நீதிமன்ற உத்தரவை மீறியதாக மின்துறை அமைச்சர் மீது தொமுச வழக்கு தொடுக்க முடிவு !!

26-01-2021 07:59 PM

திருப்பூர்,  

முறைகேடாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிநியமனம்  தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தவை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது குறித்து தீர்வு காண வேண்டி தலைமை செயலர், எரிசக்தி துறை செயலர், மின்சார வாரிய இயக்குநர், மின்சார துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மின்சார வாரிய தொமுச சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளது

மின்சார வாரிய தொமுச செயலாளர் சரவணன் அனுப்பிய சட்ட அறிவிப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது!!

மின் வாரியம் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவிக்கு  ஆட்களை நேரடி நியமனம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்குத் தடை கோரியும்,  ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளது. ஆனால் மின் வாரியம் தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கில் செயல்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி மின்வாரிய கேங்மேன் பதவி தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது கேங்மேன் பணிநியமனம் தொடர்பாக மின் துறை அமைச்சர் தெரிவித்து வரும் கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 25 ம் தேதி பேசிய மின்சார துறை அமைச்சர்

மின் வாரிய கேங்மேன் பணியை பொறுத்தவரை, மூன்று நாட்களுக்கு முன், அனைத்து தொழிற்சங்கத்தையும் அழைத்து பேசியுள்ளேன். வேறு எந்த கோரிக்கையானாலும், பேசி தீர்த்துக் கொள்ளலாம் அதனால், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுங்கள். பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த பின், எந்தப் பிரச்னையானாலும் பேசிக் கொள்ளலாம் என்றேன். அவர்களும் சம்மதித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு வரும் போது, அந்த மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்துஉள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது.

மேலும் எங்கள் சங்கத்தை பொருத்தவரை முறைகேடாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிநியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சட்டரீதியாக சந்திக்க இருக்கிறோம் இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. என்பதை தொடர்ந்து தெளிவாக பதிவு செய்து வருகின்றோம்.

இந்நிலையில் சில சங்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சரிடம் பேசியதை  வைத்து கொண்டு அனைத்து தொழிற்சங்களும் சேர்ந்து தான் முறைகேடாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிநியமன உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதாக தன்னிடம் நேரில் கூறியதாக மின்சார துறை அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை தொடர்ந்து தெரிவித்து நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வருகின்றனர்.  எனவே இது முற்றிலுமாக நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் கேங்மேன் பணிநியமன தொடர்பாக தவறாக தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தற்போது கேங்மேன் பதவி தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அலட்சிய போக்கில் செயல்பட்டு வரும் மின்துறை அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எங்களுடைய வழக்கறிஞர்கள் மூலம் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் உள்ளதுTrending Now: