லாரி மோதியதில் சாலையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து:35 பேர் காயம்

24-11-2020 09:16 PM

 பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் காயமடைந்தனர்.   கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து 35 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. 

இந்த பேருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கூரபாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, கோவையில் இருந்து சேலம் சென்ற லாரி ஒன்று பேருந்தை முந்தி சென்றதோடு, திடீரென இடதுபுறம் திரும்பியதால் பேருந்து லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து தலைகுப்புற கவிந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் சாய்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த 22 ஆண்கள்,13 பெண்கள் என 35 பேர் காயமடைந்தனர்.  

 காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 இதனிடையே காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  இந்த விபத்து குறித்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Now: