5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு

02-08-2021 01:01 PM

சென்னை:

இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசு பயணமாக சென்னை வந்தார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு,  திருக்குறள், தலைமுறைகள், வாடிவாசல், செம்பருத்தி, கரிசல் கதைகள், சுழலில் மிதக்கும் தீபங்கள் ஆகிய புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை அன்பளிப்பாக வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கியது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில், சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.

அப்போது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தலைமை தாங்கி நடத்தி தரவும்,

சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

மதுரையில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா,

சென்னை கிண்டியில் அமைய இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா,

சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னைக்கு வந்துள்ளார். 

இன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.Trending Now: