இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –16

05-09-2016 09:17 PM

ஜமுனாவின் கோபத்தையும் கண்களின் பளபளப்பையும் பார்த்து புன்சிரிப்பாகச் சிரித்துக் கொண்டே, ''ம் மேலே சொல்லு!''  என்றான் விஸ்வம்.

''என்னத்தைச் சொல்றது?'' என்று எரிந்து விழுந்தாள் அவள்.

''சரி, வேணாம்,'' என்று நிதானமாகச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான். மெளனமாய்க் கடலைப் பார்க்க ஆரம்பித்தான். ஓர் இடத்தில் சிறிது நுரையாக ஆரம்பித்து விட்டு விட்டு, சுருள் சுருளாகப் புரண்டு, பின் நேராகக் கோடிழுத்த மாதிரி ஒன்றாய்ச் சேர்ந்து ஓடி வருகிற அலைகளின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பேசுவான் என்று எதிர்பார்த்த ஜமுனா அந்த மவுனத்தை தாங்க முடியாதவளாகத் தானே பேச ஆரம்பித்தாள்.

''அந்த லெட்டரைப் படிச்சதும் நான் என்ன பண்ணினேன், தெரியுமா?'' என்று கேட்டாள்.

''என்ன?'' என்கிறாற்போல் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

''லெட்டரை எடுத்துண்டு நேரே போய் மானேஜர்கிட்ட கொடுத்துட்டேன். மானேஜர் அவனைக் கூப்பிட்டு நல்ல 'டோஸ்' விட்டார். இரண்டு நாளைக்கு சஸ்பெண்ட் பண்ணி வச்சிருக்கார்...!''

உடனே பதில் எதுவும் சொல்லவில்லை அவன். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ராம கிருஷ்ணனை நினைத்துக் கொண்டான். பரிதாபமாக இருந்தது. யாரையும் பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு வெளியேறுகிற ஓர் உருவம் தெரிந்தது.

''என்ன பதிலே இல்லை?''

''என்ன சொல்லணும்?''

''மனசிலே நினைக்கிறதை சொல்றது.''

''இல்லை, சொல்லுங்க...''

''ஸல்லி!'' என்று ஒரு வார்த்தையில் சொன்னான்.

''எது?''

''நீ பண்ணினது.''

''என்ன?''

''ஆமாம். ஒரு பெண்ணுக்கு ஒருத்தன் லவ் லெட்டர் எழுதறது மகா பெரிய குற்றம் இல்லை. இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம். இதை நீ இவ்வளவு பெரிய விஷயமா ஆக்கி இருக்க வேணாம். அது உனக்குப் பிடிக்கலைன்னா அவனைக் கூப்பிட்டுப் பேசி இருக்கலாம். 'ஸாரி'ன்னு ஒரு வார்த்தை சொல்லிப் புத்திசாலித்தனமா தவிர்த்திருக்கலாம். அதுக்கு உனக்குத் தைரியமில்லை. உன் தைரியமில்லாத்தனத்துக்கு மானேஜரைத் துணைக்கு கூப்பிட்டிண்டிருக்க வேணாம்!''

அவள் அவனையே ஒரு நிமிஷம் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள். கை மணலில் அளைந்தது. என்ன சொல்லலாம் என்று யோசிக்கிற மாதிரி சிறிது நேரம் இருந்தாள். பின், பேச ஆரம்பித்த போது, குரல் தழைந்து மெதுவாக வந்தது.

''நான் பண்ணினது ஸில்லியாகவே இருக்கட்டும். எனக்குத் தைரியமில்லைன்னே வச்சுக்கோங்க. ஆனா மிஸஸ் தாஸ் சொல்றதுதான் சரியாப் படறது.''

''எது?''

''கல்யாணம் பண்ணிக்கிறது.''

அதைக் கேட்டு கைகளை மணலில் ஊன்றிப் பின்னால் சரிந்து சிரிக்க ஆரம்பித்தான் விஸ்வம். முகம் சிவந்து போயிற்று. கண்களில் நீர் கட்டிவிட்டது. ஓய ஒரு நிமிஷ நேரமாயிற்று. அதுவரை அவன் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த ஜமுனா, ''சிரிச்சு முடிச்சாச்சா?'' என்று கேட்டாள்.

மறுபடியும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிப் புன்சிரிப்பாக மாற்றிக் கொண்டு 'ஆயிற்று' என்று தலையாட்டினான். அது அவளை மேலும் கோபப்படுத்தியது.

''எதுக்கு சிரிச்சீங்க?''

''ஒண்ணுமில்லே?''

''இல்லே, ஒரு லவ் லெட்டருக்குப் பயந்து, கல்யாணம் பண்ணிண்டுடறதானா, இப்போ உன் வயசுலே இருக்கிற முக்கால்வாசிப் பேருக்குக் கல்யாணமாகி இருக்கும்.''

''அதுக்கு மட்டும் பயந்துண்டு சொல்லலை, விஸ்வம். எனக்குமே அதுதான் சரின்னுதோணறது.''

அவனிடமிருந்து பதில் இல்லை. மணிலில் கோடுகள் வரைந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு கோடாக சேர்ந்து ஒரு பெண்ணின் முகமாயிற்று. மூக்கின் வலது பக்கத்தில் சின்னக் கிளிஞ்சல் துண்டை வைத்து மூக்குத்தியாக்கினான். ருக்மிணியின் முகமாக தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

''எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கிறது!''

சட்டென நிமிர்ந்து, ''எப்படியே?'' என்று கேட்டாள்.

''இந்த மாதிரி யாருக்கும் தெரியாம பீச்சிலே சந்திச்சுண்டு...!''

''சரி, நாளைலேர்ந்து பீச்சுல வேண்டாம். பார்க்கில சந்திக்கலாம்...!''

அவள் முகம் சிணுங்கியது. கண்களில் 'சுள்'ளென்று ஒரு கோபம் எட்டிப் பார்த்தது. ''விளையாடாதீங்க, விஸ்வம்!'' என்றாள் அழுத்தமான குரலில்.

அவன் உதட்டோரத்தில் தங்கியிருக்கும் புன்னகை சட்டென்று மறைந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டான். ஆள்காட்டி விரல் மறுபடியும் மணலில் கிறுக்க ஆரம்பித்தது. சின்னக் குடிசை அது மாறி ஒரு வீணை பின், தென்னை மரம். அது அழிந்து யானையாவதற்குள் மீண்டும் ஜமுனாவின் குரல் கேட்டது. இப்பொழுது அழுத்தம் குறைந்து தாழ்ந்த ஒரு குரலில் மெதுவாகப் பேசினாள் "

''எங்க வீட்ல எனக்கு ஜாதகம் பார்க்க ஆரம்பிச்சுட்டா...!''

அவன் யானையைப் பாதியில் நிறுத்திக் கொண்டு, கை மணலை உதறிவிட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தான்.

''ஆமாம், விஸ்வம். கல்கத்தாவில் யாரோ டாக்டராம்! அம்மா சொன்னா. எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிச்சு நிறுத்திட்டேன். அதனால அம்மாவுக்கு என் மேல ஒரே கோபம்!''

அதற்கும் அவன் பேசாமல் இருந்தான்.

''என் நிலைமை உங்களுக்குப் புரியலையே, விஸ்வம். எதையும் சீக்கரமாப் புரிஞ்சுக்கற நீங்க, இதை மட்டும் ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க? ஒரு நாள் லேப்டாப் போனால் கூட அம்மா ஆயிரம் கேள்விகள் கேட்கறா. நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கு. எனக்கு இந்த ஆபீஸ் வேலை எதுவும் பிடிக்கலை. எல்லாரையும் மாதிரி வீடு, குடும்பம்னு நிம்மதியா இருக்க மாட்டோமான்னு இருக்கு...!''

அந்தக் குரலில் தொனித்த வருத்தம் அவனைக் கஷ்டப்படுத்தியது. அவளை நிமிர்ந்து பார்த்தான். கண்களும் முகமும் கெஞ்சுகிற மாதிரி இருந்தன. தான் அவளுக்குத் தவறு செய்துவிட்டதாக தோன்றியது. அவள் தன்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாள். அம்மா சொல்கிற டாக்டர் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு அவன் ஹாஸ்பிடலில் இருந்து திரும்புவதற்காகக் காத்திருந்து அவனுக்குப் பிடித்தமானதைச் சமைத்துப் போட்டு அவன் குழந்தைகளை சுமந்து கொண்டு...

இதில் அவள் நிச்சயமாக திருப்தி அடைந்து விடுவாள். இது மட்டும் போதும் அவளுக்கு. தன்னைப் புரிந்து கொண்டவள் இல்லை அவள். தன் எண்ணங்களைப் பிரதிபலிப்பவள் இல்லை அவள் ஒரு பெண். தான் ஆணாக இருப்பது மட்டும் போதும். கொஞ்சம் அழகாக இருப்பதில் ஒரு திருப்தி. இன்னும் ஒரு வேலை தேடிக் கொண்டு விட்டால்.... ஜமுனா, நான் உனக்கு ரொம்பவும் திருந்தியவனாய் ஆகிவிடுவேன் இல்லையா...?

வேலை இல்லாததை மறுபடியும் வசதியாக உணர ஆரம்பித்தான். ஆனாலும், அவள் மனசைப் புண்படுத்தாமல் நிதானமாகப் பேச முடிவு செய்தான். ஆறுதலாக அவள் ஏற்றுக் கொள்ளுகிறாற் போல் ஏதாவது சொல்ல வேண்டும்.

''என்ன யோசனை?'' 

''ஒண்ணுமில்ல, ஜமுனா. நீ சொன்னதைப் பத்தித்தான் யோசிச்சேன். என்னால்தான் நீ கஷ்டப்படறியோன்னு தோணறது. என்னைச் சந்திக்காம இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்னு நினைக்கிறேன்...''

''நான் அப்படிச் சொல்லலியே...?'' என்று குறுக்கிட்டாள் அவள்.

''நீ சொல்லலை. நானாகத்தான் சொல்றேன். 'என் நிலைமை உங்களுக்கு ஏன் புரியலை'னு கேட்டியே...? புரியாம இல்லை, ஜமுனா. நன்னாப் புரியறது. ஆனா, நீதான் என்னைப் பத்திக் கொஞ்சங்கூட யோசிச்சுப் பார்க்கமாட்டேங்கறே!''

''யோசிக்காம இல்லை. யோசிச்சுப் பார்த்துட்டுத்தான் சொல்றேன். சீக்கரமா ஒரு வேலை தேடிக்கோங்கன்னு..!''

''எங்கே கிடைக்கிறது?'' – அவன் ஓர் எரிச்சலுடன் கேட்டான்.

''உண்மையாய்த் தேடினால் கிடைக்கும்.''

''அப்போ நான் பொய்யாத் தேடறேன்னு சொல்றியா?''

''நான் சொல்ல வேணாம். உங்களுக்கே தெரியும்.''

அவன் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். அவள் மவுனமாய் இருந்தாள். சில நிமிஷங்களுக்குப் பேச்சு எதுவும் இல்லை. இரண்டு பேரும் அலையைப் பார்த்துப் பளிச்சிட்டு மறைந்தது. கப்பல்கள் விளக்கேற்றிக்கொண்டு, கடலில் கட்டப்பட்ட அரண்மனைகளாக நின்றன. பானிபூரிக்காரனின் பெட்ரோமாக்ஸ் எரிய ஆரம்பித்து விட்டது. விளையாடிக் கொண்டிருந்த மீனவச் சிறுவர்களைக் காணவில்லை. பட்டம் விட்டுக் கொண்டிருந்த பையனும் இல்லை. தங்களைச் சுற்றி யாரும் இல்லாததை அப்போதுதான் கவனித்தான் அவன். வானத்தில் தன் நட்சத்திரம் வந்து விட்டதா என்று பார்க்க நிமிர்ந்தான்.

''அதோ!'' என்று கைகாட்டினாள் அவள்.

துாரத்தில் தனியாக மிகவும் பிரகாசமாக பளிச்சிட்டது. அதையே பார்த்துக் கொண்ருந்தான்.

''உங்களை மாதிரி அதுவும் தனியா முறைச்சுண்டு நிற்கறது!''

''ஆனா எவ்வளவு பளிச்சுனு இருக்கு, பார்த்தியா?''

''இந்த பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை'' என்று சொல்லிவிட்டு புடவையை உதறிக் கொண்டு எழுந்தாள்.

''என்ன எழுந்துட்டே?''

''என்ன பண்றது? எத்தனை நாழி கேட்டாலும் உங்ககிட்டேயிருந்து சரியான ஒரு பதில் வரப் போறதில்லை.

இப்படித்தான் இதுக்கும் பேசாம இருக்கப் போறீங்க. இங்க உட்கார்ந்து பதிலுக்காக தவம் கிடக்கறதை விட்டு வீட்டுக்காவது சீக்கிரம் போகலாம். ஏற்கனவே நாழி ஆயிடுத்து. நாளைக்கு வேற எல்லாரும் ஊருக்கு போறா...!''

அவனும் எழுந்தான். பைலையும், டையையும் எடுத்துக் கொண்டு நடந்தவாறு, ''எங்கே, போறா எல்லாரும்?'' என்று கேட்ான்.

''மதுரைக்கு. சித்தி பொண்ணுக்கு கல்யாணம். அதுக்கு போறா.''

''நீ போகலியா?''

''ஊஹும். எல்லாரும் போயிட்டா எப்படி? நான்தான் வீட்டுக்கு காவல். நாலு நாளைக்கு நான் மட்டுந்தான் வீட்டில். ஆபீசுக்குக் கூட லீவு போட்டிருக்கேன்.''

''இவ்வளவு பயப்படற, நீ தனியாகவா இருக்கப்போறே?''

''ராத்திரியிலே பக்கத்து வீட்டுப் பாட்டி வந்து துணைக்கு படுத்துப்பா. மத்தியான வேளைல என்ன பயம்?''

அதன் பின் அவன் ஒன்றும் கேட்கவில்லை. பேசாமல் நடந்து பஸ் ஸ்டாப் வரை வந்தார்கள். உடனே பஸ் வந்து விட்டது. அவளை ஏறிக் கொள்ளச் சொன்னான்.

''ஏன், நீங்க வரலையா?'

''இல்லை, இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டு வரேன்.''

அவள் ஒன்றும் சொல்லாமல், ஏறி ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து கை அசைத்தாள். அவனும் பதிலுக்கு கை ஆட்டினான். பஸ் கிளம்பினதும் சிறிது நேரம் அங்கேயே நின்றான். ஜமுனாவை நினைத்த போது கஷ்டாக இருந்தது. ''பாவம்!'' என்று சொல்லிக் கொண்டே, மணலுக்கு திரும்பினான். பின், அலைக்குப் போய் காலை நனைத்துக் கொண்டு வெகுநேரம் நின்றிருந்தான்.

  (தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்Trending Now: