சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 48 – துரை கருணா

24-06-2016 09:53 PM

தொழிலாளர் பிரச்னையும் அரசு நிலையும்!

தமிழக சட்டமன்றத்தில் ௧௯௭௮–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியது:–

க. சுப்பு (திமுக): முதலமைச்சரவர்கள் பேசும் பொழுது சொல்லியிருக்கிறார்கள்,  தொழிலாளர்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில இடங்களில் சில தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களுக்காகப் போராடுவதாக அறிவிக்கிறார்கள். ஆனால் முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு சங்கத்தையும் தொழிலாளர்களையும் அடகு வைக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். காலம் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்த சம்மதம் அளிக்கும்போது அவர்கள் யார் என்பதை நான் தெரிவிப்பேன். அது எனது கடமையாகும் என்று நன்றாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் விவரங்களைச் சொல்ல வேண்டும். அப்படி தெரிந்திருந்தால்  சொல்லாமல் இருப்பது குற்றம் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் சொல்லாமல் இருப்பது குற்றம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒழுக்க நெறிக்கு ஏற்ப முதலமைச்சர் அந்த விவரங்களையெல்லாம் சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் : எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக்கூடாது, எப்படிச் சொல்வது, எந்த நேரத்தில் சொல்வது என்பது எனக்கு மிக மிக நன்றாக தெரியும். அதைப்பற்றி சுப்பு அவர்களுக்கு தெரியாது. கலைஞரை கேட்டால் தெரியும். வேறு வகையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் நான் எப்படிப்பட்டவன் என்பது அவருக்கு நிச்சயமாக தெரியும் என்பதால் உங்கள் தலைவரிடத்தில் நான் ஒப்படைத்து விடுகிறேன்.

நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்; நான் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு தொழிற்சங்கத்தினுடைய கொடியைப் பறக்க விடுவதற்கு எந்த இடத்திலாவது அனுமதி இல்லை என்ற நிலைமை நாட்டிலே தோன்றுகின்ற சூழ்நிலை இருக்குமானால், 'கேட்மீட்டிங்' என்று சொல்கிறார்களே, அதை நடத்த முடியாது என்ற நிலைமை நாட்டிலே இருக்குமானால், அதற்கும் தொழிற்சங்கமோ, மற்றவர்களோ, அந்த முதலாளிகளோ ஒத்துழைக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சுப்பு புரிந்து கொள்வார் என்று கருதுகிறேன். அதற்கு மேல் அவர் வற்புறுத்தக் கூடாது. அவருக்கு தெரியும். என் வாயாலே கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார். அவர் அங்கே போய் பேசிவிட்டு வந்திருக்கிறார்; அவர் அங்கே போய் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வந்திருக்கிறார். ஆகவே, அவருக்கு எல்லாம் தெரியும்.

பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக, ராணுவத்திற்கு தேவையான பொருள் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும்; அது அங்கே உற்பத்தியாக வேண்டுமென்பதற்காக இந்த தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கிறதே தவிர வேறு எந்த காரணமும் இல்லையென்பதை இங்கே நான் தெளிவாக, தலைவர் மூலமாக, சுப்புவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

காலம் என்ற மணிக்கணக்கை நான் கூறவில்லை; காலம் என்பதை புரோகித மனப்பான்மையுடன் நான் கூறவில்லை – இந்த காலத்தைப் பற்றி நான் கூறும்போது, ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்வது தடுக்கப்பட முடியாது என்கிற நிலைமை மத்திய அரசுக்கு என்றைக்கு வருகிறதோ, இந்த பாதுகாப்பு உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படுகிறபொழுது, அல்லது அவர்கள் தலையிட்டு அந்த தொழிற்சாலையை எடுத்துக்கொள்ளும் காலம் வரும் போது நான் அதை நிரூபிக்க முடியும், சொல்ல முடியும். எனவே இப்போதைக்கு அதை நான் ஜீரணித்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன் என்பதை ஒரு முதலமைச்சராக இருக்கிறேன் என்பதால் சொல்கிறேன். இந்திய துணைக் கண்டத்து ஒட்டு மொத்த நன்மையை முன்னிட்டு நான் அமைதியாக இருக்கிறேன் அவ்வளவுதான்.

இதை சொல்லும்போது தொழிலாளர்களைப் பற்றி நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அவர்கள் தங்களுடைய குறைகளை பற்றி சொல்கின்ற நேரத்தில், டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிற நிலைமையைப் பற்றி நாங்கள் அக்கறை காட்டவில்லையென்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அக்கறை காட்டவில்லையென்பது தவறு. இதில் அதிக அக்கறையோடு நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அதை பற்றி இருவரையும் அழைத்துப் பேசினோம் என்பதையெல்லாம் யாரும் மறந்து விட முடியாது. ஆனால் இருவரும் ஆரம்பத்தில் ஒரே கருத்தில் இருப்பது போல் ஒருங்கிணைந்து, கையெழுத்துப் போடுகிற நிலைமை வந்தபொழுது இருவரும் பின் வாங்கி இருக்கிறார்கள். 

இந்த அளவு தருவோம் என்கிற உத்திரவாதத்தை தொழிற்சாலை அதிபர்கள் தெரிவிக்க வேண்டுமென்பது தொழிலாளர்களது வாதம், வழக்குகளைப் போட்டு தொழிலாளர்களை அதிக  அளவு துன்பத்துக்குள்ளாக்கியதால், இந்த அளவு தரப்பட வேண்டும், அது தொழிலாளர்களுடைய தேவை. அது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு 7, 8 மாதங்கள் வேலை இழந்திருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு அதற்கு ஏதாவது தந்தாக வேண்டுமென்பது ஒரு பிரச்னை.

இன்னொரு பிரச்னை 'போனஸ் தந்து விடுகிறோம்' என்று சொல்கிறார்கள். ஆனால், சொல்லும்போது, அந்த அதிபர் கேட்கிறார், 'மொத்த சம்பளத்தை கேட்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. கேட்க மாட்டோம். 7 மாதம், 8 மாதம் வேலையில்லாமல் இருந்ததற்கு நாங்கள் ஏதும் கேட்க மாட்டோம்' என்று தொழிலாளர்கள் எழுதி தர வேண்டுமென்று கேட்கிறார்கள். அதை தமிழக அரசு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த உரிமையைத் தொழிலாளர்கள் விட்டுக் கொடுக்க முடியாது. தொழிலாளர்கள் இதை கேட்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதிபர்கள் அதை ஒத்துக்கொள்ள முடியாது என்று மறுக்கிற நேரத்தில், இதை எப்படி தீர்த்து வைக்க முடியுமோ, சட்டம் எப்படி இடங்கொடுக்குமோ அந்த வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பல சம்பவங்களை பற்றி குறிப்பிட்டார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தால், சுப்பு அவர்களுக்கு சொல்லிக் கொள்வேன், அடுத்தக் கூட்டத் தொடரில் வாய்ப்பு தருவீர்களானால், நான் இனி இந்த அவையில் தினந்தோறும் இருப்பது என்ற முடிவிற்கு வந்து இருக்கிறேன் என்பதையும் சொல்லி நான் இங்கே இல்லை என்ற குறை யாருக்கும் இல்லாமல் பார்ததுக் கொள்வேன் என்பதையும் சொல்லி, இந்த ஆளுநர் உரையை ஏற்றுக்கொள்ளுமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.ஜே. சாதிக் பாட்சா (திமுக) : நான் கேட்டுக்கொள்வது இந்த பேரணாம்பட்டு பிரச்னைக்கு தாங்களே நேரடியாக விசாரணை செய்து ஒருவகையில் மேலும் சுமூகமான நிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பல தவறான காரியங்கள் ஏற்படுமோ என்ற அச்சம் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் : உறுப்பினர் சாதிக் பாட்சாவினுடைய கோரிக்கை அல்ல; வேண்டுகோள் அல்ல; அந்த கட்டளையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நானே அந்த விசாரணையை மேற்கொள்கிறேன்.

அதோடு, இந்த ஆளுநர் உரையில் இன்னும் பல கருத்துக்களை, எவ்வளவோ செய்திகளை மக்களுக்குச் சொல்வதாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இங்கே இருக்கும்போது சில விவரங்களை பேச வேண்டுமென்று நினைத்தேன். அவர்கள் அவசரமாக ஒரு மண விழாவிற்கு சென்றிருக்கிறார்கள். இன்னொருமுறை வாய்ப்பு கிடைக்கும்போது அவைகளைப்பற்றி தெளிவாக சொல்லி அவர்களுடைய கருத்துக்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி, இந்த ஆளுநர் உரையை உறுப்பினர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றித்தர வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

(தொடரும்)Trending Now: