அஸ்வினி
வாசகர்களே, பொங்கல் நல்வாழ்த்துகள். இதுவரை காலக்கோளாறுகளையும் கிரகக்கோளாறுகளையும் நீங்கள் சந்தித்து கவலைப்பட்டு பணம், பொருளை இழந்து, கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டு, ஒருவழியாக இந்தத் தைத் திருநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.
உங்கள் நட்சத்திரம் சார்பாக சனிபகவான் நல்ல நிலைமையில் இருக்கிறார். அதாவது தனதாரையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். குருபகவானும் தாரா பல நிலைமையில் நகர்ந்து கொண்டிருக்கிறார். ஆக இனி வரும் 6 மாதங்களுக்கு எவ்வித புதிய கோளாறு, இடர்ப்பாடுகளை சந்திக்காமல் வாழ்வில் அடுத்தடுத்த கட்ட உயர்வு முன்னேற்றப் பாதையில் பயணிக்கப் போகிறீர்கள். ஆரோக்கியம் எவ்வித பெரிய சஞ்சலங்களையும் ஏற்படுத்தாமல் இருக்கப் போகிறது.
குடும்ப நிலைமை சந்தோஷத்தை கொடுக்கப்போகிறது. உத்தியோக, தொழில், நிர்வாக, வியாபார வகைகளில் எந்த மாதிரியான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறீர்களோ, அதிலெல்லாம் முழு வெற்றிதான். இந்த் தை, மாசி மாதங்களும் வருகிற ஆனி மற்றும் புரட்டாசி மாதங்களும் உயர்வுகளை, நன்மையான பொருளா தார திருப்பங்களை ஏற்படுத்த இருக்கிறது.
இந்தப் பொங்கல் முதல் வருகிற 8 மாதம் தொடர்ச்சியாக பூசம், அனுஷம் மற்றும் திருவோண நட்சத்திர அன்பர்கள் உங்களுக்கென்று உதவி, ஒத்தாசை சலுகைகளை செய்து கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அடுத்து வருகிற பொங்கலுக்குள் உங்களது நிலைமை உயர்ந்து ஜொலிக்கப் போகிறீர்கள்.
பரணி
வாசகர்களே, உங்கள் நட்சத்திரப்படி இந்தப் பொங்கலுக்கு முன்பாக சனிபகவானின் அனுகூலமற்ற சஞ்சாரத்தால், அதாவது அவர் ஜென்மானு ஜென்மநட்சத்திரத்தில் பிரவேசிப்பதால் கடந்து போன ஆவணி மாதத்திலிருந்தே அனைத்து விஷயத்திலும் 35 சதவீத நன்மை நிவர்த்திகளை மட்டும் சந்தித்து வந்திருக்கிறீர்கள்.
எனவே இந்தப் பொங்கல் உங்களுக்கு வெகு விசேஷகரமான அதிர்ஷ்ட பொங்கல்தான். ஆரோக்கியம் பலமுடனே இருக்கிறது.
காசு, பணம் நிவர்த்தி விஷயங்களிலும் உயர்வான நிவர்த்திதான். இருந்தாலும் நீங்கள் நினைத்து எதிர்பார்ப்பது போல மேலும் கூடுதலான திருப்தி கிடைக்க வருகிற மாசி மாதம் 17ம் தேதிக்குப் பிறகுதான் என்று சனிபகவானே சொல்கிறார். உங்கள் நட்சத்திரத்துக்கு ராகு கேதுகள் வெகு சாதகமான சஞ்சாரப் பாதையில் இருப்பதால், எதிலும் எளிதான வெற்றி, திட்டமிட்டிருப்பதில், தொழில், வியாபார நிலைமைகளில், உத்தியோக பதவி, பொறுப்பு வகைகளில் சிறப்பான மனநிறைவு என்றபடிதான் அடுத்தடுத்த மாதங்களில் சந்திக்க வைக்க இருக்கிறது. உங்கள் நட்சத்திரத்துக்கு எப்போதுமே ஆனி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி மாதங்கள் வெகு ஜோரானவை.
இந்த பொங்கல் தொட்டு 3 மாதத்துக்குள் அனைத்து விஷயத்திலும் அதிரடி திருப்பங்களை சந்தித்து முடிக்க இருக்கிறீர்கள். உங்களது நட்சத்திரத்துக்கு எல்லா காலமும் சித்திரை, அவிட்டம், உத்திராடம், புனர்பூச நட்சத்திர அன்பர்கள் வெகு சிறப்பான சாதகங்களை உண்டாக்கி கொடுப்பவர்கள்.
கார்த்திகை
வாசகர்களே, வெகு சிறப்பான நன்மைகளுடன் விமரிசையாக இந்தப் பொங்கலை கொண்டாட ஆயத்தமாகி இருக்கிறீர்கள். அதுபோலவே இந்தப் பொங்கல் திருநாள் இதுவரை நீங்கள் சந்திக்காத சூப்பர் மகிழ்ச்சியான பொங்கல்தான். பொருளாதார ரீதியாக நீடித்த சங்கடமும் கைக்கும் வாய்க்கும் பற்றாத வருவாய் இனங்களும், அதிர்ஷ்டகரமான மாற்றத்தினை உண்டாக்கித் தரப் போகிறது இந்தப்பொங்கல். தொழிலில், வியாபாரத்தில், சொந்த நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தினை உருவாக்கப் போகிறீர்கள்.
உத்தியோக, பதவி, பொறுப்புகளில் உள்ள இடர்ப்பாடுகள் விலகப் போகிற காலம்
உதயமாகிவிட்டது.
அதோடு எல்லா தமிழ் மாதங்களிலும் இந்த நட்சத்திரத்துக்கு ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்கள் அற்புதமான திருப்பம், உயர்வு,அதிர்ஷ்டங்களை உருவாக்கும். அந்த வகையில் இப்போது வருகிற பங்குனி மாதத்தில் ஒரு எதிர்பாராத பெரிய உயர்வு தொடக்கம் ஏற்படப் போகிறது. புதிய தொழில், பட்ஜெட், வியாபார தொடக்கங்களுக்கு உறுதியான சாதகத்தை உருவாக்கப் போகிறது. மேலும் உங்கள் நட்சத்திரத்துக்கு மகம், அஸ்வினி மற்றும் அஸ்தம், சதயம் நட்சத்திர நேயர்கள் உங்களுக்கு அனைத்து உயர்வுகளுக்கு உறுதுணையாக நிற்கப் போகிறார்கள்.
வருகிற சித்திரை மாதத்தில் சற்றே அனைத்து புதுவிஷயங்களிலும் உங்களை நீங்கள் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரோகிணி
வாசகர்களே, புதியவித யோகமும் மகா அதிர்ஷ்டமும்,
மிகப்பெரிய சந்தோஷ அதிர்ஷ்டத்தையும் உருவாக்கிவிட்டு வந்திருக்கிறது உங்களுக்கு இந்தத் தைத்திருநாள். உங்களது ஒட்டுமொத்த போராட்டங்களுக்கும் 65 சதவீத நிம்மதியையும் உருவாக்கியிருக்கிறது.
உங்கள் நட்சத்திரம் முழுமையாக ரிஷப ராசிக்குள் வியாபித்து இருப்பதன் பொருட்டு, ரிஷப ராசிக்கான கிரக நிலைகளில் சற்றே செவ்வாயும், ராகுவும் சாதகமற்ற சஞ்சார போக்கில் இருப்பதால் மட்டும் சில நேரம் கடுமை கலந்த அவஸ்தைகள், பெரிய விரயங்கள் என்றபடி போய்க் கொண்டிருக்கலாம். இந்த நிலைமை வருகிற தை மாதம் 10ம் தேதிக்குப் பின்னர் ஒவ்வொரு விஷயத்திலும், மேன்மையான பலவித அனுகூல அதிர்ஷ்ட உயர்வுகளை கொடுக்கப் போகிறது.
வாரிசுகள் சம்பந்தப்பட்ட கவலை முற்றிலுமாக தீரப் போகிறது. திடீர் அயலுார் தொழில் திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்தப் போகிறீர்கள். பெரிய கடன் விஷயங்களில் இருந்தெல்லாம் வருகிற மாசி மாதம் 6ம் தேதிக்குப் பின்னர் பங்குனி மாதம் முடிவதற்குள் முழுமையாக வெளிவர இருக்கிறீர்கள். கூட்டு சம்பந்தமான தொழில், வியாபார, நிர்வாகத்திலிருந்து விலகி தனித்தொழிலில் முதலாளியாகப் போகிறீர்கள். மற்றபடி உங்களுக்கான உயர்வு மாதம் எப்போதுமே மாசியும் பங்குனியும், ஐப்பசியும்தான். இந்த பொங்கல் முதல் திருவாதிரை, பூசம், சுவாதி, உத்திராடம் மற்றும் சதய நட்சத்திர தினங்கள் எண்ணற்ற உயர்வுகளை உண்டாக்கப் போகிறது.
மிருகசீரிஷம்
வாசகர்களே, இந்த நட்சத்திர நேயர்கள் ரிஷப ராசியிலும், மிதுன ராசியிலும் இருப்பதால் இரண்டு ராசிப்பிரகாரம் கிரக நிலைகள் அவ்வளவு பெரிய சாதகமாக இல்லாவிட்டாலும், நட்சத்திர வழியாக குருவும், கேதுவும், செவ்வாயும்70 சதவீத சாதக பலத்துடன் சுழற்சியோடு இருப்பதால் எவ்வித பெரிய கோளாறுகளும், சங்கடங்களும் ஏற்படுத்தாமல்தான் இந்தப் பொங்கல் திருநாள் உங்களுக்காக வந்திருக்கிறது.
அதோடு இந்த தை மாதம் தொட்டு சித்திரை மாதம் முடிவதற்குள் நீங்கள் என்னென்ன திட்டம் வைத்திருக்கிறீர்களோ, எது மாதிரியான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களோ அதிலெல்லாம் திருப்திகரமான ஏற்றம், சாதகம் உண்டாக்க வந்திருக்கிற அதிர்ஷ்டமான பொங்கல் இது.
60 சதவீத பணத்தட்டுப்பாடு விலகிவிடும். எதிர்பார்த்திருக்கிற விஷயங்கள் 70 சதவீத சாதக செய்தியினை கொடுத்துவிடும். போட்டி,பொறாமை எதிர்ப்பு விஷயங்களிலிருந்து 50 சதவீதம் வெளியில் வந்து விடுவீர்கள். இல்ல ரீதியான குழப்பம் மணவாழ்க்கை ரீதியான சிக்கல, உற்றார் உறவினர் சார்ந்த சங்கடங்கள் அனைத்துக்கும் தீர்க்கமான நிம்மதியை தர வந்துள்ள பொங்கல் இது.
உங்களுக்கான யோக மாதங்கள் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆவணி, கார்த்திகை, மார்கழி, மாசி, சித்திரை மாதங்கள்.
இந்தப் பொங்கல் தொட்டு வருகிற பூசம், மகம், மூலம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர தினங்களில் அதிரடியான திடீர் அதிர்ஷ்ட உயர்வுகள்தான்.
திருவாதிரை
வாசகர்களே, திருவாதிரை நட்சத்திரத்துக்கு தற்காலம் கிரக நிலைகள் வெகு சாதகமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நட்சத்திர அதிபதியான ராகு ராசிக்குள்ளேயே இருப்பதால், நல்ல பேரும் புகழும் கவுரவமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, இதற்குண்டான லாப வருவாய் சாதகங்களை பொறுத்தவரை சற்றே பின்னடைவாகத்தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால், குருபகவான் மட்டும் வெகு அதிர்ஷ்டமான சஞ்சாரத்தில் நின்று கொண்டு உங்களை சாந்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆக குடும்ப இனிமை துாக்கலாகவே இருக்கிறது. ஆரோக்கியத்தில் தெளிவை கொடுத்துக் கொண்டு வருகிறது. தொழில், வியாபார நிர்வாக பட்ஜெட் விஷயங்களைப் பொறுத்தவரை சமாளிக்கக் கூடிய பக்குவத்திலேயே லாபத்தை உண்டாக்கி தந்து கொண்டிருக்கின்றன.
உத்தியோக, பதவி, பொறுப்பு விஷயங்களைப் பொறுத்தவரை அடிக்கடி இடமாற்றத்தை சந்தித்த நீங்கள் இனி ஒரு அதிர்ஷ்டமான நிரந்தரத்தையும், ஊதிய சம்பள மேன்மையையும் வருகிற மாதங்களில் சந்திக்கப் போகிறீர்கள். வருகிற பங்குனி மாதம் 17ம் தேதிக்குள் திட்டம் போட்டிருக்கிற சுபகாரியம் நிறைவேறப் போகிறது. கவலையாக இருக்கிற புத்திர பாக்கிய விஷயமும் நடக்கப் போகிறது.
உங்களுக்கான அதிர்ஷ்ட மாதங்கள் கார்த்திகை, மாசி, சித்திரை, வைகாசி.
இந்த பொங்கல் முதல் வரப்போகிற திருவோணம், புனர்பூசம், பரணி, ரோகிணி மற்றும் பூரம் நட்சத்திரத்தில் எல்லாம் எதிர்பாராத விசேஷ உயர்வுகள் காத்திருக்கின்றன.
புனர்பூசம்
வாசகர்களே, உங்களது நட்சத்திரப் பிரகாரம் இந்தப் பொங்கல் தொட்டு 84 தினங்களுக்குள் பலவித திருப்பங்களை எதிர்பாராத வகையில் சந்தித்து விட இருக்கிறீர்கள். குடும்பச் சூழ்நிலையும் மிக இதமாக நகரப் போகிறது. இருமடங்கு வருவாய் இனங்கள் நீங்கள் இறங்கியிருக்கிற விஷயங்களில் கிடைக்கப் போகிறது. ஆரோக்கிய நிலைமை விரய செலவினங்களில் கொண்டு போய் நிறுத்தாது. இந்த நட்சத்திர நேயர்கள் கடக ராசியாக இருப்பின் வருகிற தை மாத 22 தேதிக்குள் எதிர்பாராத பரிசு, பண, ஆதாய வரவுகளை எதன் ரூபத்திலோ சந்திக்கப் போகிறார்கள். மிதுன ராசியாய் இருப்பின் பழைய பாக்கிகள் வசூலாகி விடும்.
தொழில், வியாபார நிலைமை உயரும். கூடுதல் வருவாய் இனங்கள் கிடைக்கும். உபரி கமிஷன் வரவுகளுக்கு சாத்தியமுண்டு. மற்றபடி புதிய திட்டங்கள் வருகிற மாசி மாத 8ம் தேதியிலிருந்து பெரியளவில் பலிதமாகும். உத்தியோக உயர்வு மாற்றங்களுக்கும் அதிர்ஷ்டமிருக்கிறது. சம்பள ஊதிய நிலுவைத் தொகைகள் வசூலாகி விட இருக்கிறது. அதோடு சொத்துபத்து இனங்களால் நிவர்த்திகள் கிடைக்க வேண்டியிருப்பின் அதுவும் பலிதமாகி விடும். எல்லா
தமிழ் வருடங்களிலுமே இந்த நட்சத்திர நேயர்களுக்கு புரட்டாசி, மார்கழி, தை,
பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் வெகு அற்புதமானவை.
இந்தப் பொங்கல் முதல் வருகிற நட்சத்திரங்களான
மகம், உத்திரம், கார்த்திகை, அஸ்வினி மற்றும் சித்திரை நட்சத்திரங்களிலும், திங்கட்கிழமை வருகிற போதும் சுபிட்சமான உயர்வுகள் பெரியளவில் காத்துள்ளன.
பூசம்
வாசகர்களே, இந்த தைத் திருநாளுக்காக உங்கள் நட்சத்திரத்துக்கு விசேஷகரமான வாழ்த்துகளை சொல்ல வேண்டும். காரணம் பூச நட்சத்திரத்தின் கடக ராசிப்பிரகாரம் அருமையான கிரக அமைப்புகள். மிக உன்னதமான அதிர்ஷ்ட கிரக சேர்க்கைகள். எட்டு கிரகங்களைத் தாண்டிய சனியின் வலிமை. இவரைத் தாண்டிய கேது கிரகம் கொடுக்கப் போகிற மிக உன்னதமான அதிர்ஷ்டம் போன்ற இன்னும் பல கூடுதல் வலிமைகளால் இந்த பொங்கல் ஆரம்பித்து மிகச் சரியாக 18 தினம் கடந்த பிறகு காரிய பலிதங்கள் ஒவ்வொன்றாக பெரிய மாறுதல்களுடன் ஏற்பட இருக்கிறது.
என்னென்ன திட்டங்கள், ஏற்பாடுகள் பட்ஜெட் முயற்சிகள் பயண விஷயங்களில் இறங்கியிருக்கிறீர்களோ, அதுவெல்லாம் வெற்றிகளை உங்களுக்கென தரப் போகிறது.
வருகிற பங்குனி மாதத்திலிருந்து ஏகப்பட்ட திருப்தி மகிழ்ச்சிகளும் பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கைகளும் புது வீடு மாற்றமும், உத்தியோக தொழில், பதவி பொறுப்பு விஷயங்களில் உயர்வும் கண்டிப்பாக உண்டு.
உங்கள் நட்சத்திரத்துக்கு எப்போதுமே புரட்டாசி, கார்த்திகை, பங்குனி,
சித்திரை, வைகாசி மாதங்கள் அருமையான திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவை.
இந்தப் பொங்கல் தொடங்கி வருகிற சுவாதி, பூரம், மிருகசீரிஷம், திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திரங்கள் வரும் நாட்களில் அற்புதமான நன்மைகள் கிட்டும். அதோடு இனி வரப்போகிற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்புகள் காத்துள்ளன.
ஆயில்யம்
வாசகர்களே, ஒருபுறம் காரணமற்ற இனம்புரியாத சிற்சில தடுமாற்றங்களுடன் இந்தப் பொங்கல் திருநாள் வந்தாலும், எல்லாவற்றையும் லாவகமாக சமாளித்து, மகிழ்ச்சிகளுடன்தான் இந்தத் தைத் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நட்சத்திரத்துக்கான கடக ராசிக்கு இந்தத் தை மாத கோட்சார பலம் எப்போதுமே 60 சதவீத திருப்தியினை மட்டுமே தரும். ஆக இந்தத் தை மாதம் 24 தேதிகள் போகட்டும். அதன் பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் ஏகபோகமான சந்தோஷ திருப்தி வெற்றிகள் காத்துள்ளன.
வருகிற மாசி மாதம் 13 தேதி வரை சற்றே எதிலும் பொறுமை தேவை. மற்றபடி குடும்பம், ஆரோக்கியம், வாரிசுகள், வாழ்க்கைத்துணை, உற்றார் உறவினர்களால் எதிர்பார்க்காத அனுசரணை, ஒத்துழைப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது.
தொழில், வியாபாரத்திட்டங்கள் வருகிற பங்குனி மாதம் 2ம் வார மத்தியிலிருந்து உயர்வுகளை கொடுக்க ஆரம்பித்துவிடும். புது வீடு, புதிய கட்டடம் அமைத்துக் கொள்வதற்கான அதிர்ஷ்டம் இருக்கிறது. வருகிற சித்திரையில் உத்தியோக வகையில் பெரியதொரு உயர்வும் உண்டு.
உங்கள் நட்சத்திரத்துக்கு ஐப்பசி, மார்கழி, மாசி மற்றும் வைகாசி, ஆனி மாதங்கள்
திருப்புமுனையை நன்மைகரமாக ஏற்படுத்தும்.
இந்தப் பொங்கல் தொட்டு வருகிற விசாகம், புனர்பூசம், உத்திரட்டாதி, அஸ்வினி மற்றும் கார்த்திகை நட்சத்திரங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அதிர்ஷ்ட உயர்வுகள் காத்திருக்கிற சிறப்பு பொங்கல் இது.
மகம்
வாசகர்களே, உங்களின் நட்சத்திர ராசியான சிம்மத்துக்கு இந்த பொங்கல் நேரத்தில் 55 சதவீத அதிர்ஷ்ட நேரம், யோக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் ஒரு படி உயர்வாக அதிர்ஷ்ட யோக நேரம் ஆரம்பிக்கப் போகிறது. ஆக இந்தத் தைத் திருநாளை வெகு விமரிசையாகவே கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி விட்டீர்கள். அதோடு ராசிநாதன் சனியின் வீட்டிலும், சனிபகவான் குருவின் வீட்டிலும் அமர்ந்து குருபகவான் ராசியையும் ராசிக்கு முக்கியமான இடங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதால் இனி வரும் மாதங்களில் ஏதிர்பாராத திடீர் திடீர் திருப்பங்கள் ஆச்சரியப்படுகிற நன்மைகளோடு ஏற்படப் போகின்றன.
குடும்ப குதூகலத்துக்கு குறைவில்லை. வாரிசுகளால் பெருமகிழ்ச்சியே. போட்டு வைத்திருக்கிற திட்டங்கள் வெகு எளிதாக சாதகமாக நல்ல வகை திருப்தியோடு பலிதமாகப் போகின்றன.
சமீபத்தில் மணம் முடித்துள்ள தம்பதியினருக்கு புத்திரபாக்கிய மகிழ்ச்சி வருகிற மாசி மாத இறுதி வாரத்தில் உண்டு.
கடன், கண்ணி, வம்பு, வழக்கு விவகாரங்கள் இல்லை.
உங்கள் நட்சத்திரத்துக்கு சித்திரை, வைகாசி, ஆனி, ஐப்பசி, தை மாதங்கள் உயர்வானவை. ஆயில்யம், பூசம், அனுஷம், அஸ்தம், திருவோணம், சதய நட்சத்திர தினங்களிலும்,
இந்தப் பொங்கல் தொட்டு வருகிற ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் வெகு சிறப்பான லாபகரமான ஏற்ற திருப்பங்களை தரப்போகின்ற அருமையான பொங்கல் திருநாளிது.
பூரம்
வாசகர்களே, எந்தத் தடுமாற்றம் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் நான்கைந்து மாதங்களாகவே ஓரளவு நினைத்தது நினைத்தபடி உங்களது காரியங்கள் எல்லாமும் நல்லபடியாகவே ஓரளவு பூர்த்தியாகிக் கொண்டு வருகின்றன. ஆக, இந்தப் பொங்கல் வெகு சிறப்பான பொங்கல்தான் உங்களுக்கு. இந்த தை மாதம் தொடங்கி 74 தினம் முடிவதற்குள் சிறப்புகரமான உயர்வு ஒன்றை அவரவர் தகுதி முயற்சிக்கேற்ப கண்டிப்பாக சந்திக்கப் போகிற நட்சத்திரக்காரர்கள் இவர்கள்.
குடும்ப நிலைமை திருப்தி. உறவுகளால் ஒத்துழைப்புகள். பணப்பெருக்க சரளத்துக்கு எவ்விதமான குறைபாடும் இல்லை. ஆரோக்கிய பயமில்லை.
தொழில், உத்தியோக, வியாபார சங்கடங்களுக்கெல்லாம் புதிய முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடும். புதிய வெளிதேச தொடர்பு கிடைக்கப் போகிற காலகட்டமிது. குலதெய்வ வழிபாடும், சுபகாரிய சடங்கு நிறைவேற்றங்களும் நல்லபடியாக நிறைவேறப் போகின்றன.
வருகிற சித்திரை மாதத்தில் எதிர்பாராத திடீர் பரிசு, பண, பொன் பொருள், வாகன சேர்க்கைகளும், புதிய சொத்துபத்துகளும் கிடைக்கப் போகிறது.
உங்கள் நட்சத்திர ராசிக்கு ஆவணி, கார்த்திகை, மார்கழி, பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பெரிய அதிர்ஷ்டங்களை தரக்கூடியவை. அதோடு இந்தப் பொங்கல் முதல் வருகிற மகம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம் நட்சத்திரங்களும்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஏகபோக உயர்வுகளை தரப் போகிற பொங்கலிது.
உத்திரம்
வாசகர்களே, இந்த நட்சத்திர நேயர்கள் கன்னியாய் இருப்பினும், சிம்மமாய் இருப்பினும் மிக விசேஷமான திருப்தி சவுகரிய காலமே ஒரு வகையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக இவர்களுக்கு இந்த தைத் திருநாள் பண்டிகை அற்புதமான திருப்தியோடுதான் வந்திருக்கிறது. ஓரளவு எந்தவித சச்சரவுமில்லாமல் புதுப்புது நன்மைகளை ராசிக்கு 5லும், 4லும் சஞ்சரிக்கிற கிரக நிலைமை தாரா பலத்தால் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றன. நிதானமான வாழ்க்கை முன்னேற்றம் தொடரத்தான் போகிறது.
மேலும், பண விஷயங்களில் இருக்கிற தடுமாற்றம், பற்றாக்குறை மெல்ல மெல்ல விகலப் போகிறது. குடும்ப நிலைமைகளில் தேவை, அத்தியாவசியங்கள் சார்பாக நீடித்து வரும் நெருக்கடிகள் இனி
மாறிவிட இருக்கிறது. சின்னச் சின்ன ஆரோக்கிய கோளாறுகளால் சோர்ந்து போன உங்களுக்கு இனி இந்த அவஸ்தைகள் தொடராது. தொழில் வியாபாரத்தில் புதிய வியூகத்துடன் நுழையப் போகிறீர்கள். அயலுார் சொத்து சேர்க்கையுண்டு.
நீடித்து வருகிற எவ்வித வழக்கு சச்சரவானாலும் வருகிற மாசி மாத 3ம் வாரத்துக்குள்
தீர்ந்துவிடும். பங்குனி மாதத்தில் சுபகாரிய எண்ணங்கள் பலிதமாகி விடும்.
இந்த தை மாதமும் அடுத்து வரும் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களும் இந்தப் பொங்கல் தொட்டு வருகிற சுவாதி, அனுஷம், மூலம், திருவோண நட்சத்திரங்களும், சனிக்கிழமையும் பெரிய மாற்றம் தரும்.
அஸ்தம்
வாசகர்களே, மகா திருப்பங்களை பரிபூரணமான மனதிருப்திகளை ஓரளவு உங்கள் மனம் குதுாகலிக்கும்படி வைத்துவிட்டே இந்த தைப் பொங்கல் வந்து இருக்கிறது. நட்சத்திரத்தின் ராசிப்பரிகாரம் 30 சதவீத கிரக சஞ்சாரங்கள் சரியில்லை என்றாலும், சனிபகவான் சஞ்சரிக்கிற தன பல தாரா பலத்தால் பெரிய நெருக்கடிகள் ஏதும் உங்களைப் போட்டு நெருக்காமல்தான் வைத்திருக்கிறது. அதேநேரம், சனி திசை சுயபுத்தியோ அல்லது கேது புத்தியோ, செவ்வாய் புத்தியோ சுய ஜாதக நடப்பில் உள்ளவர்களுக்கு சில நேரம் தொட்டது துலங்காது என்றபடியும் இருக்கிறது.
மற்றபடி அஸ்தத்துக்கு 60 சதவீத காரிய நிவர்த்திகளுடனும் குடும்ப வளர்ச்சியோடும் ஆரோக்கிய சந்தோஷத்தோடும் தான் நகர்ந்து வருகிறது.
மாசி மாத முதல் வாரத்துக்குள் பொருளாதார வகையிலும், மற்றபிற திருப்பங்கள் வகையிலும் பெரிய முன்னேற்றம் காத்துள்ளது. அதோடு வீணான நெருக்கடிகளில் இருந்தெல்லாம் வெளிவந்து விட முடியும். வருமான உயர்வு உண்டு. கமிஷன் லாபங்கள் காத்துள்ளன.
உத்தியோகம் தேடி வருகிற இந்த ராசி இளம் இருபாலருக்கும் வருகிற வைகாசிக்குள் பெரிய அதிர்ஷ்ட அனுகூலம் காத்திருக்கிறது. திருமண முயற்சிகளில் இருந்து வரும் இந்த நேயர்கள் வைகாசி மாத வாக்கில்தான் கை கூடப் பெறுவார்கள்.
இந்த நட்சத்திரத்துக்கு ஐப்பசி, கார்த்திகை, மாசி மற்றும் வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள்தான் எதிர்பாராத முன்னேற்றங்களை வழங்கக்கூடியவை.
இந்த பொங்கல் முதல் வருகிற விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், ரேவதி நட்சத்திரங்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளும் ஏக நன்மைகளுண்டு.
சித்திரை
வாசகர்களே, உங்கள் நட்சத்திரத்துக்கு இப்போதுதான் புதிய மனப்பக்குவம் கிடைத்திருக்கிறது. எல்லா விஷய முயற்சிகளிலும் தடுமாறி தடுமாறி சோர்ந்து போனப்பின் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். இந்தப் பொங்கல் திருநாள் உங்களுக்கு மிக முக்கியமான திருநாளே. மேலும் குடும்ப வகையில், என்னென்ன இடர்ப்பாடுகளை, சங்கடங்களை, தேவையற்ற சச்சரவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதற்கு இந்த தை மாதம் 18ம் தேதிக்குப் பிறகு, பெரியளவில் மாற்றம் ஏற்படப் போகிறது.
இந்த நட்சத்திரத்தினர் சிலர் இந்தப் பொங்கலின்போது சொந்த ஊரிலோ, பூர்வீகத்திலோ இல்லாமல் அயலுார் அயல்தேசத்துக்கு தங்களது வளர்ச்சி பொருட்டு எதிர்காலத்துக்கென்று பயணப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது.
அதோடு இந்த நட்சத்திரத்துக்கு எப்போதுமே புரட்டாசி, ஐப்பசி மற்றும் தை, பங்குனி, சித்திரை மாதங்கள் அற்புதமானவை. புதிய தொழில், பட்ஜெட், வியாபாரத்தில் இறங்கி சாதித்து விடலாம். கடன், கண்ணி தொல்லை, தொந்தரவு விவகாரங்களிலிருந்து வெளிவந்து விடலாம்.
3ம் நபர் சச்சரவுகளிலிருந்து மீண்டு விடலாம். கொடுக்கல் வாங்கலை சீராக்கிக் கொள்ளலாம். அவதுாறு போட்டிகளை வென்று விடலாம். ஆக இந்த தை மாதம் தொட்டு வரும் 7 மாதங்களுக்குள் பெரிய திருப்தி வளர்ச்சி காத்துள்ளது.
இந்த தை தொட்டு வருகிற அஸ்தம், பூரம், சதயம், திருவாதிரை மற்றும் பூரட்டாதி நட்சத்திர தினங்களிலும், ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் சிறப்பு தரும் நன்மைகள் அரங்கேறப் போகின்றன.
சுவாதி
வாசகர்களே, பலவித விசேஷ திருப்ப உயர்வு அதிர்ஷ்டங்களை தந்துவிட்டே இந்த தைப்பொங்கல் திருநாள் வந்திருக்கிறது உங்களுக்கு. ஆக தொடர்ச்சியாக வரப் போகிற 6 மாதத்துக்குள் எல்லா வகையிலும் எதிர்பாராத சுபிட்சங்களை மட்டுமே சந்திப்பீர்கள். குடும்ப வகையில் இதற்கான முன்னேற்றத்துக்காக என்ன வகை முயற்சிகளில் இறங்கி இருக்கிறீர்களோ அதுவெல்லாம் இந்த பொங்கல் முதல் வருகிற 2 மாதத்துக்குள் ஏக சுபிட்சங்களோடு நிறைவேறி விட இருக்கிறது.
உங்கள் நட்சத்திர ராசிப்பிரகாரம் கேதுவும் சனியும் இனி வருகிற 8 மாதங்களும் அதிக பலத்துடன், காரிய ஜெய வெற்றி ஸ்தானத்தில் நிற்பதால், எந்த விஷயத்திலும் தடை தாமத குறுக்கீடுகளை சந்திக்காமல், பண விரய இழப்புகளை அடையாமல் சாதித்துக் கொள்ள இருக்கிறீர்கள். ஆரோக்கியரீதியான மனசஞ்சலங்கள் கிடையாது.
பொருளாதார வகையில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை. தொழில், வியாபார பட்ஜெட் முதலீடு விஷயங்களில் வருகிற பங்குனி மாதத்தில் பெரிய லாப திருப்பங்கள் ஏற்பட போகின்றன. இந்த நட்சத்திர இளம்பெண்களுக்கு திடீர் திருமணம் கை கூட இருக்கிறது. அயல்தேச முயற்சியாளர்களுக்கு பலிதமான காலம் உதயமாகிவிட்டது.
சொத்துபத்து, வழக்குகள், பூர்வீகம் பற்றிய பிரச்னைகள் எதுவாக இருப்பினும் வெற்றி உங்களுக்கே. எல்லா தமிழ் மாதத்திலும் உங்களுக்கான அதிர்ஷ்ட மாதங்கள் மார்கழி, மாசி, பங்குனி, ஆனி, ஆடி மாதங்களே.
இந்தப் பொங்கல் தொட்டு வருகிற கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அற்புதமான விசேஷ உயர்வு அதிர்ஷ்ட மாற்றங்கள் காத்திருக்கின்றன.
விசாகம்
வாசகர்களே, உங்கள் நட்சத்திரப்படி நீங்கள் துலாமோ, விருச்சிகமோ எதுவாக இருப்பினும், ஏக சுபிட்சமான யோக காலமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் நல்லவித திருப்பங்கள் அமோகமான மகிழ்ச்சிகள் என்றபடி தனிப்பட்ட வகையில் உங்களுக்கு இருந்தாலும், குடும்ப வகையில் மட்டும் கடந்த ஐப்பசியிலிருந்து சில பின்னடைவுகளை சந்தித்து வருகிறீர்கள். இருந்தாலும் சமாளிக்கிறீர்கள்.
பரிபூரண மகிழ்ச்சி நிவர்த்திகள் உங்கள் நட்சத்திரத்துக்கு வருகிற பங்குனி மாத 8ம் தேதிக்குப் பிறகுதான் திருப்தியான மாறுதலை தரும். பொருளாதார பற்றாக்குறை சங்கடமில்லை. நெடுங்கால திட்ட பலிதங்களுக்கு வருகிற பங்குனி வர வேண்டும். சுபகாரிய, திருமணம் சம்பந்தமான விசேஷங்களுக்கு சித்திரை மாத 14ம் தேதி போக வேண்டும்.
உத்தியோக பதவிபொறுப்பு விஷயங்களில் திருப்தியை சந்திக்க வருகிற மாசி மாதம் 2வது வாரம் செல்ல வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கல் கெடுபிடிகள் மறைய பங்குனியே உகந்ததாக இருக்கிறது. சொத்துபத்து திட்டங்கள் ஆனியில் நிறைவேறி விடும். வீடு, கட்டட மாற்றங்களை செய்து கொள்ள வைகாசி மாதம் ஜெயத்தைக் கொடுக்கும். மற்றபடி உங்களுக்கான சிறப்பு மாதங்களாக ஆடி, ஆவணி மற்றும் மாசி, பங்குனி மாதங்களே.
அடுத்த பொங்கலுக்குள் இந்த மாதங்கள் வரும்போது பெரியதொரு உயர்வை எட்டியிருப்பீர்கள். இப்பொங்கல் தொட்டு வருகிற மூலம், உத்திராடம், கேட்டை, அஸ்வினி, ரோகிணி மற்றும் திருவாதிரை நட்சத்திரங்களிலும், வருகிற செவ்வாய்க்கிழமைகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கப் போகிறது.
அனுஷம்
வாசகர்களே, உங்கள் நட்சத்திர நாயகன் சனிபகவான். ராசிநாதனோ செவ்வாய். ராசியோ விருச்சிகம். ஆக இந்த தைப் பொங்கல் திருநாளின் போது ராசிக்குண்டான கிரக நிலைகள் ருச்சக யோகத்தோடும், மானவ யோகத்தோடும், புத ஆதித்ய யோகத்தோடும் வெகு சூப்பரான அதிர்ஷ்டங்களோடு துவங்கியிருப்பதால், உங்களது எல்லா முயற்சியும், திட்டமும், நினைப்பும் நல்லபடியாகவே பூர்த்தியாகிக் கொண்டு வருகிறது. குடும்ப நிலைமையில் புதிய திருப்திகள் உருவாகிக் கொண்டு வருகின்றன. கட்டுப்பாடில்லாத விரய நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
இந்தப் பொங்கல் தொட்டு அடுத்து வருகிற பொங்கலுக்குள் வெகு விசேஷகரமான பலவித உன்னத உயர்வுகளை அடைந்துவிடுவீர்கள். பொருளாதாரத்தில் 75 சதவீத முன்னேற்றத்தை கண்டிருப்பீர்கள். தொழிலும், வியாபாரமும் நிர்வாகமும் அடுத்தடுத்த உயர்வுகளை நல்லபடியாகவே சந்திக்க இருக்கிறது. உத்தியோக பதவிரீதியான இனிமையான மாற்றங்கள் காத்துள்ளன. சொத்துபத்து வம்பு வழக்குகளுக்கும், பெரிய கடன் இக்கட்டுகளுக்கும் நிவர்த்தியான தீர்வு 3 மாதத்துக்குள் உண்டு.
ஆக இப்போது ராகு கேதுக்கள் மட்டும் சரியான அமைப்பில் இல்லையென்பதால் வருகிற ஜூன் மாதம் 23ம் தேதிக்குப் பிறகு பெரிய பெரிய சாதகங்களை அனைத்திலும் சந்திக்கலாம்.
உங்களுக்கான யோக மாதங்கள் இந்த தை மாதமும், அடுத்து வரும் பங்குனியும் சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களும்,
பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களும் இதிலே வரப்போகிற புதன்கிழமைகளும் பெரிய உன்னதத்தை ஏற்படுத்தி தரப்போகிறது.
கேட்டை
வாசகர்களே, உங்களுக்கான விஷயங்கள் எல்லாம் ஒரு பக்கம் சுபமாக நகர்ந்து கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் மாபெரும் இக்கட்டுகளை 100 சதத்துக்கு மேலாகவே உங்கள் ராசி நட்சத்திரத்தைச் சுற்றி வளைத்துள்ள கடுமை கிரக அமைப்புகள் சொல்கின்றன. இருந்தாலும், ராசிக்கு 2ல் உள்ள குரு, சனி சேர்க்கை ஒருபக்கம் உங்களுக்கான நிவர்த்திகளை கொடுத்துக் கொண்டே வருகிறது. அதேநேரம் நீங்கள் நினைத்தபடி எல்லா விஷயமும் ஒழுங்காக கை கூடி பொருளாதாரத்தில் அதிர்ஷ்ட திருப்பங்களை சந்திக்க, கடன் கண்ணி விஷயங்கள் முடிய, வம்பு வழக்குகள் தீர்வுக்கு வர வருகிற சித்திரை மாதம் வர வேண்டும்.
உங்கள் நட்சத்திரத்துக்கு எப்போதுமே மார்கழி, தை மாதங்களும், சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்களும் பலவித திருப்தி யோக அதிர்ஷ்டங்களை வழங்கக்கூடியவை. அந்த வகையில் இனி வரும் இந்த மாதங்கள் அட்டகாசமான காரிய வெற்றி, உயர்வு அதிர்ஷ்டப் பலன்களை கொடுக்கப் போகின்றன. அதுவரை உங்கள் குடும்பம் ஓரளவு திருப்தியாக உயர்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கும்.
தொழில், வியாபார, பட்ஜெட் விஷயங்களில் மிதமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பது நலம். நீங்களே எதிர்பாராத உத்தியோக, பதவி பொறுப்பு இட மாற்றங்கள் நிகழலாம். வீடு, கட்டட ரீதியான சுப விரயங்களும், வாரிசுகள் ரீதியான சுப சடங்கு திருமண விரயங்களும் நடக்கக்கூடிய காலகட்டம் துவங்கியிருக்கிறது. இப்பொங்கல் தொட்டு வருகிற அஸ்வினி, கார்த்திகை, திருவாதிரை, பூசம், மகம் மற்றும் உத்திர நட்சத்திரங்களிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல அதிர்ஷ்ட உயர்வு திருப்பங்கள் காத்துள்ளன.
மூலம்
வாசகர்களே, நட்சத்திர ராசிப்பிரகாரம் இப்போது 7 1/2யில் உடல் சனி நடந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் இந்த தை மாத 14ம்தேதி வரை தர்ம கர்மாதிபதி யோகத்துடன் ஓடப் போகிறது. இதனால் எதிர்பாராத நன்மைகள், நீங்கள் திட்டமிடாத விஷயங்களில் சற்றே கூடுதலாகக் கூட நடந்து முடிய அதிர்ஷ்டமிருக்கிறது. பொருளாதாரம் திருப்தியாக இருப்பின் இந்த நட்சத்திரத்தினர் சிலர் ஆரோக்கியம் தொடர்பாக சில பின்னடைவுகளை சந்தித்து இருப்பார்கள்.
ஆரோக்கியம் நல்லபடியாக தொடர்ந்து கொண்டிருப்பின் பொருளாதாரம் மற்ற பிற முக்கிய விஷய இனங்களில் பின்னடைவுகளில் சிக்கியிருப்பார்கள். ஆக ஏதோ ஒன்றைத்தான் நல்லபடியாக கிரகங்கள் இப்போது வைத்திருக்கும். என்றாலும், இந்த ராசிக்கு 37லிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு பொங்கு சனி காலமென்பதால் மிகமிக சந்தோஷ உயர்வுகள் கிடைக்கக்கூடிய காலமும் இதுவே.
சந்திர, செவ்வாய் திசை சுய ஜாதக ரீதியாக நடப்பில் உள்ளவர்கள் அநாவசிய சிரமத்தினையும் சந்தித்துக் கொண்டு வருவார்கள். எப்படியோ மூல நட்சத்திரத்துக்கு ஓரளவு 10 மாத காலமாக 50 சதவீத நிவர்த்திகளும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
மற்றபடி இவர்களுக்கு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களும், மாசி, வைகாசி மாதங்களும் ஏகப்பட்ட திருப்புமுனைகளை தரப் போகிறது.
இந்தப் பொங்கல் தொட்டு வருகிற கேட்டை, பூசம், ரோகிணி, ரேவதி, சுவாதி நட்சத்திரங்களிலும், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் பலவித உயர்வு திருப்பங்கள் காத்துள்ளன.
பூராடம்
வாசகர்களே, உங்களது நட்சத்திரத்துக்கு இந்தப் பொங்கலின்போது சனிபகவான் அனுஜென்ம நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால், உங்களது எல்லா விஷயத்திலும் அதீதமான காரணமற்ற முட்டுக்கட்டைகளையும், தடை இடையூறு விஷயங்களையும் சந்திக்க வேண்டிய சூழல் தெரிகிறது. இருந்தாலும், ராசிநாதனின் ஆட்சி பலத்தால் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாது. அதோடு இந்த தை மாதம் தொடங்கி 3வது வாரம் வரை எதிர்பாராத பலவித காரிய பலிதங்களும், விரயமில்லாத சூழ்நிலையும் தொடரும். கவுரவ மரியாதை புகழுக்கு பங்கமில்லை. வாழ்க்கைத்துணையுடனான ஒற்றுமை அன்யோன்யம் கூடிக் கொண்டிருக்கும். மருத்துவச்செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
கட,ன் கண்ணி, வம்பு வழக்குகளால் சிற்சில நேரம் மன அயற்சிகள் ஏற்படவே செய்யும். இருந்தாலும் வருகிற பங்குனி மாதம் 15ம் தேதிக்குள் உங்களது ஒட்டுமொத்த பிரச்னைகளில் 70 சதவீதம் நிவர்த்திகளும் உண்டு. தொழில்,வியாபார விஷயங்களில் நல்லதொரு மாற்றம் மெல்ல மெல்ல ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
உத்தியோக இட மாறுதலையும் சந்திக்கப் போகிற காலகட்டம் துவங்கியிருக்கிறது.
வருகிற சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் ஒரு பெரிய உயர்வை ஏற்படுத்தப்போகிறது. திருவோண நட்சத்திர தினங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கார்த்திகை, அவிட்டம், சித்திரை, மிருகசீரிஷம், புனர்பூசம், மகம் நட்சத்திரங் களிலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஏற்றங்கள் காத்துள்ளன.
உத்திராடம்
வாசகர்களே, உங்கள் நட்சத்திரப்படி நீங்கள் மகரமோ, தனுசோ இரண்டு ராசிக்குரிய ராசிநாதர்களும் ஒன்று கூடியிருப்பது, குருபகவான் நல்ல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது, இந்த பொங்கல் நேரத்தில் சுக்கிரனின் வலிமை நல்லபடியாக இருப்பது போன்ற அருமையான கிரக சஞ்சாரங்களால் 80 சதவீதம் உயர்வாகவே இருக்கிறது உங்கள் நட்சத்திரத்துக்கு. சிறு சிறு தடங்கல் உங்களது விஷயங்களில் ஏற்பட்டாலும், வெற்றி என்னவோ எளிதாகவும், சாதகமாகவும்தான் கிடைத்துக் கொண்டு வரும்.
உங்களுக்கு குடும்ப ரீதியான பாதிப்புகள் இல்லை. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் ஏற்படாது. கேதுவால் மிக எதிர்பாராத பெரியதொரு திருப்புமுனை காத்திருக்கிறது. மற்றபடி எந்தவித சச்சரவுகளும் உங்களது நட்சத்திரத்துக்கு 5 மாதங்களுக்கு இல்லை. தொழில், வியாபார விஷயமாக 65 சதவீத நன்மைகளே காத்திருக்கின்றன.
உத்தியோக சம்பந்த நன்மை எதிர்பார்ப்புகள் வருகிற மாசி மாத 3வது வாரத்திலிருந்து நல்லபடியாக கை கூடும்.
உங்கள் நட்சத்திரத்துக்கு உண்டான அதிர்ஷ்ட மாதங்கள் மார்கழி, தை, மாசி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை. அயல்தேச ரீதியான முயற்சிகளில் இதை மாத இறுதி வாரத்தில் பெரியளவில் நன்மைகள் காத்துள்ளன.
இப்பொங்கல் தொட்டு வருகிற சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை மற்றும் மகம் நட்சத்திர தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் நன்மை விசேஷமகிழ்ச்சிகள்
காத்துள்ளன.
திருவோணம்
வாசகர்களே, மகர ராசியிலுள்ள முழுமையான நட்சத்திரமான உங்களுக்கு இப்போது வயது 41லிருந்து 48க்குள் இருப்பின் ஏகப்பட்ட திருப்புமுனைகளை, அதிர்ஷ்டங்களை சந்தோஷங்களை சந்திக்கக்கூடிய அற்புதமான காலமிது. ஆக7 1/2ஐ நடத்துகிற சனிபகவானும், நட்சத்திர ரீதியாக சாதக தன பல தாரையில் பிரவேசிப்பதால், குடும்ப மகிழ்ச்சி, குதுாகலமாக உயரும். பொருளாதாரம் தேவைக்கேற்ப கொஞ்சம் உபரியாகவே கிடைக்கும்.
ஆரோக்கிய நிலைமையில் ஒரு தெளிவான நடைமுறையே ஏற்பட்டுக் கொண்டிருக்கும். கொடுக்கல் வாங்கலால் ஏற்பட்ட சச்சரவுகள் இந்தப் பொங்கல் முடிந்த கையோடு முடிவுக்கு வரப் போகிறது. திடீரென்று திருமண சுபவிரயங்கள் ஏற்பட இருக்கின்றன.
புதிய தொழில், வியாபார தொடக்க திட்டங்கள் ஸ்தம்பிக்காது. கடன் வழக்கு சமாச்சாரங்கள் வருகிற பங்குனியோடு தீர்வை தெளிவை தரப் போகிறது. அயல்தேச தொடர்பான முயற்சிகளில் வருகிற சித்திரை மாதம் பெரிய பலிதம் ஏற்படப் போகிறது.
வருகிற மாசியில் உத்தியோக பதவி பொறுப்பு சலுகை ரீதியான திடீர் உயர்வு காத்திருக்கிறது. சொத்துபத்து பிரச்னைகளுக்கு வருகிற வைகாசிக்குள் மனநிறைவு ஏற்படப் போகிறது.
வருகிற ஆடி மாதம் மட்டும் அனைத்து புது விஷயங்களிலும் கவனம் வைப்பது நலம்.
மற்றபடி இந்தப் பொங்கல் தொட்டு வருகிற அவிட்டம், சுவாதி, திருவாதிரை, மகம், புனர்பூசம், கேட்டை நட்சத்திர தினங்களில் அருமையான அதிர்ஷ்ட திருப்பங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு புதன்கிழமையும் யோகங்கள் நிறைய உண்டு.
அவிட்டம்
வாசகர்களே, உங்கள் நட்சத்திரபடி நீங்கள் மகரமோ, கும்பமோ எல்லா திசையிலிருந்தும் சோடையில்லாத அதிர்ஷ்ட திருப்பங்கள் பெரியளவில் காத்திருக்கிற யோகமான நேரம் ஆரம்பமாகியிருக்கிறது. குடும்ப பாதிப்புகள் எந்த ரூபத்திலோ ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், வாழ்க்கைத் துணையிடம் மட்டும் அவ்வப்போது சிற்சில சலசலப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். காரணம் சனிபகவான் இந்தப் பொங்கல் முதல் 37 தினங்களுக்கு வதை தாரையில் சஞ்சரிக்கிறார்.
ஆனால் உங்கள் நட்சத்திரப்படி குரு, ராகு, கேது மற்றும் செவ்வாய்க்கிரகங்கள் நல்லபடியான பலத்தில் சஞ்சரித்து வருவதால் தீராத சங்கடங்கள் விலகும். பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். எதை நினைத்தாலும் உடனுக்குடன் சாதிக்கலாம். தொழில், வியாபாரம் விவசாயம், நிலபுலன், மண், மனை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் தொடர் ஏற்றங்கள் காத்துள்ள காலம் உதயமாகியிருக்கிறது.
வருகிற பங்குனியில் புதிய பொன், பொருள், ஆடை ஆபரண வாகன சொர்ணாதிகள் சேர்க்கையாக இருக்கிறது. வழக்கு தீர்வுக்கு வைகாசியும், சொத்துபத்து ஆஸ்தி பங்கு பாக நன்மைகளுக்கு சித்திரையும், உத்தியோக ஊதிய நிலுவை சமாச்சாரங்களுக்கு ஆனியும், அயலுார் தேச திட்டங்களுக்கு ஆவணியும் படு அதிர்ஷ்டமான யோக திருப்பங்களை தரப் போகிறது.
வருகிற புரட்டாசி மாதம் அனைத்திலும் கவனம் தேவை. பொங்கல் முதல் வருகிற அவிட்டம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, புனர்பூசம் மற்றும் மகம் நட்சத்திர தினங்களிலும் திங்கட்கிழமைகளிலும் நிறைய திருப்பங்கள் காத்துள்ளன.
சதயம்
வாசகர்களே, எதிலும் புதிய இடையூறுகளை, தடை தாமதக் குறுக்கீடுகளை சந்திக்காமல் பெரிய மேன்மை வளர்ச்சிகளையும் குடும்ப ரீதியான உயர்வுகளையும் தொடர்ச்சியாக ஏகபோகத்துடன் சந்திக்கப் போகிற பொன்னான காலம் உங்கள் நட்சத்திரத்துக்கென உருவாகியிருக்கிறது. கும்ப ராசியின் முழுமை நட்சத்திரம் நீங்கள் என்பதால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் திரிக் கிரகசேர்க்கை நிகழ்ந்து கொண்டிருப்பதால் எதைத் தொட்டாலும், தொடங்கினாலும் அற்புதமான சாதகங்களே நிறைய காத்திருக்கிறது. அதோடு குடும்ப நிலைமையில் புதிய வளர்ச்சி மலர இருக்கிறது.
ஆரோக்கியம் இருமடங்கு சாதகங்களை உருவாக்கிக் கொண்டு வரும். அதோடு பொருளாதார நிலைமையில் இனி வரும் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய மேன்மைகள் ஏற்பட இருக்கின்றன. மற்றபடி தொழில், வியாபார, உத்தியோக பதவிபொறுப்பு அனைத்திலும் இந்த தை மாத முடிவுக்குக்ளேயே யோகமான வளர்ச்சி ஒன்று ஏற்படப் போகிறது.
அதோடு புதிய தொழில் தொடக்க திட்டங்களுக்கு வருகிற சித்திரையும்
வீடு மாற்றம், வருகிற வைகாசியும்,
சொத்துபத்து ரீதியான கெடுபிடி தீர்வுகளுக்கு வருகிற ஆடியும்,
சுபகாரிய முயற்சி, திருமணம், குலதெய்வ வழிபாடுகளுக்கு பங்குனியும்,
உயர்வான திருப்தி மகிழ்ச்சியை தரப் போகிறது.
இப்பொங்கல் தொட்டு வருகிற பூரட்டாதி, ரேவதி, பரணி, பூரம் மற்றும் அனுஷ, கேட்டை நட்சத்திர தினங்களிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய ரூபத்தில் வளர்ச்சி காத்துள்ளது.
பூரட்டாதி
வாசகர்களே, உங்கள் நட்சத்திரப் பிரகாரம் நீங்கள் மீனமோ, கும்பமோ எப்படிப் பார்த்தாலும் கடந்த 14 மாதங்களாக எண்ணற்ற சோதனை இடர்ப்பாடுகளையும், பொருளாதார இழப்பு கஷ்டங்களையும் சந்தித்து முடித்து ஒருவழியாக இந்தத் தை திருநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.
மனைவி, புத்திர, பங்கு பங்காளி உற்றார் உறவினர் சார்பாக சந்திக்காத சோதனையே இதுவரை இல்லை என்றபடியும் அனுபவித்து முடித்துவிட்ட உங்களுக்கு, கிரகங்கள் வருகிற தை மாத 19ம் தேதிக்குப் பிறகு எண்ணற்ற உயர்வு அதிர்ஷ்ட நிவர்த்தி மாற்றத்தைக் கொடுக்கப் போகிறது.
அரசு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு கோலாகலமான உயர்வு ஒன்று காத்திருக்கிறது. தனியார் உத்தியோகத்தில் உள்ளோருக்கு தலைமை பொறுப்பு கிடைக்கப் போகிறது.
ஆரோக்கிய படுத்தல்களுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும். புதுமண தம்பதிகளின் புத்திர பாக்கிய கவலைக்கு அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது. எந்த ரூபத்திலும் போட்டி, பொறாமை, தொந்தரவுகள் ஏற்படாது. எதன் சார்பாகவும் வீடு மாற்றம் நிகழப் போகிறது.
வீடு கட்டட.த்தை விஸ்தீரணப்படுத்துகிற நோக்கம், எண்ணம் பலிதமாக போகிறது.
இந்தப் பொங்கல் தொட்டு வருகிற ரோகிணி, சித்திரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களிலும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் அருமையான திருப்பங்கள் காத்து உள்ளன. வருகிற மாசி மாதத்தில் மட்டும் வம்பு தும்பு வழக்கு சமாச்சாரங்களில் கவனப்படுத்திக் கொண்டால் போதும்.
உத்திரட்டாதி
வாசகர்களே, குதுாகலமான நிறைய திருப்பங்களை தர வந்திருக்கிற பொங்கல் இது. 80% வெற்றிப் பலிதங்கள் உங்களது அத்தனை முயற்சியிலும் பெரிய அளவில் காத்திருக்கிறது. குடும்ப நிலைமை, சந்தோஷங்களுக்கு இல்ல அனுசரணைகளுக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல், ஏக மகிழ்ச்சியோடு இனி வரும் மாதங்கள் நகரப் போகின்றன. வாழ்க்கைத்துணையால் உங்கள் எதிர்காலத்துக்கான அருமையான உயர்வு ஒன்று அதிர்ஷ்டகரமாக கிடைக்கப் போகிறது.
வீடு வாசல் சம்பந்தமாக இந்த நட்சத்திரத்தினர் எந்த மாதிரியான சச்சரவு சங்கடங்களை சந்தித்து வருகிறார்களோ, அத்தனையும் இந்த பொங்கலோடு முடிவுக்கு வந்து மாபெரும் திருப்பங்களைத் தரப் போகிறது.
தொழில், வியாபார பாதிப்புகளுக்கு மாற்று வகை திட்டம் போட்டு உயர்வை சாதிக்கப் போகிறீர்கள். உத்தியோக ரீதியாக நீடிக்கும் சங்கடங்களும் சம்பள ஊதிய நிலுவை சம்பந்த பிரச்னைகளுக்கும் மாற்றங்களை, திருப்தியடைய தரப்போகிற நேரம் வந்தாகிவிட்டது.
வருகிற வைகாசி தொட்டு ஐப்பசி மாதத்துக்குள் பொருளாதாரத்தில் பெரிய உயர்வும், வீடு, கட்டடம், சொத்து வாங்குகிற யோகமும், வாரிசுகளுக்கான கடமை நிறைவேற்றமும் புதிய ஊரில் புதிய சூழலில் வசிக்கப் போகிற மகிழ்ச்சியும், புதிய நிர்வாகத்தில் பதவியோடு அமரப் போகிற மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது.
இனி வருகிற ரேவதி, புனர்பூசம், மிருகசீரிஷம், உத்திரட்டாதி, உத்திரம், திருவோணம், அவிட்ட நட்சத்திரங்களிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் ஏக உயர்வு மகிழ்ச்சி திருப்பங்கள் காத்துள்ளன.
ரேவதி
வாசகர்களே, இந்தப்பொங்கல் திருநாளில் இருந்துதான் மிக அற்புதமான உயர்வு திருப்பங்கள் காத்துள்ளன. கடந்து போன 9 மாதங்கள் மிக மிக கசப்பானவை உங்களுக்கு. ஏகப்பட்ட இழப்பு. எதிலும் திருப்தி இல்லாத நிலை அனைத்துக்கும் இந்தப் பொங்கலோடு புதிய விடிவு உங்களுக்கென்று உண்டாகப் போவதை உங்கள் நட்சத்திர ராசிக்கு 10ம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகங்களும் இந்தப் பொங்கல் நேரத்தில் செவ்வாயின் ஆட்சி நிலைப்பாடும், தொழில் ஸ்தான வலிமையும் சேர்ந்து உங்களைப் பெரிய அளவில் உயர்த்தப் போகிறது.
ஆரோக்கியம் வருகிற மாசி முதல் வாரத்தில் இருந்து வெகு சிறப்பாக இருக்கும். குடும்பச் சச்சரவுகளுக்கு வாய்ப்பில்லை. போட்டி, பொறாமை, எதிர்ப்பு, வழக்கு விஷயங்களிலிருந்து மெல்ல வெளிவரப் போகிறீர்கள்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு புதிய நபரால் ஏற்பட்ட சச்சரவுக்கு வருகிற பங்குனி 6ம் தேதிக்குப் பிறகு விடிவு ஏற்பட போகிறது. வாரிசுகளின் உயர்வுக்காக எடுத்த முடிவு வருகிற சித்திரையில்தான் நிறைவுக்கு வரும்.
வருகிற மாசி மாத்திலேயே உங்களுக்கு வர வேண்டிய சொத்துபத்து இனத்தில் பாதி கைக்கு வந்துவிடும். இந்த நட்சத்திர இளம் இருபாலரும் புதிய அயல்தேசத்தில் கால் பதிக்கப் போகிறீர்கள் தை முடிவதற்குள்ளேயே.
இனி வரும் பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், சித்திரை, சுவாதி, நட்சத்திர தினங்களிலும், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளிலும் உயர்வு திருப்பங்கள் நிறைய காத்துள்ளன.