின் தம்பி முணுமுணுத்தான். அதற்கும் சிரிப்பை பதிலாக தந்து விட்டு விஸ்வம் செருப்பை போட்டுக் கொண்டான். வெளியில் வந்ததும் பத்ரி, தன் தம்பியை, ''சரியான மடையன்!'' என்று திட்டினான். விஸ்வம் பேசாமல் நடந்தான்.

இரண்டு பேரும் நேராக ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு போனார்கள். பத்திரிகை வெளியீட்டிற்கான வேலைகளை கவனிக்க தொடங்கினார்கள். தாங்கள் மிகவும் மதிக்கிற எழுத்தாளர் ஒருவரைப் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். உலகச் சிறுகதைகள் என்ற தலைப்பில் அவரும் பேச ஒப்புக் கொண்டிருந்தார். முதல் பிரதியை அவருக்கே அளிப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள்.

மாம்பலத்திலிருந்த அவருடைய வீட்டுக்கு போய் மாலை இலக்கிய கூட்டத்தை ஞாபகப்படுத்தினார்கள். இலக்கிய கூட்டத்தை ஞாபகப்படுத்தினார்கள். பின்பக்கத்தில் இருந்த இன்டியா காபி ஹவுஸில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசினார்கள். தங்கள் கருத்துக்களைச் சின்னத் தலைப்புரையாகப் பேசி வெளியிட முடிவு செய்தார்கள். அந்த பொறுப்பு விஸ்வத்திடம் விடப்பட்டது. அவன் சுருக்கமாய் ஒரு பேப்பரில் எழுதிப் படித்து விடுவதாகச் சொன்னான். பின்பு, மாலை ஐந்து மணிக்கு இலக்கியக் கூட்டத்தில் சிந்திப்பதாகக் கூறி விடைபெற்றார்கள். விஸ்வம் வீட்டுக்குத் திரும்பியபோது மணி இரண்டாகி இருந்தது.

படியேறினதும் தாழ்வாரத்தில் நிறுத்தியிருந்த சைக்கிள் கண்ணில் பட்டது. உடனே பரசுவின் ஞாபகம் வந்தது. இந்த மாதிரி அவன் உபயோகித்த பொருட்களைப் பார்க்கும்போது சட்டென்று அவன் ஞாபகம் வரும். சங்கிலித் தொடராக அவனோடு மாடியில் பேசினது, கடைக்குப் போனது, ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தது என்று ஒவ்வொன்றாக மனசை நிறைக்கும். இன்றோடு அவன் ஊருக்கு போய் ஐந்து நாறாகிவிட்டது என்று நினைத்ததும் ஆச்சரியமாய் இருந்தது.

'ஐந்து நாள்தானா ஆயிற்று...?' என்று கேட்டுக் கொண்டான். முதல் இரண்டு நாட்கள் வீட்டின் வெறுமை அதிகமாய்த் தெரிந்தது. பரசு இல்லை என்பது ஒவ்வொரு நிமிடமும் மனசை நெருடுகிற விஷயமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. கொஞ்சம் பழகிப்போய் விட்டது. 'எந்த விஷயமும் பழகினால் எவ்வளவு சுலபமாகி விடுகிறது!' என்று நினைத்துக் கொண்டான்.

''இதோ வந்துட்டேன்!'' என்ற முற்றத்தில் இறங்கிக் கைகால் அலம்பிக் கொண்டான் அவன். முகத்தில் தண்ணீர் வாரித் தெளித்துக் கொண்டான். சமையலறையில் நுழைந்த போது தட்டுபோட்டு வைத்திருந்தது. ருக்மிணி பரிமாறத் தயாராய் நின்று கொண்டிருந்தாள்.

''நீங்களும் உட்காருங்கோ. எல்லாத்தையும் எடுத்து வச்சுண்டு ரெண்டு பேரும் ஒண்ணாவே சாப்பிட்டுடலாம்!'' என்றான்.

''இல்லே. உங்களுக்கு போட்டுட்டு அப்புறமே சாப்பிடறேன்...''

''வேணாம். ஏற்கனவே நேரம் ஆயிடுத்து. உட்காருங்க, சொல்றேன்'' என்று வற்புறுத்தினதும், ருக்மிணி தன் தட்டையும் எடுத்து அவனுக்கு எதிரில் போட்டுக் கொண்டாள்.

சாப்பிட்டுக் கொண்டே அன்று மாலை பத்திரிகை வெளியாகிற விஷயத்தை சொன்னான் விஸ்வம் அவள் ஒரு விவரம் விடாமல் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அந்த ஆர்வத்தைப் பார்த்ததும் சாயந்தரம் அவளையும் அழைத்துக் கொண்டு போனால் என்ன என்று தோன்றியது. வெகு நாட்களாகவே அவன் இந்த மாதிரி கூட்டங்களுக்கு கிளம்புகிறபோதெல்லாம், 'ஒரு தரம் என்னையுந்தான் அழைச்சுண்டு போங்களேன். எப்படி இருக்கிறது பார்க்கலாம்...' என்று கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். 'இன்று அழைத்துப் போனால் என்ன?'

''சாயந்தரம் நீங்களும் வாங்களேன்,'' என்று கூப்பிட்டான்.

உடனே 'சரி' என்று தலையாட்டினாள் அவள். சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவளாக, ''அப்பா என்ன சொல்வாரோ?'' என்றாள்.

''அப்பாகிட்ட நான் கேக்கறேன்,'' என்று சாப்பிட்டு முடித்து தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

''நீங்க ஏன் தட்டை எடுக்கணும்? வச்சிட்டுப் போங்க...'' என்று ருக்மிணி சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கழுவிக் கொண்டு வந்து வைத்தான். பின், தன் அறைக்குப் போய்ப் பேச வேண்டிய விஷயத்தை தயார் செய்தான்.

நாலு மணி வாக்கில் காபி குடித்துக் கொண்டிருந்த போது, அப்பாவிடம் மெதுவாக கேட்டான்.

''இன்னிக்கு சாயந்தரம் ஒரு லிட்ரரி மீட்டிங் இருக்கு. அதுக்கு மன்னியும் வரணும்னு ஆசைப்படறா...!''

''ஆசைப்பட்டா அழைச்சுண்டு போயேன். பாவம்! அவதான் எங்க போறா...?'' என்று உடனே அவரிடமிருந்து பதில் வந்தது.

விஸ்வம் அகிலாவையும் வரச் சொல்லி கூப்பிட்டான்.

''அங்கெல்லாம் நான் வரலை. ரொம்ப 'போர்' அடிக்கும். நீ மன்னியை அழைச்சுண்டு போ!'' என்று மறுத்துவிட்டாள் அவள்.

ருக்மிணியை அழைத்து கொண்டு பஸ் பிடித்து மவுண்ட் ரோடிலிருந்த அந்த லைப்ரரி மாடியை அடைந்த போது, மணி ஐந்தே காலாகி விட்டிருந்தது.Trending Now: