சாத்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் இடையே கடும் அடிதடி மோதல்

24-09-2021 07:59 PM

திருநெல்வேலி மாவட்டத்திற்கு, முன்னாள் முதல்வர் சென்றபோது, முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான அடிதடி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வந்தார்.

 அவருக்கு மாவட்ட எல்லையில் அதிமுக கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாத்தூர் பகுதியில், அதிமுக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜியும் உடன் வந்தனர். சாத்தூரிலிருந்து முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றனர்.

 அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களுக்கும், ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாய்த் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இருதரப்பினர் அடிதடி மோதலால், அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். அதிமுக கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரனும், மேற்கு மாவட்ட செயலாளராக ராஜேந்திரபாலாஜியும் செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டு அடிதடியான சம்பவம், அதிமுக கட்சி தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.Trending Now: