போர்டு கம்பெனி மூடப்படுவதால் பாதிப்பு ஏற்படுமா? ஆலோசனைக் கூட்டம்

22-09-2021 07:50 PM

சென்னை

சென்னை ஃபோர்ட் மோட்டார் கம்பெனி மூடலின் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) ஏற்படும் தாக்கம் குறித்து அறிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் இன்று கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் ஃபோர்ட் மோட்டார் கம்பெனி இலாபகரமாகச் செயல்படாததால் அடுத்த ஆண்டு முதல் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இக்கம்பெனியில் 2638 நிரந்தரத் தொழிலாளர்களும், 1421 ஒப்பந்தத் தொழிலாளர்களும் மற்றும் 262 பணியாளர்களும்  பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிறுவனத்திற்கு நேரடியாக உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 75 பெருநிறுவனங்களும், 200க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் தங்களது உற்பத்தியில் சுமார் 15 விழுக்காடு மட்டுமே ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கு வழங்குகின்றன. மீதமுள்ள 85 விழுக்காடு இதர நிறுவனங்களுக்கு  உற்பத்தி செய்து வழங்குகின்றன.

இந்நிலையில் MSME நிறுவனங்களுக்கு எதிர்பார்க்கப்படும் தாக்கம் குறித்து அறிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் வரும் காலங்களில் தங்களுடைய வியாபார யுக்திகளின் மூலம் பாதிப்புகளிலிருந்து MSME நிறுவனங்கள் விரைவில் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சுமார் 50 MSME நிறுவனங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலர் V.அருண்ராய் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி. சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Trending Now: