ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

27-07-2016 01:52 AM

மன்ஹெய்ம் : கனடா அணிக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் ஓலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 5 முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மெகா தொடரில் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி அமெரிக்காவுடன் 2, கனடாவுடன் 3 போட்டிகளில் விளையாடுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி பின் எழுச்சி பெற்று 2வது ஆட்டத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி கனடாவை எதிர்த்து விளையாடி வருகிறது. கனடாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதிய இரண்டாது போட்டி மன்ஹெய்ம் நகரில் நடந்தது. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் இந்தியா முதல் கோலை பதிவு செய்தது. பூணம் ராணி கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், அடுத்த 2வது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கனடா வீராங்கனை நடால் பதில் கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டம் 1–1 என சமநிலை ஆனது. பின் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு ரேனுகா யாதவ் (32வது நிமிடம்), அனுராதா தேவி (58வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதன் பின் கடைசி வரை போராடிய கனடா வீராங்கனைகளால் பதில் கோலை அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்தியா 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.Trending Now: