ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது

01-03-2021 07:03 PM

சென்னை, 

சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர் பகுதி ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை பாலியல் தொல்லை செய்த பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அந்தப் பெண் சுதாரிப்பதற்கு முன் அவர் தப்பியோடி விட்டார்.
   இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், உதவிக்கமிஷனர் கவுதமன், தலைமைக் காவலர் சுப்ரமணி, முதல்நிலை காவலர்கள் ராஜசேகர், மகேஸ்வரன் பிள்ளை, பன்னீர் ராஜா குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில்  பூந்தமல்லியில் ராஜா அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சரண் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
   விசாரணையில் சரண் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடந்த 3 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜன்டாக வேலை பார்த்து வந்துள்ளார்.

பணம் வசூலிப்பதற்காக பைக்கில் செல்லும் போது சாலையோரம் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக சீண்டுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

   பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பந்தப்பட்ட புகார் அளிக்க பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது எனவும் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் அல்லது  8754401111 என்ற துணைக் கமிஷனரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் கேட்டுக்கொண்டுள்ளார்.Trending Now: