மதுரை வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

31-08-2016 02:26 AM

மதுரை,

மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ அன்னையின் திருவுருவ கொடியேற்றி, திருப்பலியினை தலைமையேற்று நடத்தினார்.

திருவிழாவை முன்னிட்டு, இன்று(30–ந்தேதி) பக்தசபையினர் தினமாகவும், நாளை (31–ந்தேதி) இளையோர் தினமாகவும், 1–ந்தேதி துறவியர் தினமாகவும், 2–ந்தேதி சுற்றுச்சூழல் தினமாகவும், 3–ந்தேதி தொழிலாளர் தினமாகவும், 4–ந்தேதி மறைக்கல்வி மாணவ, மாணவியர் தினமாகவும், 5–ந்தேதி ஒப்புரவு தினமாகவும், 6–ந்தேதி ஆசிரியர் தினமாகவும், 7–ந்தேதி தம்பதியர் தினமாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் இன்று முதல் வருகிற 7–ந்தேதி வரை மாலை 6.30 மணிக்கு சிறப்பு நவநாள் மறையுரையும், திருப்பலியும் நடைபெறுகிறது. 8–ந்தேதி அன்னையின் பெருவிழாவும், மாலை 6.30 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அன்னையின் திருவுருவ சப்பரபவனி, திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்படும். 9–ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி முடிந்ததும் கொடி இறக்கப்படும்.