இனிமேல் சீரியலில் ராதிகாவை பார்க்கவே முடியாது?

17-02-2021 01:14 PM

சினிமாவில்  40  வருடங்கள்,   சின்னத்திரையில்  22  வருட  அனுபவசாலி,   கலையரசி  ராதிகா. தனது  ரடான்  நிறுவனம்  சார்பில் 1999ல்   “சித்தி”  மெகா  சீரியலை  சன்  டிவிக்காக   தயாரித்து   நடித்தார்.    அது  சூப்பர் டூப்பர்  ஹிட்டானதை  தொடர்ந்து  “அண்ணாமலை,” “செல்வி,” “அரசி,” “செல்லமே,” “வாணி  ராணி, “சந்திரகுமாரி”  ஆகிய  சீரியல்களை  தயாரித்து  நடித்தார்.    சென்ற  ஆண்டில்  “சித்தி”  இரண்டாம்  பாகத்தை   தயாரிக்க  ஆரம்பித்து  நடித்தும்  வந்தார்.  அவர்  எதிர்பார்த்தபடி  பார்வையாளர்களின் அமோக  வரவேற்பை  அது  பெற்றுக்கொண்டிருக்கும்  நிலையில்,  அண்மையில்  இந்த  சீரியலில்  நடிப்பதிலிருந்து  தான்  விலகுவதாக   ‘திடீர்’  அறிவிப்பை  டுவிட்டரில்  பதிவிட்டார்.  தனது  கணவர்  சரத்குமாரின்  ‘சமத்துவ   மக்கள்  கட்சி’யின்  மாநில  முதன்மை துணை  பொது  செயலாளராக  அவர்  பொறுப்பு  வகிப்பதால்,  தமிழக  சட்டசபை  தேர்தல்  காரணமாக  கணவரையும்  கட்சியையும்   பலப்படுத்தும்  வகையில் தான் கட்சி  பணியில்  முழுவீச்சில்  இறங்கப்போவதாக  அறிவித்தார்.

சினிமாவில்  மட்டும் கவனம்  செலுத்துவது  என்றும்,  சின்னத்திரையிலிருந்து  விலகுவது என்றும்  முடிவெடுத்திருக்கிறார்.

 ரடான்  நிறுவனத்தை  சேர்ந்த  ஒரு  முக்கிய  அதிகாரியிடம்  இது  குறித்து  விசாரித்த  போது -


   “ஆற்றில்  ஒரு  கால்,  சேற்றில்  ஒரு  கால்   என்று  மேடத்தால்  இருக்க  முடியாது  அல்லவா?  சீரியல்   ஷூட்டிங்குக்கு  போகவேண்டும்,   அப்புறம்  தினமும்  எடிட்டிங்,  டப்பிங்  வேறு.  ஆனால்,  சினிமாவுக்கு  இந்த  மாதிரி  பிரச்னை  வராது.  

          சென்ற  11ம்  தேதியோடு   அவர்  சம்பந்தப்பட்ட  ஷூட்டிங்  முடிந்து  விட்டது.  கடைசி  நாள்  ஷூட்டிங்  என்பதால்   எல்லோரும்  மேடத்துடன்  போட்டோ  எடுத்துக்கொண்டார்கள்.  எல்லோருக்கும்  ஒரே  வருத்தம்.  12ம்  தேதியிலிருந்து  மேடம்  ஆபீஸ்  வேலையை  பார்க்க  ஆரம்பித்துவிட்டார்.    தேர்தல்  தேதி  அறிவிக்கப்பட்டுவிட்டால்,  அதன்பின்   கட்சி  பிரசாரத்துக்கு  போய்விடுவார்.  

          பிரைம்டைமான   இரவு  9.30 மணிக்கு  ஒளிபரப்பாகி  வந்த  “சித்தி  2”  சீரியல்,   இன்றிலிருந்து   ( பிப். 15 )  இரவு  10  மணிக்கு  ஒளிபரப்பாக  போகிறது.  இரவு  10  மணி  என்பது   நான் -  பிரைம்டைம்.  அதாவது,  பிரைம்டைம்  இல்லாதது.   இதில்  பெரிய  சிக்கல்  இருக்கிறது.  அதாவது,   ஒரு பேச்சுக்கு  சொல்கிறேன்  .............   பிரைம்டைமுக்கு  ரூ.  5  லட்சம்  சேனல்  தரப்பு கொடுக்கிறது  என்றால்,   அந்த  தொகையில்  பாதிதான்  நான் - பிரைம்டைமுக்கு  கொடுக்கும்.   அப்படி  குறைத்தால்,  ஆர்டிஸ்டுகள்  தங்கள்  சம்பளத்தை  குறைப்பார்களா?   “நீங்கள்  தினமும்  சம்பளமாக  ரூ.  10 ஆயிரம்  வாங்கிக்கொண்டிருந்தீர்கள்,  சீரியல்   இப்போது  நான் - பிரைம்டைமில் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பதால்,    ரூ. 5  ஆயிரம்  வாங்கிக்கொள்ளுங்கள்!” என்று  சொன்னால்,  யார்  நடிப்பார்கள்?  அதே  உழைப்பு,    ஆனால்  குறைந்த  சம்பளம்.  எப்படி  சரியாக  இருக்கும்?  

மேடம்  இப்போது  சினிமாவில்  பிசியாகிவிட்டார்.  2, 3  தெலுங்கு  படங்களில்  நடிக்கிறார்,  2, 3  தமிழ் படங்களில்  கமிட்டாகியிருக்கிறார்.  

தேர்தல்  எல்லாம்  முடிந்து,  ஆட்சி  அமைந்து,  என்ன  நடக்கும்  என்பது மே  மாதம்தான்  தெரியும்!” என்று  சொன்னார்.

சரி ......   ராதிகாவின்  ‘சாரதா’ கேரக்டருக்கு  என்ன  வழி?

 நேற்று முந்தின நாள்  எபிசோடிலேயே  இந்த  கேள்விக்கு  பதில்  கிடைத்துவிட்டது.   அதாவது,  கதைப்படி வேலையில்லாமலிருந்த  மகாலட்சுமியின் கணவருக்கு  சிங்கப்பூரில்  வேலை  கிடைத்திருப்பதாகவும்,   மேலும்  ராதிகாவுக்கே  அங்கே  ஒரு  வேலை  கிடைத்திருப்பதாகவும்,  அதனால்   “நிழல்கள்”  ரவி  உட்பட  சிலர்  சிங்கப்பூருக்கு  புறப்படுவது  போல  காட்சிகள் இடம்பெற்றன.  


         ஆக,  இனி  சின்னத்திரைக்கு  ராதிகா  வரவேமாட்டார்  என்கிற  நிலைப்பாடு  உறுதியாக  இருக்கும் பட்சத்தில்,  “சித்தி  2”  முடியும்  வரை   அவருடைய  ‘சாரதா’ கேரக்டர்  சிங்கப்பூரிலேயேதான்  இருக்கும்.  அப்படித்தானே?  ( ஹி ...... ஹி .......  ஹி ....... )Trending Now: