70-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

15-08-2016 12:26 AM

சென்னை,

70-வது சுதந்திர தினத்தை நாடே நாளை விமர்சையாக கொண்டாடவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:- ‘இமயம் தொட்டு குமரி வரை இங்கிருக்கும் யாவரும் இந்தியாவின் மக்களென்ற சொந்தம் காண செய்வோம்’ என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடனும், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து ஓய்வறியா பாரத பிரதமர் நரேந்திரமோடி வழியில் இணைவோம். நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம். அனைத்து மக்களுக்கும் எனது 70வது சுதந்திர தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழிசை ( தமிழக பா.ஜ.க தலைவர்):

70வது சுதந்திர தினத்தை இந்த நாடு கொண்டாடுகிறது 70 வது ஆண்டில் எழுச்சியுறும் பாரத தேசமாக, ஏழ்மையை போக்கும் பாரத தேசமாக, ஏற்ற தாழ்வை போக்கும் பாரத தேசமாக, நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உலக அரங்கில் முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் மிகுந்த இந்த இளைய தேசம் இனிய தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது அனைவரின் இன்னல்களும் போக்கும் நாடாகவும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் நாடாகவும் இந்த நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. எல்லோரும் எல்லாம் பெறவேண்டும், இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவிஞரின் பாடல் வரிகளே இந்த கொண்டாட்டத்தின் அடித்தளமாக அமையட்டும், தேச விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து இந்த சுதந்திரத்தை கொண்டாடுவோம், மரியாதைக்குரிய நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் சொன்னதை போல காதி, கைத்தறி அணிந்து கவலையற்று களிப்புடன் சுதந்திரத்தை கொண்டாடுவோம். அனைவருக்கும் 70 வது ஆண்டு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தமிழக பா.ஜ.க சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன? என்பதை ஆராய்ந்து பார்த்தால், நாம் பெற்றதைவிட இழந்தது தான் அதிகமாக இருக்கிறது. மதுவிலிருந்து தமிழகத்திற்கு எப்போது விடுதலை கிடைக்கிறதோ அப்போது தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். இத்தகைய மது அரக்கனை ஒழிக்கவும், மக்களின் துயரங்களை போக்கவும், அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை வளர்க்கவும் இந்நன்னாளில் உறுதி ஏற்போம்

முத்தரசன் (இ.கம்யூ., மாநில செயலாளர்):-

விடுதலை பெற்ற பத்து ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு எட்டப்படவில்லை. கல்வி வணிக மயமாகி ஏழைகளுக்கு எட்டாக்கனி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, மீண்டும் குலக்கல்வி முறைக்கு இட்டுச் செல்லப்படும் அபாயமும் தொடங்கி உள்ளது. சுதந்திரத்தை பேணிக் காக்கவும், புதியதோர் பாரத தேசத்தை உருவாக்கவும் விடுதலைப்போரினில் வீழ்ந்த மலர்களின் பேரால் சபதமேற்போம்.

எச். வசந்தகுமார் (தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்):-

சமய சார்பின்றி மொழிகள் பேதமின்றி, இந்திய மக்கள் அனைவருக்கும் ஒருதாய் மக்களாக வாழும் பெருமையே சுதந்திர இந்தியாவின் சிறப்பு. 70-ம் ஆண்டு சுதந்திர தின நாளில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை வணங்குவோம்.

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி):-

மது ஒழிக்கப்படும் வரை மக்களுக்கு முன்னேற்றமோ, நாட்டிற்கு வளர்ச்சியோ ஏற்படாது  என்ற உண்மையை அனைவரும் அறிந்திருக்கிறோம். எனவே மதுவை ஒழிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மக்களின் துயரங்கள் விலகவும், நாடு முழுவதும் அமைதி, வளம், சமத்துவம், சமூகநீதி ஆகியவை தழைத்தோங்கவும் இந்த நாளில் உறுதியேற்போம்