கோவில்பட்டியில் கணவன் வெட்டி கொலை இரண்டாவது திருமணத்திற்கு முயற்சித்ததால் மனைவி ஆத்திரம்

23-01-2021 07:17 PM

கோவில்பட்டியில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால்  கணவனை வெட்டி கொலை செய்த மனைவி போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்த ஆதிலிங்கம் ராமலட்சுமி தம்பதி மகன் பிரபு (38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 2013 பிப்ரவரி 22ம் தேதி விளாத்திகுளம் கருப்பசாமி என்பவரது மகள் உமாமகேஷ்(30) என்பவருடன் திருமணமாகி ஆதிசிவன்(7), காவியாஸ்ரீ (4) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். பிரபு குடித்து விட்டு அடிக்கடி உமாமகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த பிரபு, மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதில்  ஆத்திரமடைந்த உமாமகேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக நேற்று அதிகாலையில் வெட்டியுள்ளார்.  

கழுத்து மற்றும் கையில்  படுகாயமடைந்த பிரபு வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடிவந்துள்ளார். ஆனால் வீட்டில் அருகில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உமாமகேஷ்  கோவில்பட்டி கிழக்கு போலீசில் சரணடைந்தார். இது குறித்து தகவலறிந்தவுடன்  போலீஸ் டி.எஸ்.பி., கலைகதிரவன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும் சம்பவ இடத்தை மாவட்ட மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜெயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

 கொலை செய்யப்பட்ட பிரபுவிற்கு வேறு பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தனது மனைவியிடம் மது போதையில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாமகேஷ் பிரபுவை வெட்டி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.Trending Now: