மதுரை அருகே பஸ் மோதி டேங்கர் லாரி டிரைவர் பலி; மற்றொருவர் படுகாயம்

16-10-2021 05:23 PM

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை ஆவியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(50). இவரும் உசிலம்பட்டி அருகே உள்ள மேலபெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(25). இருவரும் டேங்கர் லாரி டிரைவர்கள். இவர்கள் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பெட்ரோல் பிடிப்பதற்காக வந்திருந்தனர்.

அப்பொழுது தேநீர் அருந்துவதற்காக இருவரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கப்பலூர் நான்குவழிச்சாலை பகுதிக்கு வந்தபோது சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் பேருந்து டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Trending Now: