சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 52 – துரை கருணா

22-07-2016 11:25 PM

மன்னிப்பு கேட்கவும் தயார்!

1979ம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் தமி­ழக சட்­ட­ச­பை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது நடை­பெற்ற விவா­தங்­க­ளுக்கு பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். பேசி­யது :–

எம்.ஜி.ஆர் : நான் சேலத்தில் பேசிய ஒரு கருத்தைப்பற்றி இங்கே குறிப்பிட்ட உறுப்பினர் பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கு  நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் செல்லும்பொழுது உளியால் அவர் காரில் தாக்கப்பட்டு, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய செய்தி வருகிறபொழுது ஏன் அறிக்கை விடவில்லை என்ற குறையை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சேலத்தில் நான் அதைப்பற்றி வேறு விதமாக குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை, பத்திரிகை ஏடுகளிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நண்பர்கள் ஒரு சிலவற்றை அதில் மறைத்து விட்டார்கள். அது எனக்குச் செய்யும் நன்மை என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. இதைப்போன்றவைகளை ஏன் குறிப்பிடுவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

க. அன்­ப­ழ­கன் (திமுக) :  முத­ல­மைச்­சர் சேலத்­தில் குறிப்­பிட்­ட­தைப்­பற்றி ஒரு பத்­தி­ரி­கை­யிலே வந்த செய்தி மட்­டு­மல்ல, அங்­கே­யுள்ள தோழரை சந்­தித்த பொழு­தும் அந்த செய்­தியை ஏதோ முத­ல­மைச்­சர் நம்­பா­த­தைப்­போல உளிக் கதை­யெல்­லாம் சொல்­கி­றார்­கள் என்ற அந்த கருத்து வந்­தது. புதிய கதை என்று சொல்லி விட்­ட­தற்கு பிறகு அந்த அனு­தாப உணர்ச்சி அதி­லே­யி­ருந்து பிறக்­க­வில்லை. அந்த அனு­தாப உணர்ச்சி பிறக்­க­வில்லை என்ற இந்த செய்­தி­தான் மக்­க­ளி­டம் இவ்­வ­ளவு நாளும் பர­வி­யி­ருக்­கி­றது.

எம்.ஜி.ஆர் : நான் எந்­தெந்த வகை­க­ளிலே தாக்­கப்­பட்­ட­வன், எந்த அள­விற்கு அந்த வேத­னையை தெரிந்­த­வன் என்ற வகை­யில் என்­னால் பேச­மு­டி­யும். யாருக்கு என்ன ஆபத்து வந்­தா­லும் அதைப்­பற்றி நான் என்ன நினைப்­பேன் என்­பது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தெரி­யும்.

நான் அமெ­ரிக்­கா­வில் இருக்­கும்­பொ­ழு­து­கூட என் நண்­பர் ஒரு­வ­ரி­டத்­தில் சொல்லி, அவ­ரு­டைய நண்­ப­ரி­டம் இதை சொல்­லுங்­கள் என்று நான் சொல்­லி­யதை அந்த நண்­பர் நிச்­ச­ய­மாக புரிந்து கொண்­டி­ருப்­பார்.

கொள்கை வேறு­பாடு இல்லை என்ற நிலை­மை­யி­லி­ருந்­தா­லும், தொண்­டர்­க­ளி­டையே கட்சி வேறு­பாடு என்ற நிலை­மை­கள் ஏற்­பட்டு விட்­டது என்­ப­தை­யும், சில­நே­ரங்­க­ளில் கருத்­து­க­ளி­லும், நடை­மு­றை­யி­லும் நாம் வேறு­பட்­டி­ருக்­கி­றோம் என்ற நிலை­மை­கள்  ஏற்­பட்டு இருந்­தா­லும்­கூட ஒரு உயிரை அழிப்­ப­தன் மூலம் ஒரு கொள்­கையை அழித்­து­விட முடி­யுமா என்­றால் நிச்­ச­ய­மாக முடி­யாது என்­பதை நான் சேலத்­தில் குறிப்­பிட்டு அண்ணா சொல்­லி­யி­ருப்­ப­தை­யும் நான் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.

ஒரு கத்­தியை வைத்­துக்­கொண்டு ஆயி­ரம் ஆட்­களை கொன்­று­விட முடி­யும், ஆனால் ஆயி­ரம் கத்­தி­களை வைத்­துக்­கொண்டு ஒரு மனி­த­னு­டைய உள்­ளத்­திலே இருக்­கும் கொள்­கையை மாற்றி விட முடி­யாது என்று அம­ரர் அண்ணா சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அதே சேலம் கூட்­டத்­தில் பேசி­யி­ருக்­கி­றேன். இது­வும் வெளி­வ­ர­வில்லை, இதைப்­பற்­றி­யும் பேரா­சி­ரி­ய­ரின் நண்­பர் அவ­ரி­டம் என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார் என்று எனக்கு தெரி­ய­வில்லை. இதைக்­கூட மாற்­றிச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­களோ என்­னவோ எனக்­குத் தெரி­ய­வில்லை.

ஒன்றை நான் சொல்­கி­றேன். அன்பு உணர்ச்சி எல்­லோர்க்­கும் இருக்க வேண்­டு­மென்­ப­தில் நான் மாறு­பட்­ட­வன் அல்ல என்­ப­தை­யும், இன்­னொ­ரு­வரை அழித்­து­விட்­டால்­தான் நாம் வாழ முடி­யும் என்ற கொள்­கைக்கு நான் சொந்­தக்­கா­ரன்  அல்ல, என்­னு­டைய கட்­சி­யும் அந்த கொள்­கைக்கு சொந்­தம் அல்ல என்ற உத்­த­ர­வா­தத்தை மட்­டும் நான் துணி­வோடு சொல்ல விரும்­பு­கி­றேன்.

ஆனால் ஆங்­காங்கே சில பிரச்­னை­கள் எழும்­பொ­ழுது கருத்­துக்­களை சொல்ல வேண்­டிய கட்­டத்­திற்கு ஒவ்­வொ­ரு­வ­ரும் ஆளா­கி­வி­டு­கி­றார்­கள். அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி என்று சொன்­னா­லும், அர­சி­யல் சூழ்­நி­லைக்கு நண்­பர்­கள் பொறுப்­பாக இருந்­தா­லும் நாமும் அந்த உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிலைக்கு ஆளா­கி­வி­டு­கி­றோம். அந்த வகை­யில் சில பிரச்­னை­களை நாம் சந்­திக்­கும்­பொ­ழுது வார்த்­தை­கள் வர­லாம். ஆனால், கொலை முயற்சி என்­பதை நாம் எப்­பொ­ழு­தும் விரும்­பு­கி­ற­வர்­கள்  அல்ல, அதி­லும் நான் அதை அனு­ப­வித்­த­வன், பிற­ருக்கு அந்த துன்­பம் வரக்­கூ­டாது என்­ப­திலே அக்­கறை உள்­ள­வ­னாக இருப்­பேன் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

அதோடு இன்­னொன்றை நான் குறிப்­பிட வேண்­டும். இன்­றைய தினம் காலை­யில் கூட உறுப்­பி­னர் – யார் என்று நான் குறிப்­பிட வேண்­டாம். அவ­ருக்கே தெரி­யும் கோபா­ல­பு­ரத்­திற்கு போவோம் என்று முத­ல­மைச்­சர் சொன்­னார். அவர் பேசிய பேச்சு ஒலி நாடா­வில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. தேவை­யென்­றால் நான் கொடுக்க தயா­ராக இருக்­கி­றேன் என்று கூறி­னார். நான் பேசிய பேச்சு இது­தான். நான் பேசிய பொதுக் கூட்­டங்­க­ளில் அங்­கங்கே அமளி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. நான் பொது­மக்­க­ளுக்­கும் கட்­சித் தோழர்­க­ளுக்­கும் சொன்­னேன், தய­வு­செய்து நீங்­கள் அமை­தி­யாக இருங்­கள், கல்­லையோ, மண்­ணையோ எறி­ப­வர்­கள் யார் என்­பதை மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்த நீங்­கள் அமை­தி­யாக இருங்­கள். லியா­கத் அலி­கானை சுட்­டுக் கொலை செய்­த­வனை பொது­மக்­கள், அவன் யார் என்று அடை­யா­ளம் தெரி­யாத அள­வுக்கு அடித்­து­விட்­டார்­கள். நீங்­கள் அதை செய்து விடு­வீர்­க­ளென்­றால் சாட்­சிக்கு ஆள் இருக்­காது. இதை செய்­வ­திலே நமக்கு இலா­பம் இராது, அப்­படி நடப்­பது நம்­மு­டைய கொள்­கை­யும் அல்ல என்று சொன்­னேன்.

இந்த பேச்­சுக்கு  அரை மணி நேரத்­திற்கு பிறகு எங்கு போனா­லும் மக்­களே தூண்­டி­னார்­கள் என்­றால், இப்­ப­டியே நீங்­கள் அனை­வ­ரும் அவரை சந்­திக்க வேண்­டு­மென்று போவீர்­க­ளென்­றால்,  எத்­தனை போலீ­சார் வந்து எத்­தனை பேரை சுட்­டுக் கொல்ல வேண்­டி­யி­ருக்­கும் என்று சொன்­னேன். 

அங்­கொன்­றும் இங்­கொன்­றும் பேசிய இரண்டு வார்த்­தை­களை எடுத்­துக் கொண்டு, எதற்­காக பேசி­னேன் என்­பதை பற்றி கொஞ்­சங்­கூட என்னை நன்­றாக தெரிந்­தி­ருந்­தும் சிந்­திக்­கா­மல், இரண்டு வார்த்­தை­களை மட்­டும்  சேர்க்­கும்­போது லார்ட் அமெரி, மகாத்மா காந்­தி­யைப் பற்றி தெரி­வித்த கருத்­துக்­களை போல், இது­வும் தவ­றான கருத்­துக்­க­ளெல்­லாம் உரு­வா­வ­தற்கு கார­ண­மாகி விடு­கி­றது என்­பதை நான் சொல்­லிக் கொள்­கி­றேன்.

சந்­தே­கம் இருந்­தால் பேசித் தீர்த்­துக் கொள்­வோம். நான் தவறு செய்­தி­ருந்­தால், பேரா­சி­ரி­யர் சொன்­னதை போல் திருந்த தயார்,  மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­ள­வும் தயார்.  ஆனால், சொல்­லாத ஒன்றை – பேசத் தெரிந்­த­வர்­கள் நாலும் படித்­த­வர்­கள், விவ­ரம் தெரிந்­த­வர்­கள் – மற்­ற­வர்­கள் சொன்­னதை வைத்து பேசு­வது சரி­யாக இருக்­காது.

ஒட்­டு­மொத்­த­மாக இன்­னொரு விஷ­யத்­தை­யும் நான் சொல்­லி­யாக வேண்­டும். மாண­வர்­கள் தாக்­கப்­ப­டு­கி­றார்­கள். மாண­வர்­களை கல்­லூ­ரிக்­குள் புகுந்து மக்­கள் தாக்­கி­னார்­கள் என்­கிற பெய­ரில் ஆளுங்­கட்­சி­யின் தூண்­டு­தல் அல்­லது ஆளுங்­கட்­சி­யி­னர் சிலர் ரவு­டி­களை கையிலே வைத்­துக்­கொண்டு அங்கே போய் நடத்­து­கிற தாக்­கு­தல் என்­றெல்­லாம் சொல்­கி­றார்­கள். நான் இங்கே பணி­வோடு ஒரு நிலை­மையை நினைவு படுத்த விரும்­பு­கி­றேன். இதை சொல்­வ­தால் முன்பு நடந்­தது அத­னால் இப்­பொ­ழு­தும் நடப்­பது நியா­யம்­தான் என்­கிற அள­வில் அந்த கருத்தை சொல்­கி­றேன் என்று நினைத்து விடக்­கூ­டாது. மக்­கள் பேருந்­தில் பய­ணம் செய்­கி­றார்­கள், அவர்­க­ளுக்­கும் மாண­வர்­கள் பிரச்­னைக்­கும், காவல் துறைக்­கும் சம்­பந்­தம் கிடை­யாது. தொழி­லா­ளர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் இடை­யில் ஒரு பிரச்னை ஏற்­பட்­டது. அது பொதுப்­பி­ரச்­னை­யாக மாறி குழப்­பம் ஆகி விட்­டது. அது வேறு விஷ­யம். ஆனால், இதற்­காக  பொது­மக்­களை, பேருந்­திலே செல்­லும்­போது கல்­எ­றி­வது, தாக்­கு­வது என்று வந்­து­விட்­டால், அதை ஏற்க முடி­யாது, இதற்கு மாண­வர்­கள் ஆட்­ப­டு­வ­தாக இருந்­தால்­கூட, பெற்­றோர்­கள், உடன்­பி­றப்­பு­கள், அண்­ணன்­மார்­கள் இந்த நிலை­மை­க­ளை­யெல்­லாம் அவர்­க­ளுக்கு சொல்ல வேண்­டாமா என்­ப­து­தான் என்­னு­டைய கேள்வி.

முன்­னொ­ரு­முறை அனைத்­திந்­திய அதி­முக ஆட்­சி­யில் இல்­லாத நேரத்­தில் நான் திமுக உறுப்­பி­ன­ராக இருந்த நேரத்­தில், சென்­னை­யில் நடந்­ததை நான் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன். சென்­னை­யில் ஒரு கல்­லூ­ரி­யில் மாண­வர்­கள் வெளியே பஸ்­க­ளை­யெல்­லாம் தாக்கி குழப்­பம் ஏற்­பட்டு பிரச்னை விப­ரீ­தம் அடைந்­த­பொ­ழுது, பக்­கத்­திலே குடி­சை­யிலே மற்ற இடங்­க­ளிலே இருந்த பொது­மக்­கள் வந்து அவர்­களை தாக்­கி­னார்­கள். போலீ­சார் குறுக்­கிட வேண்டி வந்­தது என்­ப­தை­யும் இது ஆளுங்­கட்­சிக்கு  கெட்­ட­பெ­யர் ஏற்­ப­டுத்த கூடிய, பொது­வான மர­பாகி விடுமோ என்­றும் ஐயப்­ப­டு­கி­றேன். அந்த சந்­தே­கத்தை நாம் மாற்­றி­யாக வேண்­டும்.

அந்த நிலைக்கு அன்று நான் எப்­படி திமுக.வில் இருந்­த­போது பொறுப்பு இல்­லையோ அதே போல் இன்­றும் சொல்­கி­றேன். அந்த நிலை­மைக்கு நான் பொறுப்பு இல்லை. ஆனால் மாண­வர்­க­ளுக்கு இடையே சச்­ச­ர­வு­களை உரு­வாக்­கு­வ­தற்­கும் ஒரு கல்­லூ­ரியை சேர்ந்த மாண­வர்­கள் இன்­னொரு கல்­லூ­ரிக்­குள் சென்று அவர்­களை அடிப்­ப­தும், அவர்­களை பழி­வாங்­கு­வ­தும், அதிலே சிலரை பிடித்து வைக்­கும் நிலைமை உரு­வா­வ­தும், 100–க்கு மேற்­பட்­ட­வர்­களை காவல் துறை­யி­னர் குறுக்­கிட்டு தடுக்­கும் போது விப­ரீ­தங்­கள்­ந­டை­பெ­று­வ­து­வும், இவை­கள் எல்­லாம் நாட்­டுக்கு நல்­ல­தல்ல என்­பதை உங்­களை போலவே நானும் நினைக்­கி­றேன், என்­பதை உங்­கள் மன­தில் பதிய வைக்க விரும்­பு­கி­றேன்.

– தொட­ரும்Trending Now: