இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

16-02-2021 05:19 PM

சென்னை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது.

 இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியிருந்தது.

4ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் லாரன்ஸை 26 ரன்களில் வீழ்த்தினார் அஸ்வின். ரிஷப் பந்த் ஸ்டம்பிங் செய்து அவரை வெளியேற்றினார்.

பென் ஸ்டோக்ஸை மீண்டுமொரு முறை வீழ்த்தினார் அஸ்வின். 8  ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.

போப், 12 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்துவீச்சிலும்

பென் ஃபோக்ஸ் 2 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், 33 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஸ்டோன் ரன் எதுவும் எடுக்காமல் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இறுதியில் விளையாடிய  மொயீன் அலி சிக்ஸர் மழை பொழிந்தார். 

அக்‌ஷர் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்தார். 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த மொயீன் அலி, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் சுருண்டது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1 - 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

3-வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் பிப்ரவரி 24ம் தேதி தொடங்குகிறது.Trending Now: