ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறன் கணவரை எரித்த மனைவி கைது

01-03-2021 03:31 PM

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே குழந்தைகளையும், தன்னையும் அடித்து சித்ரவதை செய்த மாற்றுத்திறன் கணவரை வீட்டோடு தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்  மாவட்டம் வாலாந்தரவை அருகே முனுசுவலசையைச் சேர்ந்த முனியாண்டி மகன் முனியசாமி, 40. மாற்றுத்திறனாளியான இவருக்கும் மல்லிகா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

மல்லிகா கட்டட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் முனியசாமி வீட்டில் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கேணிக்கரை காவல் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் முனுசு வலசை சென்றனர். கருகிய முனியசாமி  உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். 

விசாரணையில்,  மாற்றுத்திறனாளியான முனியசாமி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, மல்லிகா கட்டட வேலை செய்து கொண்டு வரும் சம்பளத்தை பறித்து குடித்து விட்டு வந்து மல்லிகாவையும், பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று (பிப்.27)  முன் தினம் இரவு நடந்த தகராறில் மல்லிகாவை கழுத்தை நெரித்து முனியசாமி கொலை செய்ய முயன்றார். இதனால் குழந்தைகளுடன் வீட்டை விட்டு மல்லிகா வெளியேறினார்.  தப்பிச்சென்ற மல்லிகா இரவில் தூங்கிக்கொண்டிருந்த முனியசாமி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் சிக்கிய முனியசாமி உடல் கருகி பலியானது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் மல்லிகாவை கைது செய்தனர்.Trending Now: